Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் A Gun And A Ring திரைப்பட லண்டன் பிரிமியர் காட்சிக்கு அதிகளவு மக்கள் திரண்டு வருவார்கள் | செயற்பாட்டாளர் பிரேம் கதிர்A Gun And A Ring திரைப்பட லண்டன் பிரிமியர் காட்சிக்கு அதிகளவு மக்கள் திரண்டு வருவார்கள் | செயற்பாட்டாளர் பிரேம் கதிர்

A Gun And A Ring திரைப்பட லண்டன் பிரிமியர் காட்சிக்கு அதிகளவு மக்கள் திரண்டு வருவார்கள் | செயற்பாட்டாளர் பிரேம் கதிர்A Gun And A Ring திரைப்பட லண்டன் பிரிமியர் காட்சிக்கு அதிகளவு மக்கள் திரண்டு வருவார்கள் | செயற்பாட்டாளர் பிரேம் கதிர்

5 minutes read

 

”அடடா இது ஈழத்தமிழன் எடுத்த படமா?” “இப்படியும் எங்களால் படம் எடுக்க முடியுமா?” “ இப்படி ஒரு படத்துக்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தோம்” என்று மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற A Gun And A Ring படம், கனடா, அவுஸ்திரேலியா, ஃபிரான்ஸ், சுவிஸ் என பல நாடுகளைத் தொடர்ந்து இப்போது பிரித்தானியாவுக்கு வருகிறது. வரும் சனிக்கிழமை 22 ம் திகதி, லண்டன் மாநகரில், வெம்பிளியில் ஒரு புகழ்பெற்ற திரையரங்கில் இப்படம் காண்பிக்கப்பட உள்ளது. படத்தை வெளியிடுகிறார்கள் Echo8 நிறுவனத்தினர்.

இப்பட வெளியீடு குறித்து மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள, Echo8 நிறுவன செயற்பாட்டாளர் பிரேம் கதிர் அவர்களை தொடர்புகொண்டோம்! இலங்கை கலைஞன் இணையத்துக்காக அவர் வழங்கிய நேர்காணல் இதோ..!

415025_448721598477035_2110049522_o

A Gun And A Ring படத்தை எதற்காக திரையிடுகிறீர்கள்?

இது ஈழத்தமிழர்களின் சாதனை திரைப்படம்! ஈழத்தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் என்று போற்றப்படும் திரைப்படம்! இந்தப் படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஏற்கனவே திரையிடப்பட்ட நாடுகளில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இப்படியான ஒரு படத்தை இங்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே திரையிடுகிறோம்!

திரைப்பட வெளியீட்டுக்கு எப்படியான ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்?

இதற்காக 4 மணித்தியாலங்களை ஒதுக்கியுள்ளோம்! வரும் 22 ம் திகதி மாலை 6 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கும். இப்படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவம், தயாரிப்பாளர் விஷ்ணு முரளி, நடிகர் பாஸ்கி, நடிகை தேனுகா உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்த விழாவுக்கு வருகிறார்கள். இவர்களை எமது பாரம்பரிய முறையில் வரவேற்பதோடு, செங்கம்பள வரவேற்பும் செய்ய இருக்கிறோம். அத்துடன் மேலும் பல நிகழ்வுகள் நடைபெறுவதைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு திரைப்படம் ஆரம்பமாகும்.

திரைப்படம் முடிவடைந்த பின்னர், படம் குறித்த வினாக்கள், ஐயங்களை பார்வையாளர்கள் கேட்டறியும் முகமாக நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்! படத்தின் இயக்குனரிடமும் ஏனைய கலைஞர்களிடமும் ரசிகர்கள் கேள்விகள் கேட்க முடியும். 10 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்.

படம் காண்பிக்கப்பட இருக்கும் தியேட்டர் பற்றிச் சொல்லுங்கள்?

பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற Cine World தியேட்டரில் தான் படத்தை காண்பிக்கிறோம். இப்படியான ஒரு தியேட்டரில் படத்தை வெளியிடுவதே ஒரு அங்கீகாரம் தான். இரண்டு அரங்குகளில் படம் காண்பிக்கப்படும். மொத்தம் 565 இருக்கைகள் உள்ளன. ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், மூன்றாவது அரங்கையும் தருவதற்கு தியேட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் 12 வயதிற்கு மேட்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்கும் விதமாக 12A எனும் தணிக்கைச் சான்றிதழும் தரப்பட்டுள்ளது. இப்படத்தை வெளியிடுவதில் தியேட்டர் நிர்வாகம் கூட ஆர்வமாக உள்ளது.

994009_10151703818067992_1177012711_n

டிக்கட் விலை விபரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

15 பவுண்ட்ஸ், 12 பவுண்ட்ஸ் என்ற விலைகளில் டிக்கட்டுக்களை விற்பனை செய்து வருகிறோம். உண்மையில் இந்த விலை சற்று அதிகம் என்று சில ரசிகர்கள் கவலைப்பட்டதாய் அறிந்தோம். ஆனாலும் இது பிரீமியர் ஷோ என்பதால், இத்தகைய விலைக்கு விற்கவேண்டிய சூழ்நிலை. தனியே திரைப்பட காட்சி என்று இல்லாமல், விழாவாக செய்ய இருப்பதால் செலவு சற்று அதிகாமகவே உள்ளது. அதனால் தான் இப்படியான விலைகளில் டிக்கட்டுக்களை விற்கிறோம். மேலும் இது எங்களின் சாதனைப்படம் என்பதால், மக்கள் டிக்கட்டின் விலையை பொருட்படுத்தாமல் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம்.

இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? இது எப்படியான படம்? மக்களை திருப்திபடுத்துமா? ஈழ படங்கள் என்றால் ஒப்பாரிதன்மையான படங்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே?

ஆம்..! கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்! இது எமது பிரச்சனைகளை / புலம்பெயர் வாழ்வின் அவலங்களைச் சொல்லும் படமாக இருந்தாலும் கூட, பார்ப்பவர்களை அழவைக்கும் படம் அல்ல! இது நொடிக்கு நொடி த்ரில்லிங்காக நகரும் ஒரு படமாகும்! கிட்டத்தட்ட ஆங்கில படங்களைப் பார்க்கிற ஓர் உணர்வும் எழும். கலைரீதியாக அழுத்தமான படமாக இருக்கும் அதேநேரத்தில், வணிக சினிமாவுக்கான தன்மைகளும் இதில் உண்டு. ஆகவே மக்கள் தாராளமாக நம்பி வந்து இப்படத்தைப் பார்க்கலாம்! முற்றிலும் புதுமையான ஓர் அனுபவத்தை இப்படம் கொடுக்கும்!

இப்படத்துக்கான விளம்பர பணிகள் எப்படி இருக்கின்றன?

முடிந்தவரை அனைத்து ஊடகங்களையும் உள்ளடக்கி பெரிய அளவில் விளம்பர பணிகளை முன்னெடுத்துவருகிறோம். சில ஊடகங்கள் தாமாக முன்வந்து எம்மோடு கைகோர்த்திருப்பது எமக்கு மகிழ்ச்சியை தருகிறது. இணையங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று அனைத்து ஊடகங்களீன் வாயிலாகவும் படம் குறித்த செய்தியினை பரப்பிவருகிறோம்.

இப்படத்தை தமிழ் மக்கள் ஏன் பார்க்க வேண்டும்?

இக்கேள்வியின் உள் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இருப்பினும் இப்படத்தை ஒவ்வொரு தமிழ் மக்களும் அவசியம் பார்க்க வேண்டும். இது எங்கள் படம். எங்கள் பிரச்சனைகளை சொல்லும் படம். ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு படத்தை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று பல விமர்சக்கர்கள் எழுதியுள்ளார்கள். அதனால் ஒவ்வொரு தமிழ் மக்களும் இதனை அவசியம் பார்க்க வேண்டும். எமது படைப்புக்கள் என்றால் அவை தரமில்லாமல் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். இப்படம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே படத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவேனும் ஒவ்வொருவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்.

1077612_689504621065397_193155587_o

இப்படம் திரையிடப்பட்ட ஏனைய நாடுகளில் இருந்து வந்த கருத்துக்கள், இப்படத்தை நீங்கள் திரையிடுவதற்கு உந்து சக்தியாக இருந்ததா?

ஆம்! கண்டிப்பாக! இப்படம் குறித்து பல நாடுகளில் இருந்து வந்த கருத்துக்களை ஆராய்ந்தோம். அவை எல்லாமே சாதகமான கருத்துக்களாக இருக்க கண்டோம். எமக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை தருகிறார்கள் என்று சிந்தித்தபோதுதான் இப்படத்தை பிரித்தானியாவில் திரையிட வேஎண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இப்படத்தை பிரித்தானியாவிலும் வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதே எமது எண்ணமாக உள்ளது. ஐரோப்பாவில் அதிகளவு தமிழ்மக்கள் வாழும் இடமாக பிரித்தானியா உள்ளது. எனவே ஏனைய நாடுகளை விட அதிகளவு மக்கள் திரண்டு வந்து இப்படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறோம். முடிவு மக்கள் கைகளில்தான் உள்ளது.

ப்ரேம்கதிர் அவர்களின் பேச்சில் தெரியும் நம்பிக்கை – இப்படம் கண்டிப்பாக பிரித்தானியாவிலும் பெரும் வெற்றி பெறும் என்பதைக் காட்டுகிறது. எமது அவதானிப்பின்படி Echo8 நிறுவனத்தினரது உழைப்பு, விதந்து பாராட்டும்படியாய் உள்ளது. முக்கியமாக பல ஊடகங்களை ஒன்றிணைத்து பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இப்படம் வெற்றியடைய இலங்கை கலைஞனும் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புகிறது.

 

 

நன்றி | இலங்கை கலைஞன் இணையம் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More