நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருந்தும் குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றாது உதாசீனம் செய்திருக்கின்றார் என முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளையை மீறி தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் கட்டளையே நேற்று (ஓகஸ்ட் 31) முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருபவை வருமாறு:-
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி குருந்தூர்மலையில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்குக் கலசம் ஒன்றை நிறுவுவதற்கும், ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள குருந்தூர்மலைக்குச் சென்றபோது அங்கு பௌத்தக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பில் அப்பகுதி மக்களால் அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் குருந்தூர்மலை தொடர்பான வழக்கிலக்கம் AR/673/18 இல் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து, குருந்தூர்மலையில் எந்தத் தரப்புக்களும் கட்டுமானங்கள் எவற்றினையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த பிற்பாடும் அங்கு தொடர்ந்தும் பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாக நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். அத்தோடு அவ்வாறு குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.
அதற்கமைய இந்த வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று, குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலைமாதம் 19ஆம் திகதி, குறித்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கின் மீது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகை தந்த சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்ற முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருப்பதானது, இனங்களுக்கிடையில் சமாதானக்குலைவை ஏற்படுத்துமென சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகை தந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளின் கருத்துக்களைச் செவிமடுத்த நீதிவான், அன்றைய தினமே உடனடியாக குருந்தூர்மலைக்குக் கள விஜயமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்தார்.
அதனடிப்படையில் குருந்தூர்மலைக்குக் கள விஜயம் மேற்கொண்ட நீதிவான் அங்குள்ள நிலமைகள் குறித்து ஆய்வு செய்து, குறிப்புக்களை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் கட்டளை வழங்கிய நீதிவான், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதெனவும் கடந்த 2022ஆம்ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று கட்டளை பிறப்பித்திருந்தார். எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர்மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அந்த விஜயத்தின்போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023 அன்றைய தினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை அதனைத் தொடர்ந்து 02.03.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு கடந்த ஜூலை மாதம் 04 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா மீண்டும் குருந்தூர்மலைக்குக் கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அந்தக் கள விஜயத்தின்போது குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிவானாக் ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பிலான பதில் அறிக்கைகளை நீதிமன்றின் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது. முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பிலான தமது விளங்கங்களை நீதிமன்றத்துக்கு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்துத் தரப்புக்களினதும் விளங்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து நீதிமன்றம் வழக்கின் கட்டளை வழங்குவதற்காக ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தது.
அதன்படி கட்டளையை வழங்குவதற்காக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் குருந்தூர்மலைக்கு மேற்கொண்ட கள விஜயம் மற்றும் கடந்த ஜூலை மாதம் 04ஆம் திகதி நீதிவானால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயம் என்பவற்றை கருத்தில்கொண்டு இந்த வழக்குக்கான கட்டளை வழங்கப்பட்டது. அந்தக் கட்டளையில் ஏற்கனவே நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டிருக்கின்றன என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்தோடு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு விரோதமாகக் குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி கள விஜயத்தின்போது நீதிமன்றம் அவதானித்த கல்லொன்று அங்கு இருக்கவில்லை எனவும், அதேவேளை அங்கு புதிதாகப் பெயர்ப்பலகை ஒன்று அவதானிக்கப்பட்டது எனவும், அதனைப்போல் இன்னும் பல விடயங்களையும் இரண்டாவது கள விஜயத்தின்போது அவதானிக்க முடிந்தது எனவும் நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த குருந்தூர்மலைப் பிரதேசத்தில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு இருக்கின்றது எனவும், எனினும் நீதிமன்றத்தால் இதற்கு முன் வழங்கப்பட்ட கட்டளைகள் குறித்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றவில்லை எனவும், நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் நீதிமன்றம் தனது தற்போதைய கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.