கோட்டாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
குறித்த மனு மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக சமர்பணங்களை நாளை 1.30 மணிக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணைகளின்போது கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களும் குடிவரவு திணைக்களத்திடம் இல்லை என்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை இன்று!
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோட்டா பெற்றுக் கொண்டது சட்டவிரோதமானது எனவே அவை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணை இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. அத்துடன், குறித்த வழக்குடன் தொடர்புடைய சட்டவாளர்களை வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த மனுவை விசாரிக்கும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவில் யசந்த கோத்தாகொட, அர்ஜூன ஒபேசேகர, மகிந்த சமயவர்த்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.