ஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி, அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லை.
நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள் யாரை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா ஸ்தாபிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆதரவளிப்பதற்கு முன்வந்திருக்கும் நிலையில், அதனை அறிவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றபோதே அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
வென்றெடுத்த ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் எனக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளமையைக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நாட்டை அபிவிருத்திப்படியில் முன்நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கக்கூடிய ஊடகங்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. மக்களுக்கு உண்மையானதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தகவல்களை வழங்கும் பொறுப்பு ஊடகங்களிடமுள்ளது.
ஜனநாயகத்தை விரும்பும் அரசசேவையாளன் என்ற வகையில் ஊடகத்துறைக்கு வழங்கப்பட வேண்டிய சுதந்திரம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன். எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த போதே ஊடகங்களுடனும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அந்தவகையில் எனது இதுவரைகால அரசியல் பயணத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது வன்முறைகளைப் பிரயோகிக்கும் விதமாகவோ செயற்பட்டதில்லை. என்மீது ஊடகங்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களைக்கூட ‘அவை வரவேற்கத்தக்கவையே’ என்ற மனநிலையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் ஊடக சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். ஊடகங்கள் பின்பற்றவேண்டிய சட்டதிட்டங்கள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தும் போர்வையில் ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யமாட்டேன். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் ஊடகங்கள் தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து ஜனநாயகத்திற்கு ஏதுவான வகையில் நியாயமாகவும், பக்கச்சார்பின்றியும் செயற்பட வேண்டும்.
மேலும் நான் ஆட்சியமைத்த பின்னர் சர்வதேச தரநியமங்களுக்கு அமைவான ஊடகப் பயிற்சி நிலையமொன்றை அமைத்து அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். அதன்மூலமாக தேசிய, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இடையிலான ஊடாட்டத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சரியான முறையில் தகவல்களை வழங்கமுடியும்.
அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்திருப்பதுடன், ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கான குடியிருப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ‘ஊடகவியலாளர் கிராமம்’ ஒன்றை நிர்மாணிக்கவிருக்கிறேன்.
இந்நிலையில் தற்போது ஊடகவியலாளர்களின் கைகளில் முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி, அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லலை என்றார்.