தாய்லாந்திற்கு சுற்றுலா விசாவில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பல கிறிஸ்தவ அகதிகள் குடிவரவுத் துறை சோதனைகளுக்கு அஞ்சி மறைந்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது. 2016ல் வெளியான World Watch Monitor என்ற அமைப்பின் கணக்கின் அடிப்படையில், 11,500 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்தில் தஞ்சம் கோரி இருக்கின்றனர்.
அத்தோடு இன்றைய சூழலில் 2000 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மோசமான சூழ்நிலையில் அடைந்து கிடக்கின்றனர். “அகதிகளை பாதுகாக்கும் ஐ.நா அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து கையெழுத்திடவில்லை என்பதை அறியாமல் பாகிஸ்தான் அகதிகள் இங்கு வந்திருக்கின்றனர்” என்கிறார் பாங்காக்கில் செயல்படும் பாதிரியார் மைக்கேல் கெல்லி.
கடந்த அக்டோபர் மாதம் சட்டவிரோத குடியேறிகளை குறிவைத்து தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய தேடுதலில், 200 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீண்டும் பாகிஸ்தானுக்கே நாடு கடத்தப்படக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதமாக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மத வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்ந்து வருகின்றது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ மக்களை குறிவைத்து பல குண்டுவெடிப்பு சம்பவங்களும் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.