புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கர்நாடகாவில் இருந்து சுவிஸ்வரை… ஆண்களுக்கு தாலி கட்டல்… புரட்சியா? பிறழ்வா?

கர்நாடகாவில் இருந்து சுவிஸ்வரை… ஆண்களுக்கு தாலி கட்டல்… புரட்சியா? பிறழ்வா?

5 minutes read

கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்

கர்நாடகாவில் மனமனுக்கு திருமாங்கல்யம் கட்டியப் மணப்பெண்படத்தின் காப்புரிமைBARAGUNDI FAMILY – நன்றி பிபிசி

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வினை அசாதாரணமான ஒன்றாக மக்கள் பார்க்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், தங்கள் குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல என்கிறார் கர்நாடக அரசு அதிகாரியான அஷோக் பரகுன்டி. “இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன” என்று பிபிசி இந்தியிடம் பேசிய அஷோக் தெரிவித்தார்.

திருமணத்தில் என்ன நடந்தது?

மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா சிலைக்கு அருகில் இருந்த திருமண மேடையில், இரண்டு மணமகன்கள் மற்றும் மனமகள்கள் அமர்ந்திருந்தனர். அந்த சிலைக்கு அருகில், இல்கல் ஸ்ரீ மஹந்தேஷ்வரா சம்ஸ்தானா மடத்தின் குருமஹந்த் சுவாமிஜி அமர்ந்திருந்தார்.

இரண்டு மணமகன்கள் கைகளிலும் இரண்டு விவாக முத்ராக்கள் (ருத்ராட்சத்தினால் செய்யப்பட்டது) கொடுக்கப்பட்டன. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் கட்டப்படும் தாலிக்கு சமமானது. மணமகன்கள் அவற்றை அவர்களுக்கான மணப்பெண்கள் கழுத்தில் கட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து. மணமகள்கள் கையிலும் விவாக முத்ராக்கள் கொடுக்கப்பட்டன. அதை அவர்கள் மணமகன்கள் கழுத்தில் கட்டினார்கள்.

கர்நாடகாவில் மனமனுக்கு திருமாங்கல்யம் கட்டியப் மணப்பெண்படத்தின் காப்புரிமைBARAGUNDI FAMILY – நன்றி பிபிசி

பின்னர் மலர் மாலை மாற்றிக் கொண்ட இத்தம்பதியினர், சுவாமிஜியுடன் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுவாமிஜி சொல்ல சொல்ல, அதனை இந்த தம்பதியினரும் திருப்பி சொன்னார்கள்.

“இந்த திருமணம் திருமணத்துக்கான உறவு மட்டும் கிடையாது. இது இதயங்களின் அன்பும் ஆன்மீக புரிதலும். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒன்றுபட்டு வாழ்வோம். சமுதாயத்திற்கு நாம் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டு சேர்ப்போம். மேலும், தர்மம், தேசியம், சுற்றுச்சூழல் மற்றும் குடும்பத்தில் அமைதி குறித்து உணர்வுடன் இருப்போம். பொறாமை, மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை மற்றும் சூனியம் ஆகியவற்றில் இருந்து தள்ளியிருப்போம்.  மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படாமல் வாழ்வோம். பேராசை, தவறான நடத்தை, தீய பழக்கங்கள் போன்றவற்றை விடுத்து, நல்ல வழியை தேர்ந்தெடுப்போம். பசவா மற்றும் பிற மத குருக்களின் போதனைகள் படி, அறிவு, சடங்குகள், அனுபவங்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ்வோம். தரம்குரு பசவன்னாவுடன் மொத்த ஷரனா சமூகத்திற்கும் முன்பாக நாம் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்வோம்.

ஜெய் குரு பசவன்னா ஷரணு ஷர்னதி”

இந்த உறுதிமொழியை தொடர்ந்து, சாதாரண வழக்கம் போல அட்சதையை தூவாமல், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தம்பதிகள் மீது மலர்களை தூவி ஆசிர்வதிக்கின்றனர்.

அதோடு, திருமண விழா முடிகிறது. மணமக்கள் தீயை சுற்றிவரும் நிகழ்வெல்லாம் இல்லை. மேலும், இத்திருமணம் நடக்க நல்ல நேரம் என்றும் ஏதுமில்லை.

பரகுன்டி மற்றும் டுடாகி குடும்பத்தினரின் இந்த வழக்கம், பசவன்னாவை பின்பற்றும் பெரும்பாலான பாரம்பரிய லிங்காயத் மக்களுக்கு புதிதல்ல.

மும்பை – கர்நாடகா மற்றும் ஹைதராபாத் – கர்நாடகா போன்ற பகுதிகளில் இந்த வழக்கத்தினை லிங்காயத் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர். இல்கல் மடத்தின் மறைந்த மஹாந்த் சுவாமிகள் சித்தரகியை பின்பற்றுபவர்கள் இதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

“அவர் வரதட்சணையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததோடு, 12ஆம் நூற்றாண்டில் பசவன்னாவின் போதனைகளையும் பின்பற்றினார். பெண்களை தானமாக கொடுப்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. அதனால், திருமணத்தில் கன்னியாதானம் என்ற சடங்கு இருக்காது. அவ்வாறு பெண்களை தானமாக கொடுத்தால், அவர் மனிதர் என்ற மரியாதையை இழந்துவிடுகிறார். இதனால், ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சூழல் உருவாகிறது” என்கிறார் குருமஹன்ந் சுவாமிஜி.

“இந்த வழக்கத்தை கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக பின்பற்றுகிறோம். என் உறவினர்கள் அவ்வாறுதான் திருமணம் செய்து கொண்டார்கள். என் மகள் பூஜாவும் அப்படித்தான்” என்று அஷோக் தெரிவித்தார்.

கர்நாடகாவில் மனமனுக்கு திருமாங்கல்யம் கட்டியப் மணப்பெண்படத்தின் காப்புரிமைBARAGUNDI FAMILY – நன்றி பிபிசி

மற்ற சமூகங்களில் பெண்கள் எப்போதும் திருமாங்கல்யம் அணிவது போல, அமித் மரகுன்டி எப்போதும் இந்த விவாக முத்ராவை அணிவாரா?

“ஆம். நான் அணிந்து கொள்வேன். ஆண் பெண் இருவரும் சமம் என்று இந்த வழக்கம் காண்பிக்கிறது. இந்த விவாக முத்ராவை அணிந்திருப்பதால் ஆண்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. எல்லாம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள புரிதல்தான்” என்று ஆஸ்திரேலியாவில் மென்பொருள் பொறியாளராக உள்ள அமித் பரகுன்டி தெரிவிக்கிறார்.

அமித் மற்றும் பிரியா ஆகியோர் வெவ்வேறு சாதியினர் என்றாலும், அவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைத்தது.

“இது ஒரு சிறந்த அனுபவம். என் கணவரின் பெற்றோர், ஆண் – பெண் இருவரும் சமம்தான் என்று நிரூபித்திருக்கிறார்கள். முதலில் பெண்கள் விவாக முத்ராவை ஆண்களுக்கு கட்ட வேண்டும் என்ற வழக்கம் வியப்பாக இருந்தது” என்று பரியா கூறுகிறார்.

அமித் எப்போதும் விவாக முத்ராவை அணிந்து கொள்வார் என்பதை எப்படி உறுதி செய்யப்போகிறார் பிரியா? “அமித் எப்போதும் அணிந்து கொள்வார். எனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்” என்றார் பிரியா.

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஈழத்தமிழ் பெண்: 

திருமணம் என்றால் மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை செய்துள்ளது ஜோடியொன்று.
வழக்கங்களையும், பழைய மரபுகளையும் மீறி சில புரட்சிகரமான செயற்பாடுகள் நடப்பது வழக்கம்தான். ஆனால், இம்முறை நடந்துள்ளது, சுத்த பைத்தியக்காரத்தனம் என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டுவது ஈழத்தமிழ் ஜோடியொன்று.
சுவிஸ் நாட்டில் இந்த திருமணம் நடந்துள்ளது. மணமகனிற்கு தாலி கட்டிய மணமகள், அந்த தாலியை முத்தமிட்டு வேறு கலகலப்பை மூட்டினார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு கர்நாடகாவில் இவ்வாறு ஒரு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது சுவிஸிலும் நடைபெற்றுள்ளது. இது பண்பாடா? பிறழ்வா? புரட்சியா என்று பல்வேறு விவாதங்களை இந்த திருமணங்கள் ஏற்படுத்தியுள்ளன.
தொகுப்பு- வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More