புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழரின் தொல்லியல் அடையாளங்களை அழிக்க முயற்சி: நிஷாந்தன் குற்றச்சாட்டு

தமிழரின் தொல்லியல் அடையாளங்களை அழிக்க முயற்சி: நிஷாந்தன் குற்றச்சாட்டு

5 minutes read

கிழக்கு மாகாண தொல்லியல்  சார்ந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்கு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்படும் என்ற ஜனாதிபதி கோட்டாபாய  ராஜபக்ச அவர்களின் அறிவிப்பு தொடர்பாக கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும்  வெளிப்படுத்துகின்றது தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.

தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் எமது தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் கடந்த 10 ஆண்டுகளாக  இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைகள், தொன்மைச்சான்றுகளை அழித்து பௌத்தமயமாக்கலை துரியமாக செய்து வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்சமயம்  இலங்கை ஜனாதிபதி அவர்களின் இந்த அறிவிப்பானது ஒரு சில விடயங்களை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. தமிழர்களின் பூர்விக பகுதிகளை இனம் கண்டு அங்கிருக்கும் எமது வரலாற்று தொல்லியல் ஆதாரங்களை அழித்து அவ்விடத்தை பௌத்த மயப்படுத்தி எம்  நிலத்தை சூறையாடுவது.

அடுத்து கிழக்கில் தொல்லியல் சார்ந்த இடங்களை இனம் கண்டு அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னாள்  இராணுவ அதிகாரியாக இருந்த ஒருவரை நியமித்து அவர் தலைமையில்  ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்தல் என்பது  மீண்டும் தமிழ் மக்களை அடக்கி,ஒடுக்கி எமது தாயகப் பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தை அல்லது இராணுவ ஆட்சியை திரைமறைவில் ஏற்படுத்தும் ஒரு பாரிய திட்டமாகவே கருதமுடிகின்றது.

இத் திட்டத்தின் பின்னணியில் தமிழ்,  முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடும் போக்கான சிங்கள பௌத்த இனவாதக் குழுக்கள் செயற்படுகின்றார்கள் என்பதும் அவர்கள் தற்பொழுது நாட்டின் ஜனாதிபதியை முன்னிறுத்தி தங்களது இனவாத வேலைகளை வேகமாக கொண்டு செல்ல முற்படுகின்றார்கள் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கருதுகின்றது.

மேலும் கடந்த காலப்பகுதியில் தமிழர் பகுதிகளில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எவ்வளவு தூரம்ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்ற ஒரு தரவு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் திரட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்களையும், அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த பகுதிகளாகவும் அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள் இவை அனைத்தும் தமிழர்களின் பூர்விக பகுதிகளே.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னவன்  மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட இப்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இங்கு இருந்த பிள்ளையார் கோயில் தகர்க்கப்பட்டு தற்பொழுது கோவிலின் அத்திவாரம் மட்டும் தான் இன்று உள்ளது.

இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்விக தமிழ் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டின (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தை புனரமைக்க புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் கூறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலை போட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பூர்விக தமிழ் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவை பகுதியில் பல இடங்களை தொல்லியல் திணைக்களமும் புத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்.

மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில றுகுணு அரசுக்கு சொந்தமான பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பகுதியில் பௌத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமிமலை அடிவாரத்தை புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த மதத்திற்கு உரிய இடம் என அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு, மாதவணை பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது.

கடந்த ஒரு சில வருடங்களில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து 7 விகாரைகளை அமைத்து இருக்கிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்விக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும், விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன .

இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்

கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்கு சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது.

இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதிகள் தொல்லியல் திணைக்களம் மூலம் பௌத்த மத அடையாளங்களை திணிப்பதும் அதன் மூலமாக சிங்கள ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் என கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கையாண்டு வரும் மோசமான தந்திரோபயமாக  இருக்கின்றது.

அந்த வகையில் இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச அவர்கள்  பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டலில் இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி பௌத்த மதத்திற்கு சொந்தமான தொல்லியல் பகுதிகள் என பூர்விக தமிழ் கிராமங்களில் இருந்து  தமிழ் குடும்பங்களை வெளியேற்றி கிழக்கு மாகாணத்தை பௌத்த மயமாக்கி , சிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சிக்கும் இந்த நடவடிக்கை உடனும் நிறுத்தப்பட வேண்டும்.

இதனை நிறுத்துவதனுடாகத்தான் எமது நாட்டில் உள்ள மூவின மக்களுக்குமான சமமான அந்தஸ்துக்களும், சுய நிர்ணய உரிமைகளும், அவர்களது தனித்துவமான அடையாளங்களும் பாதுகாக்கப்படும் அப்பொழுதுதான் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

ஆகவே கிழக்கு தொல்லியல் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் அறிவிப்பின் மீது கடுமையான அதிருப்தியையும், தமிழர்களின் பூர்விகப் பகுதிகள் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பேரினவாத பௌத்த செயற்பாடுகளை தொடராமல் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்துகின்றது.

எஸ்.நிஷாந்தன்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More