வட மாகாணத்தின் சில பகுதிகளில் பதிவாகிய அதிகூடிய மழை வீழ்ச்சியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் சுமார் 5775 இருக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 1347 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனந்தபுரம், இரத்தினபுரம், பொன்னகர், வட்டக்கச்சி – மாயவனூர்,சிவநகர், பன்னங்கண்டி, முரசுமோட்டை, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகண்டி இந்து வித்தியாலயம், செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2542 குடும்பங்களைச் சேர்ந்த 8369 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 22 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வசந்தபுரம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு, மன்னா கண்டல், பண்டாரவன்னியன், கற்சிலைமடு, முத்தையன்கட்டு ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு-ஓட்டுசுட்டான் பிரதான வீதியூடாக போக்குவரத்து இன்று காலை தடைப்பட்டிருத்தத்துடன், பின்னர் வழமைக்கு திரும்பியது. இதேவேளை யாழ் மாவட்டத்தின் – வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீரற்ற வானிலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.