Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் R J பவித்ரா | வானொலி அறிவிப்பாளர் | வெற்றி வானொலி : லண்டன்R J பவித்ரா | வானொலி அறிவிப்பாளர் | வெற்றி வானொலி : லண்டன்

R J பவித்ரா | வானொலி அறிவிப்பாளர் | வெற்றி வானொலி : லண்டன்R J பவித்ரா | வானொலி அறிவிப்பாளர் | வெற்றி வானொலி : லண்டன்

5 minutes read

 

வானொலி அறிவிப்பாளர்கள் என்றாலே எம் எல்லோருக்கும் பிடிக்கும்! அதிலும் நல்ல குரல் வளமும், நேயர்களோடு நன்கு நெருங்கிப் பழகும் தன்மையும் இருந்தால், இன்னும் அதிகம் பேருக்குப் பிடிக்கும்! அப்படிப்பட்ட ஒரு வானொலி அறிவிப்பாளர்தான் பவித்ரா. வெற்றி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர். இவர் நிகழ்ச்சிக்கு வந்தால், வானொலியை நேயர்கள் மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்தளவுக்கு கலகலப்பாக பேசுவார் பவித்ரா. அதிலும் சில மூத்த பெண் நேயர்கள், இவரை தங்கள் மகளாக பாவித்து உரையாடும் விதம், அவர் எந்தளவுக்கு அவர்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு..! எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் முழு ஈடுபாடுகாட்டி, சிறப்பாக செய்து முடிப்பார் பவித்ரா.

அண்மையில் இவர் ஓர் சாதனையை நிகழ்த்தினார். அதாவது கடந்த 11.12.13 அன்று, அன்றைய நாள் ஒரு விஷேட நாள் என்பதால், அன்று காலை 7 மணி தொடக்கம் மறுநாள் காலை 7 மணிவரை தொடர்ச்சியாக 24 மணிநேரம் நிகழ்ச்சிகள் செய்து சாதனை படைத்தார். அன்று அவர்மட்டுமல்ல, அவரின் அபிமான நேயர்கள் கூட உறங்கவில்லை. தொடர்ச்சியாக, மறுநாள் காலை அவர் விடைபெறும் வரை, அவர்கூடவே இருந்தார்கள் பல நேயர்கள். வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் என்று நேயர்கள் தங்கள் அன்பினைச் சொரிய, நெகிழ்ந்து போய்விட்டார் வெற்றிவானொலி அறிவிப்பாளர் பவித்ரா.

 

vettri logo

எப்படி உங்களால் இந்த சாதனையை செய்ய முடிந்தது?” என்ற கேள்வியோடு பேட்டியினை ஆரம்பித்தோம்.

“நான் லண்டனில் பல்கலைக்கழகத்தில் Investment Banking and Risk Management படித்திருக்க்கிறேன். அதனால் ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்றது” என்று சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்த பவித்ரா, சில விநாடிகளில் சீரியஸ் ஆகிறார்.

“அப்படியில்லை! எல்லாமே நேயர்களின் அன்பும் ஒத்துழைப்பும் தான். 24 மணிநேரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்தல் வெளியான நாளில் இருந்து நேயர்கள் தொடர்ச்சியாக வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். முழுக்க முழுக்க அவர்களின் அன்பினால்தான் இது சாத்தியமானது.”

 

இதன் தொடர்ச்சியாக 90 மணித்தியாலங்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்போவதாக செய்திகள் வந்தன. உண்மையா?”

“அப்படியா? அதற்குள் சொல்லிவிட்டார்களா? ம்ம் உண்மைதான்! அப்படி ஒரு திட்டம் இருக்கிறது. காரணம் நாம் ஈடுபடும் துறையில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று சிறியவயதிலேயே நினைப்பேன். என் துறை வானொலி என்பதால், அந்த சாதனையை கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும் என்றிருக்கிறேன். இருப்பினும் எனது தந்தையார் அவர்கள், இந்த முயற்சியினை அடுத்தவருடம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் எனது 90 மணித்தியால முயற்சி அடுத்தவருடம் நிகழும்”

 

அப்படியே உங்கள் பாடசாலைக்காலங்கள் பற்றி சொல்லுங்கள்?

“நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்துக்கல்லூரியில் படித்தேன். 2002 ம் ஆண்டு குடும்பத்தினரோடு லண்டன் வந்தேன். இங்கு பல்கலைக்கழகத்தில் படித்தேன்.

pavi drawings-s

வானொலித்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

“2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் எதேச்சையாக ஐ பி சி கலையகத்துச் சென்றிருந்தேன். அப்போது ஐ பி சி யின் மேலாளர் ‘உங்களால் ஆங்கில செய்திகள் வாசிக்க முடியுமா?’ என்று கேட்டார். நானும் முடியும் என்றேன். அன்றிலிருந்து ஐ பி சி யில் ஆங்கில செய்திகள் வாசிக்க ஆரம்பித்தேன். பின்னர் குறுகிய காலத்திலேயே தமிழ் நிகழ்ச்சிகளும் செய்வதற்கான வாய்ப்பும் கிட்டியது. அதே ஆண்டு ஜனவரி 29 ம் திகதி முதல் முறையாக தமிழ் நிகழ்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

 

உங்களில் முதல் தமிழ் நிகழ்ச்சி என்ன? அன்றைய நாள் எப்படி இருந்தது?”

“அன்று மாலை 5 – 6 வரை ஒலிபரப்பான அந்திவரும் நேரம் நிகழ்ச்சியே என்னுடைய முதல் நிகழ்ச்சி. சக அறிவிப்பாளர் ஜே ஜே அவர்களுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியினை செய்திருந்தேன். நிகழ்ச்சியில் நிறைய மிஸ்டேக்குகள் விட்டேன். இருப்பினும் ஜே ஜே அவர்கள் நிறைய ஊக்கம் தந்தார். என்னால் சிறப்பாக நிகழ்ச்சி செய்யமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினார். எனது வானொலி குரு அவர்தான். அவரால் தான் இந்தளவுக்கு வளர முடிந்தது.

 

ஐ பி சி வானொலியில் எப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினீர்கள்?”

கிட்டத்தட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஈஸ்வரதாஸ், எம்.பி.ஆரோக்யநாதன், ஜேஜே, யோகதினேஷ், ஷங்கர், யாத்ரா, சதீஷ், எஸ்.கே.குணா, நந்தன், சுதர்சன்,ராகேஷ்,  கீரவாணி, ஈழமாறன், ஷோபனா, ஷோபா, வேணு, டெய்சி என அனைத்து அறிவிப்பாளர்களுடனும் இணைந்து நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். வானொலி அறிவிப்பு குறித்த பல விஷயங்களை ஐ பி சி யில்தான் கற்றுக்கொண்டேன்”

 

வெற்றி வானொலியில் பணியாற்றும் அனுபவம் எப்படி இருக்கிறது?”

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த மேமாதம் வெற்றி வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்தோம். எம்முடன் ஏராளமான நேயர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வானொலி சிறப்பாக இயங்குகிறது. முக்கியமாக வானொலி குறித்து இதுவரை எங்குமே நாம் விளம்பரம் செய்யவில்லை. இருப்பினும் எப்படியோ நேயர்கள் அறிந்து கொண்டு, வெற்றி வானொலி கேட்கிறார்கள். அத்துடன் முகநூலில் ஏராளமான நேயர்கள் எமது வானொலி பற்றி, ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்லி, எம்மோடு இணைய வைத்தார்கள்.

 

வெற்றி வானொலி சிறப்பாக நடப்பதற்கு, உங்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

வானொலி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 7 மாதங்களாக என்னுடைய முழு உழைப்பையும் வானொலிக்காகவே அர்ப்பணித்துள்ளேன். இனியும் அப்படித்தான் உழைப்பேன். அத்துடன் பல புதிய அறிவிப்பாளர்களை இணைத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து நிகழ்ச்சிகளை மேலும் மெருகூட்டவும் திட்டமிட்டிருக்கிறோம். குறிப்பாக இங்குள்ள இளையவர்களை வானொலிக்குள் உள்வாங்கி அவர்களுக்காகவும் பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளோம்.

ff

நேயர்களோடு எப்படி இவ்வளவு அந்நியோன்யமாக பழகுகிறீர்கள்?”

அறிவிப்பாளர் பயிற்சி எடுக்கும் போது, நேயர்களோடு அதிகம் நெருங்கி பழக கூடாது என்றும், நேயர்களை நேயர்களாகவே பார்க்கவேண்டும் என்றும் ஒரு இடைவெளியை மெயிண்டெயின் பண்ண வேண்டும் என்று எமக்குச் சொல்லித்தரப்படுகிறது. ஆனால் என்னால் இந்தக் கருத்தினை ஏற்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நேயர்களுக்காகத்தான் வானொலி நடத்தப்படுகிறது. அதனால் தான் நான் எல்லோருடனும் அன்பாக பழகுகிறேன். ஒரு நேயர் தொலைபேசியில் வரும் போது, அவரின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே அவரின் பெயரைக் கூறிவிடுவது எனக்குப் பிடிக்கும். அப்படி நாம் சொல்லும் போது, அது நேயர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். என்னை ஒரு தங்கையாக, சகோதரியாக, மகளாகவே நேயர்கள் பார்க்கிறார்கள். இது எனக்கும் மிகவும் பிடித்துள்ளது.

இப்படியான பல சுவாரசியமான விஷயங்களை எம்மோடு பகிர்ந்து கொண்ட பவித்ரா அவர்கள் ஒரு நல்ல ஓவியராகவும் இருக்கிறார். வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஓவியங்கள் வரைவது, பாடல்கள் பாடுவது அவருக்கு மிகவும் பிடிக்குமாம்! “உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?” என்று நாம் கேட்டபோதெல்லாம் அவர் வானொலி பற்றியே பேசுகிறார். அந்தளவுக்கு தான் பணிபுரியும் வானொலி மீது அளவு கடந்த பற்று வைத்திருக்கிறார்.

அறிவிப்பாளர் பவித்ரா அவர்களின் முயற்சிகள், சாதனைகள் தொடர வாழ்த்துகிறோம்.

 

– நன்றி | இலங்கை கலைஞன் இணையம் –

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More