வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு வாரத்தில் 4, 5 முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் மற்றும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கி வருகின்றனர். ஆனாலும் பல மாநிலங்களில் இத்திட்டம் முறையாகச் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தை தனியாரிடம் கொடுக்கும் முடிவை கடந்த வாரம் ஆளும் அ.தி.மு.க அரசு மேற்கொண்டதும், அதுவும் ஒரு இந்துத்வ அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் (அக்ஷ்ய பாத்ரா ) என்ற இந்துத்துவ அமைப்பிடம் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒப்படைத்து விட்டது. இந்த இஸ்கான் அமைப்பு, ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற சத்துணவில், வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரைக் கொடுத்தது. அதனால் மாணவர்கள் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
தமிழ்நாட்டில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. அக்ஷ்ய பாத்ரா அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். அதனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முட்டை தடுக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரையே தமிழக மாணவர்களுக்கு இந்த அமைப்பு வழங்கும் என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கேரள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கூடுதலாக சத்துமிக்க உணவுகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒருநாள் தேங்காய் சாதம், அடுத்தநாள் சாதம், பழங்கள், பச்சைக்காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதைப்போன்று வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் பால் பாயாசம் மற்றும் கோழி கறி போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனாலும், அரசின் இந்த புதிய சத்துணவுத் திட்டத்திற்கு இந்துத்வா கும்பல்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.