குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மகாத்மா காந்தியின் நினைவிடத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது ஃபேஸ்புக் பதிவில் தம்மைத் தாமே ‘ராம பக்தன்’ என்று அழைத்துக்கொண்டுள்ளார்.
இடது கையில் சுடப்பட்ட ஷதாப் ஃபரூக் எனும் மாணவருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் இன்று காலை தனிமையில் அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படத்தை பதிவிட்டுள்ள கோபால், “ஷாஹீன் பாக்ககில் சிஏஏ-வை ஆதரித்து ஒருவர் தனிமையில் அமர்ந்துள்ளார். இவரது துணிவை பாராட்ட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். நாடு முழுதும் பல இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டபின்னும் அங்கு இன்னும் போராட்டம் தொடர்கிறது.
மதியம் 12:53 மணியளவில் ஃபேஸ்புக் நேரலை ஒளிபரப்பிய கோபால், மாணவர் கூட்டத்தைக் காட்டினார்.
‘ஆசாதி’ (சுதந்திரம்) என்று கோஷமிட்டு வந்த மாணவர்களை நோக்கி ‘நான் சுதந்திரம் தருகிறேன்’ என்று கூறினார்.
“இங்குள்ள ஒரே இந்து நான்தான். என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்,” என்று கூறியுள்ளார்.
கோபாலின் பின்னணி:
டெல்லி போலீஸ் அளித்த தகவலின்படி கோபால் நொய்டாவில் உள்ள ஜேவார் பகுதியைச் சேர்ந்தவர்.
‘ராம பக்தன் கோபால்’ என்று பொருள்படும் ‘ராம்பக்த் கோபால்’ என்பதை தனது ஃபேஸ்புக் கணக்கின் பெயராக வைத்துள்ளார் இவர்.
ஃபேஸ்புக்கின் ‘பயோ’ பகுதியில் தன்னை பஜ்ரங் தள் இந்து அமைப்பின் உறுப்பினர் என்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பரிவார அமைப்பு.
எனினும் ஜனவரி 28 அன்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தாம் அனைத்து அமைப்புகளில் இருந்தும் விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 அன்று தனது ஃபேஸ்புக் பதிவில் உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில். இரு சக்கர வாகனத்தில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தபோது சந்தன் குப்தா என்பவர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
ஜனவரி 29 அன்று ”முதல் பழி உங்களுடையதாக இருக்கும் சகோதரர் சந்தன்,” என்று பதிவிட்டுள்ளார்.