துருக்கி படையினரை எதிர்கொள்ள மனிதகேடயங்களாக மாறுகின்றனர்
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் இனத்தவர்களின் பகுதிகளை இலக்குவைத்து பாரிய இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக துருக்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து துருக்கி படையினரை எதிர்கொள்வதற்காக எல்லைப்பகுதிகளில் பாரிய மனிதகேடய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிரிய படையினரின் நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள நகரங்களை நோக்கி வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர். துருக்கி படையினரின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக அவர்கள் மனிதகேடயங்களாக மாற விரும்புகின்றனர் என கியுமிசிலி நகரத்தில் உள்ள செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐநா அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் என அனைவரும் துருக்கியின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி இந்த பகுதியில் காலடி எடுத்துவைத்தால் பாரிய படுகொலைகள் இடம்பெறும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். துருக்கியின் தாக்குதலிற்கு வழிவிட்டு விலகி நிற்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் வயதுவேறுபாடின்றி எல்லைகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா விலகிநிற்பதன் காரணமாக, துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன.
ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்கா தனது படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவுசெய்துள்ளதை முதுகில் குத்தும் நடவடிக்கை என வர்ணித்துள்ளது.
எனினும் எங்கள் மண்ணை எப்பாடுபட்டாவது பாதுகாப்போம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2015 இல் உருவாக்கப்பட்ட சிரிய ஜனநாயக படையணி ரொஜாவா பிராந்தியத்தில் சிரியாவின் வடக்கு எல்லையை அண்மித்த பகுதிகளில் சுயாட்;சி பிராந்தியத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சிரிய ஜனநாயக படையணியில் பெருமளவிற்கு குர்திஸ் வைஜேபி போராளிகளே இடம்பெற்றுள்ளனர். சிரிய ஜனநாயக படையணி தற்போது 480 கிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.