கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட 375 பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 253 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரையில் மொத்தமாகத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2437 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய இவர் மேலும் தெரிவிக்கையில்,
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட 375 பேரின் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அதில் 253 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் கந்தகாடு தனிமைபடுத்தல் நிலையம் உள்ளடங்களாக 1150 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்க நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் வெகுவாக அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு குறித்த காலப்பகுதியில் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு செயற்திட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிச் சென்றவர்கள் மற்றும் அங்கிருப்பவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இதனூடாக கொரோனா வைரஸ் சமூகப்பரவல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் முகாமுக்கு கடந்த சில மாதங்களில் சென்றவர்கள் மற்றும் தற்போது அடையாளங்காணப்பட்ட தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தோடு புனர்வாழ்வளிக்கும் முகாமில் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென கந்தக்காட்டிலுள்ள தனிமைப்படுத்தல் முகாம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டு தொற்றுக்குள்ளானவர்களுக்க அங்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பீதிஅடைய செய்யவேண்டாம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வினயமாக கேட்டுக்கொண்டுள்ளார். எப்போதும் போன்று கொரோனா தொற்று தொடர்பில் நிலவும் உண்மை நிலவரங்களை தாம் நாட்டிற்கு அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை நாட்டில் ஒரே நாளில் அதி கூடிய தொற்றாளர்களாக 283 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2437 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1980 ஆகவும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 446 ஆகவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 11 ஆகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.