சிங்கள மக்கள், இலங்கை தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள், செட்டிமார், போத்துக்கீசப் பறங்கியர், டச்சுக்காரப் பறங்கியர், காபீர்கள் என்போர் இலங்கையில் வாழ்ந்தனர்.
போத்துக்கீசப் பறங்கியர் (Portuguese Burghers) என்பார் போத்துக்கீச ஆண்களுக்கும் சிங்கள அல்லது தமிழ் பெண்களுக்கும் பிறந்தவர்கள். இவர்கள் கத்தோலிக்க சமயத்தை சார்ந்தவர்கள். போத்துக்கீச கிரியோல் மொழி, ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தனர்.
டச்சுக்காரப் பறங்கியர் என்போர் டச்சுக்கார்ர் சிங்களவர், தமிழர், போத்துக்கீசர் பறங்கியர்களுடன் சேர்ந்து கலப்பினமாக மாறியவர்களாகும். இவர்கள் சீர்திருத்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை பேசினார்கள்.
பெரும்பான்மையான போத்துக்கீசப் பறங்கியரும் டச்சுக்காரப் பறங்கியரும் பிற்காலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடியேறி விட்டனர்.
நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எட்டாம் வாய்க்காலில் வரும் நீரையும் கொல்லனாறு, நீலனாறு என்பவற்றை அணை கட்டி மறித்துப் பெறும் நீரையும் பயன்படுத்தி காலபோகம், சிறுபோகம் மட்டுமல்லாது இடைப்போகமும் விதைத்து பெரிய பரந்தன் மக்கள் செல்வந்தர்கள் ஆனார்கள்.
மாட்டு மந்தையும் பெருகி விட்டது. எருமை மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
நீரை கணபதி சிறத்த முறையில் பங்கீடு செய்து ஒருவருக்கும் குறை வராது பார்த்துக் கொண்டான். கணபதிக்கும் பத்தொன்பது வயது ஆகிவிட்டது. வழமை போல இளைஞர்கள் பொறி வைத்து மான், மரை, பன்றிகளை வேட்டையாடினர். எல்லோர் வீடுகளிலும் இறைச்சி வத்தல்கள் காய்ந்தன.
கணபதி தனது ஓய்வு நேரங்களை தங்கச்சியாருடன் விளையாடுவதிலேயே கழித்தான். கணபதியின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் மற்றோரு நிகழ்வும் நடந்தது.
தாயார் விசாலாட்சி மீண்டும் கர்ப்பவதியானார். இம்முறையும் ஆறுமுகத்தார் மீசாலைக்கு போய் அதே மருத்துவச்சியையே அழைத்து வந்தார். மருத்துவச்சியும் ஒரு மாதம் வரை தியாகர் வயலில் தங்கி இருந்து விசாலாட்சிக்கு தேவையான யாவற்றையும் செய்தார்.
ஒருநாள் அதிகாலையிலேயே விசாலாட்சிக்கு வயிற்றுக்குத்து தொடங்கி விட்டது. சில மணி நேர போராட்டத்தின் பின் ஆறுமுகத்தாருக்கு ஒரு ஆண் பிள்ளையை பெற்றுக் கொடுத்தாள். இம்முறையும் கணபதியே முன்னுக்கு போய் தம்பியாரை கைகளில் வாங்கி கொண்டான். கணபதி “தம்பி”, “தம்பி” என்று குழந்தையுடனேயே திரிந்தான். ஆறுமுகத்தார் மகனுக்கு “பேரம்பலம்” என்று பெயர் வைத்தார். தனி ஒருவனாக இருந்த கணபதி முதலில் தங்கை மீனாட்சியம்மாளும் இப்போது தம்பியும் கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
குஞ்சுப்பரந்தன் கமவிதானையின் தண்ணீர் பங்கீடு பற்றி தொடர்ந்து இரணைமடு நீர் விநியோக அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் சென்றன. குஞ்சுப்பரந்தன் பிரச்சினையை தீர்ப்பதற்காகவும், பெரிய பரந்தனுக்கு ஒரு கமவிதானையை நியமிப்பதற்காகவும் ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவர் ஒரு போத்துகீசப் பறங்கியர். அவருக்கு ஆங்கிலத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளையும் பேசத் தெரியும்.
குஞ்சுப் பரந்தனுக்கு போய் விசாரித்து கமவிதானையை எச்சரித்து விட்டு, பெரிய பரந்தனுக்கு வந்தார். கணபதி பெரியபரந்தன் வாய்க்கால்களை எல்லாம் சுற்றிக் காட்டி, தண்ணீர் பாய்ச்சும் முறை பற்றி எல்லாம் அவருக்கு விளக்கினான். கணபதியின் தோற்றமும், அவன் நீர் பாய்ச்சுவதில் காட்டிய ஆர்வமும், பெரிய பரந்தன் மக்கள் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் அவரைக் கவர்ந்தன.
அவனை பெரிய பரந்தன் கமவிதானையாக நியமித்து, மறுநாள் இரணை மடுவிலுள்ள கந்தோரில் வந்து அதற்கான கடிதம் பெறும் படி கணபதிக்கு கூறி விட்டு தனது குதிரையில் ஏறி போய் விட்டார். சிவப்பு நிறமான அந்த உயர்சாதி குதிரையில் அவர் பாய்ந்தேறி இருந்து குதிரை சவாரி செய்தது பெரிய பரந்தன் மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘கமவிதானை’ பதவி என்பது ‘விதானை’ பதவி போல அதிகாரம் மிக்க பதவியில்லை. நீர் பாய்ச்சல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமே கமவிதானையின் பணியாகும்.
ஆங்கிலேய ஆட்சியாளர் முழு நிர்வாக பொறுப்புகளுக்கும் இங்கிலாந்தில் இருந்து ஆட்களை கொண்டு வரமுடியாது. எனவே தமக்கு அடுத்த பதவிகளில் பறங்கியரையே நியமித்தனர். பறங்கியரும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். நீர்ப்பாசன அதிகாரியான இந்த பறங்கியர் மிக நல்லவர். ஊர் மக்களுடன் அன்பாக பழகினார்.
இந்த அதிகாரிகள் போக்கு வரத்திற்கு குதிரைகளை பிரதானமாக பயன்படுத்தினர். பறங்கி அதிகாரி இரணைமடுவில் இருந்த ஒரு தங்குமிடத்தில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார். தங்குமிடம் கந்தோருக்கு அருகிலேயே இருந்தது.
அடுத்த நாள் ஆறுமுகத்தார் கணபதியைக் கூட்டிக்கொண்டு இரணைமடுவுக்கு போக ஆயத்தமானார். அப்போது விசாலாட்சி ஒரு புதிய அடுக்குப் பெட்டியில் மரை இறைச்சி வத்தலை கொண்டு வந்து கொடுத்து “பெரியவர்களைப் பார்க்க போகும் போது வெறுங்கையுடன் போவது முறையில்லை. இந்த வத்தலை கொண்டு போங்கள்” என்று சொல்லி கொடுத்து விட்டாள்.
ஆறுமுகத்தாரும் கணபதியும் வண்டிலில் புறப்பட்டு இரணைமடு நீர்ப்பாசன கந்தோரை அடைந்தனர். அவர்கள் இருவரையும் பணியாளர்கள் ஒரு வாங்கில் இருக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் அதிகாரி வந்து, கணபதியை தனது அறைக்கு அழைத்து, அவனிடம் ஒரு கையொப்பத்தை பெற்ற பின்னர் நியமனக் கடிதம் வழங்கினார்.
ஆறுமுகத்தார் தயங்கி தயங்கி வந்து இறைச்சி வத்தலை கொடுத்தார். பெட்டியின் மூடியைத் திறந்து பார்த்து மகிழ்ச்சியடைந்து விசிலடித்த அதிகாரி பணியாளரைக் கூப்பிட்டு “இதனைக் கொண்டு போய் ‘சென்சோரா’ விடம் கொடு என்றார். (போத்துக்கீசர் ஆண்களை ‘சென்சோர்’ (senhor) என்றும் பெண்களை ‘சென்சோரா’ (senhora or senhorita) என்றும் அழைத்தனர்).
அந்த பறங்கியர் பின்னர் கணபதியைப் பார்த்து “கணபதிப்பிள்ளை, உனக்கு துவக்கினால் சுடத்தெரியுமா?” என்று கேட்டார்.
கணபதி “இல்லை, சென்சோர், நாங்கள் பொறி வைத்து தான் வேட்டையாடுவது வழக்கம்” என்று கூறினான். அதிகாரி “சரி, நான் நாளை முதல் பெரிய பரந்தன் வந்து உனக்கு துவக்கினால் சுடப் பழக்குவேன். தயாராக இரு.” என்றார்.
அதற்கு கணபதி “சென்சோர், வியாழன், வெள்ளி இரு நாட்களும் நான் மிருகங்களை கொல்ல மாட்டேன். மற்ற நாட்களில் உங்களிடம் சுடப் பழகுகிறேன்.” என்றான். அவனது நேர்மையான பேச்சு பறங்கியரை மிகவும் கவர்ந்தது. அடுத்தநாள் ஒரு செவ்வாய் கிழமை, எனவே அன்று பழகுவதாக தீர்மானித்தார்கள்.
போத்துக்கீசர் காலத்து பாடல் ஒன்றின் சில வரிகள். அந்தோனி என்பவன் தனது தொப்பியினால் எதையோ மறைக்கிறான். அதை அவதானித்த போத்துக்கீசன் கேள்வி கேட்க, அந்தோனி பதில் சொல்வதாக வருகிறது.
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி. எலிப்பிடிக்கிறன் சென்சோரே. பொத்திப் பிடி, பொத்திப்பிடி அந்தோனி. பூறிக்கொண்டோடுது சென்சோரே”.
அடுத்தநாள் பறங்கியர் சொன்னதைப் போலவே ஒரு துவக்குடன் (துப்பாக்கி) தனது குதிரையில் வந்து இறங்கினார். அது ஒரு பதினாறாம் நம்பர் துவக்கு. பன்னிரண்டாம் நம்பர், இருபதாம் நம்பர் துவக்குகளும் உண்டு. துவக்கின் குழாயின் சுற்றளவை பொறுத்து துவக்குகளுக்கு நம்பர் உண்டு. குதிரையை தியாகர் வயலில் மேயக் கட்டிவிட்டு இருவரும் வடக்கு காட்டினுள் சென்றார்கள்.
கணபதி குறிப்பம் புளியை காட்டி, அதன் பயன் பற்றி கூறினான். பறங்கியர் துவக்கை எவ்வாறு திறந்து தோட்டாவை உட்செலுத்துவது என்பதை கணபதிக்கு முதலில் காட்டிக் கொடுத்தார்.
“கணபதி தோட்டாக்களில் பல வகை உண்டு. ஒரு பெரிய குண்டு மட்டும் உள்ள குண்டு தோட்டா யானை, காட்டெருமை என்பவற்றை சுட பயன்படும். நான்கு நடுத்தர குண்டுகள் உள்ள எஸ்ஜி (SG) தோட்டா மான், மரை, பன்றி, மாடுகளை சுட பயன்படும். பதினாறு சிறிய குண்டுகள் உள்ள நான்காம் நம்பர் தோட்டா முயல், மயில், கௌதாரி, காட்டுக்கோழி முதலியவற்றை சுட பயன்படும்” என்றார்.
“கணபதி, துவக்கின் குழாயினுள் தோட்டாவை செலுத்திய பின்னர், துவக்கின் சோங்கை உனது தோளுடன் அழுத்தி பிடித்துக் கொள். துவக்கின் குதிரையை இது போல பின்னால் இழுத்து விட்டால் தான், நீ சுடுவதற்கு வில்லை இழுக்க குதிரை போய் தோட்டாவின் நடுப்பகுதியிலுள்ள வெடிக்கும் பகுதியில் வேகமாக அடிக்கும். அது வெடிக்கும் விசையில் தோட்டாவிலுள்ள குண்டுகள் குழாய் வழியே தள்ளி செல்லப்பட குண்டுகள் நீ குறிபார்த்த இலக்கைப் போய்த் தாக்கும். சுடும் போது குழாயின் தொடக்கத்தில் உள்ள சிறிய குழி, குழாயின் நுனியில் ஒட்டியிருக்கும் சிறு குண்டு, நீ சுட இலக்குப் பார்க்கும் விலங்கு என்னும் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.” என்று பறங்கியர் வேட்டையின் பால பாடத்தை கணபதிக்கு கற்பித்தார்.
வேட்டையின் போது கால்களை மெதுவாக எடுத்து வைத்து சத்தமின்றி விலங்கை அணுக வேண்டும் என்பதை கணபதி அறிவான். பறங்கியர் மெதுவாக கணபதியை பின் தொடர்ந்தார். ஓரிடத்தில் நான்கு பேடுகளும் ஒரு சேவலும் கொண்ட காட்டுக் கோழி கூட்டம் ஒன்றை இருவரும் கண்டனர். பறங்கியர் “கணபதி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி மறுகாலின் முழங்காலை மடித்து இருந்து ஆறுதலாக குறி பார்த்து சுடு” என்றார்.
இவர்களைக் காணாத கோழிகள் நன்றாக கிழறி கொத்தி எதையோ உண்டன. கணபதி நிதானமாக குறி பார்த்து சுட்டான். சேவலும் இரண்டு பேடுகளும் சூடு பட்டு இறந்தன. மற்ற இரண்டு பேடுகளும் தப்பி ஓடி விட்டன.
காட்டை நன்கு சுற்றி பார்த்து, வேறு எந்த விலங்குகளும் கிடைக்காது திரும்பி வரும் போது கணபதியின் கண்களில் ஒரு முயல் பட்டது. இம்முறை நின்றபடி குறி பார்த்து சுட்டான். முயல் இரண்டு முறை துடித்து இறந்தது.
கணபதி ஒரு பனயோலைக் குருத்தை வெட்டி, கோழிகளையும் முயலையும் அதனால் சுற்றி கட்டி பறங்கியரிடம் கொடுத்து அனுப்பினான். கோழிகளை அல்லது முயலை எடுக்கும் படி பறங்கியர் வற்புறுத்தியும் கணபதி ஏற்க மறுத்து விட்டான். துவக்கையும் எஞ்சிய தோட்டக்களையும் கணபதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி கூறிவிட்டு விலங்குகளை குதிரையின் பின் பக்கத்தில் கட்டி விட்டு, அவர் குதிரையில் ஏறி சென்றார்.
தொடர்ந்து ஒரு கிழமை பயிற்சியின் பின்னர் கணபதி சிறந்த வேட்டைக்காரனாக மாறிவிட்டான். இரவில் டோர்ச் லைற் வெளிச்சத்தில், வெளிச்சம் விலங்கின் கண்களில் படும் போது விலங்குகள் சில கணங்கள் அசையாது நிற்கும். அப்போது விரைவாக குறி பார்த்து சுட்டு விட வேண்டும்.
இரவு வேட்டையையும் இரண்டு நாட்கள் கணபதிக்கு பழக்கினார். இரண்டாம் நாள் தொடக்கம் கணபதிக்கும் வேட்டையில் பங்கு கிடைத்தது. கணபதி அவற்றை ஊர் மக்களுக்கும் கொடுப்பது வழக்கம்.
கணபதி நன்கு தேர்ச்சி பெற்றதும், அதிகாரி கணபதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். துவக்கையும் தோட்டாக்களையும் கணபதி பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். டோர்ச் லைற்றையும் அவ்வாறே. சனிக்கிழமை இரவு கணபதி தனது தோழர்களுடன் வேட்டைக்கு போக வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலை பறங்கியர் வருவார். முயல்களானால் இரண்டு முயல்களையும் மான், மரை, பன்றியானால் முன்கால்களுடன் சேர்ந்த அரை பங்கு இறைச்சியை அதிகாரிக்கு கொடுத்து விட்டு, மிகுதியை கணபதி எடுக்கலாம். இடையில் வேட்டையாடி கிடைப்பதை கணபதியே எடுக்கலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பறங்கியர் தமது குதிரையில் விரைந்து வருவார். கணபதியும் இறைச்சியுடன் காத்திருப்பான். பறங்கியருக்கு விருப்பம் என்பதனால் வத்தல்களையும் கொடுப்பான். கணபதிக்கும் பறங்கியருக்கும் இடையே இனம், மதம், பெரியவர் சிறியவர் என்ற பேதங்கள் மறந்து ஒரு நல்ல நட்பு மலர்ந்தது.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
முன்னையபகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/