தெற்கில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்தச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கம்பஹா – கந்தானை பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கந்தானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
தனது ஓட்டோவில் வீடு திரும்பிய குறித்த குடும்பஸ்தர் வீட்டு வாசலில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், ஓட்டோ சாரதியைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஓட்டோ சாரதியின் சடலம், கந்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, வாழைத்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய குறித்த இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.