உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோவும் முதலிடம் பிடித்துள்ளன.
சர்வதேச அளவில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 3,500 பேர் மரணித்ததால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்து 500 பேருக்கு புதிதாக கொல்லுயிரித் தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 37 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 285 ஆக பதிவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் 30 ஆயிரம் பேரும், இந்தியாவில் 19 ஆயிரம் பேரும் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோவில் 600 பேரும், பிரேசிலில் 555 பேரும், இந்தியாவில் 384 பேரும், அமெரிக்காவில் 285 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா, பெரு, ஈரான் மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான மக்கள் கொரோனாவின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.