செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்டர் ரி. கோபிசங்கர்

9 minutes read

ஊரில எப்பவும் CTB க்கு ஒரு தனி இடம் இருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை (CTB ) 1978இல வட பிராந்திய போக்குவரத்துச் சபையா மாறினாலும் நிலைச்சது என்னவோ CTB எண்ட பேர் தான். எழுபதுகளில அரசாங்க உத்தியோகக்காரர் மாதிரி CTB காரருக்கும் நல்ல demand இருந்தது . வாத்தியார் உத்தியோகத்திலும் பார்க்க CTB டிரைவர் வேலை சம்பளம் கூட எண்டு சிலர் அந்த வேலைக்கு போனது ,எண்டு கதை கூட இருந்தது . ஆனா இந்த பேருக்கு நாங்க படிற பாடு எங்களுக்குத்தான் தெரியும்.

இண்டைக்கு பலாலி -யாழ்ப்பாணம் 764, காலமை ஐஞ்சரை ஓட்டம் கிடைச்சிது. பஸ் வெளிக்கிடேக்க நாலு பேர் தான் அதுகளும் அநேமா ஆசுபத்திரிகாரருக்கு சாப்பாடு தேத்தண்ணி கொண்டு போறவை . ஈவினை தாண்டி வர பிறகும் புன்னாலைக்கடுவனில இருந்து உரும்பிராய் வரை ஆக்களிலும் பாக்க மூட்டைகள் தான் கூட ஏறிச்சிது. தின்னைவேலி சந்தைக்கு ஏத்தின மரக்கறி மூட்டையைப் பாரத்தோட கியரை மாத்தி மூண்டுக்கு போட கியர் விழேல்லை. இந்த நேரம் ஒடிற பலாலி route பஸ் எண்டால் செம்பாட்டுக் காலோட சாரத்தை முக்காக்கட்டு கட்டிக்கொண்டு அதே செம்மண் பிரண்ட சாக்கு மூட்டைகளோட ஆக்கள் ஏறிற படியா இந்த ஓட்டை பஸ் தான் தாறவங்கள். ஆனால் ஆறரைக்கு ஓடுறது புதுசு, பள்ளிக்கூடம் வேலை எண்டு ஆக்கள் வெள்ளையும் சொள்ளையுமா போற படியால் அப்பிடி. டிப்போ மனேஐர் சிறி அண்ணை எல்லாத்தையும் பாத்துத் தான் பஸ்ஸைப் போடுவார். பின்னேரம் டிப்போவில விடப் போகேக்க கியர் பொக்ஸை மாத்தச் சொல்லோணும் எண்டு கோண்டாவில் தாண்டேக்க ஞாபகம் வந்திச்சிது. சந்திரன் ரிக்கற் கணக்கையும் பொக்கற் கணக்கையும் பாப்பான் எண்டு நம்பிக்கையில ஓட தின்னைவேலிச்சந்தி வந்திச்சுது.

தின்னவேலி சந்தி தாண்டத்தான் ஏத்தின மூட்டை பறி பட்டி ஆக்கள் எல்லாம் குறைஞ்சிது. இப்ப இழுத்து ஓடலாம் இல்லாட்டி பஸ் ஸ்டாண்ட் time keeper பிந்தினதுக்கு penalty போட்டிடுவான் எண்டு கொஞ்சம் இறுக்கிப் பிடிக்க, எங்கேயும் தூர பொம்பர் அடிக்கேக்க வீடு அதிரிர மாதிரி பஸ் கண்ணாடி எல்லாம் அதிர்ந்திச்சு.

அப்ப லக்கேஜ் ரிக்கற்றில டிரைவருக்கு 10 வீதமும், கிழவிகளோட சேந்து மூட்டையை தூக்கிறதால் கொண்டக்டருக்கு 20 வீதமும் வரும். அப்ப யாழ்ப்பணத்துக்க ஒடிற route இல, இந்த றூட்டில இந்த shift தான் வருமானம் கூடினது, அதால மற்றதுகள் மாதிரி இல்லாமல் இந்த shift க்கு அடிபாடு கூட. ஒருத்தரும் விரும்பாத turn எண்டால் 793 கச்சேரிக்கும் town க்கும் ஓடிறது. அது தான் shortest trip, கச்சேரிக் காரருக்கு ஒடினதில சென்ஜோன்ஸ் சுண்டுக்குளி பள்ளிக்கூடகாரரும் போறவை. அநேமா எல்லாம் season ticket காரர்.

சீசன் ரிக்கற் ஒருபக்கம் பேர் விபரம், பெறுமதி, ஏறிற இறங்கிற இடம், route பஸ் நம்பர் எழுதியும் மற்றப் பக்கம் பெட்டிக்குள்ள முப்பத்தொண்டு வரை இருக்கிற ரோஸ் கலர் மட்டை. முப்பத்தொண்டு இருந்தாலும் பள்ளிக்கூடம் எண்டால் ஐஞ்சு நாள், வேலைகார்ருக்கு ஆறு நாள் மட்டும் தான் போகலாம். எல்லா கொண்டக்டர் மாரும் season ticket ஐ வாங்கி திகதி வெட்டிறேல்லை ஆனபடியால் சனம் ரெண்டு தரம் போறது, வேற ஆற்றை season ரிக்கற்றையும் மாத்தி கொண்டு போறது, பழைசை காட்டிறது எண்டு கள்ள விளையாட்டுக்கள் செய்யிறது தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காமல் விட்டிடுவினம்.

பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பஸ்ஸை நிப்பாட்டீட்டு Supervisor ரீ குடிக்க கூட்டிக்கொண்டு போய், தேத்தண்ணியோட ஆர். வீ.ஜீ பக்கற்றையும் குடுத்து அடுத்த கிழமைக்கும் இதே extra turn ஐப் போட்டிட்டு வந்து ரெண்டாவது ஓட்டத்துக்கு வெளிக்கிட்டன். ஸடாண்டுக்குப் போய் வேற பஸ்ஸை எடுத்து முன் போட்டையும் மாத்தி, முன் நம்பரையும் கழற்றி 768 ஆ மாத்தீட்டு டீசலைப் பாத்திட்டு காங்கேசன்துறை / யாழ்ப்பாணம் ஸ்ராண்டில போய் நிப்பாட்டீட்டு, இஞ்சினை start ல விட்டிட்டு போக சந்திரன் ரிக்கற் எழுத தொடங்கினான்.

ஆரம்ப காலத்தில காபன் வைச்சு ரிக்கற் எழுதுறது ,ரெண்டு ரெண்டா ஐஞ்சு வரி இருக்கும். எழுதீட்டுக் கிழிக்கிறது கஸ்டம். அலுமினிய holder ஒண்டுக்குள்ள ரிக்கற் புத்தகத்தை வைக்கிறது. aluminium plate ஒண்டு இருக்கிறதால எழுதிறது சுகம். பிறகு பிறகு print பண்ணணின ரிக்கற் வந்தது. ஐஞ்சியத்தில இருந்து ,இருவத்தைஞ்சியம், ஒரு ரூவாய், ரெண்டு ரூவாய், எண்டு ஒவ்வொரு கலரில அடுக்கி இருக்கும். கணக்குக்கு ஏத்த மாதிரி ஒண்டோ ரெண்டோ ரிக்கற் குடுக்கிறது. ஆனாலும் ஆக்களுக்கு மட்டும் கிழிக்கிற ரிக்கற், பெட்டி சாமாங்களுக்கு எழுதிற ரிக்கற் தான். அதுக்குப்பிறகு வந்தது ஒரு மிசின். நம்பரை சுழற்றி விட்டிட்டு கற கற எண்டு காண்டிலை பிடிச்சு இரண்டு தரம் சுத்த ரிக்கற் வரும். ஆனால் நாட்டுப் பிரச்சனைகள் கூட மிசின் இல்லாமல் போக, திருப்பியும் எழுத தொடங்கினனாங்கள்.

சம்பளத்துக்கு மேல எப்படியும் routeக்கு 150 ரூவாய் காட்டினாத்தான் 10 வீதம் கைக்கு கூட வரும். பஸ்ஸைப் பாத்தா நிரம்பேல்லை. உள்ளுக்க ஏறின சனத்தில இடது பக்கம் பொம்பிளைகள் மட்டும் இருந்தினம், இந்த மகளிர் இட ஒதுக்கீடு 1979 ல தர்மரட்ணத்தார் தான் கொண்டண்டதாம்.

உள்ள ஏறி இரண்டு தரம் கோன் அடிச்சு ஒருக்கா, கியரை மாத்தி accelerator ஐ மிதிக்க ஐஞ்சாறு சனம் ஏற, இழுத்த சிகரட்டை எறியாமல் இவர் எப்படியும் இன்னும் ஐஞ்சு நிமிசத்திக்கு பிறகு தான் எடுப்பார் எண்டு இன்னும் நாலு இளசுகள் நிண்டிச்சுதுகள். வெளி வெக்கை, அலுமினிய பஸ், ஓடாமல் நிண்டு இஞ்சின் மட்டும் ஓடிற சுடு காத்து, எல்லாம் உள்ள இருக்கிற சனத்தின்டை பொறுமையை சோதிக்க சனம் புறுபுறுக்கத் தொடங்கிச்சுது.

அப்பிடி start ல நிக்கேக்க வவுனியா பஸ்ஸுக்கு அங்கால டீசல் அடிக்க அந்த மணம் மூக்கை நோண்டிச்சு. காத்தோட கலந்து மூக்கை நோண்டிறது சில மணங்கள் இருக்கு. ஒண்டு பெற்றோல் இல்லாட்டி டீசல் அடிக்கேக்க வாற மணம், அந்த மணம் வாகனத்தை மட்டுமில்லை ஆளையும் start பண்ணும் . ரெண்டாவது ஐயரின்டை மில்லில மிளகாய் அரைக்கேக்க அரை மைலுக்கு அங்காலேம் வாற மணம், மற்றது வெடி வெடிச்சாப்பிறகு வாற கந்தக மணம்.

இன்னும் கொஞ்சம் ஏறட்டும் எண்டு பாத்துக்கொணடிருக்க சனம் “என்ன இண்டெக்கு பஸ் வெளிக்கிடுமோ” எண்டு புறுபுறுக்க , நானும் கியரை மாத்தி கொஞ்சம் எடுத்து, சனம் இந்தா வெளிக்கிட்டிட்டு எண்டு நிமிந்திருக்க கொஞ்சம் முன்னுக்கு எடுத்து திருப்பியும் நிப்பாட்டினன். பூபாலசிங்கம் கடையடியில வெள்ளை உடுப்போட ஆள் வாறது side கண்ணாடியில தெரிய பஸ்ஸை ஆசுபத்திரி ரோட்டுக்கு திருப்பிக் கொண்டு வந்தன். ஆஸ்பத்திரி ஓடலி சேவியர் வந்து முன் கதவால தொத்திக்கொள்ள, முன்னால இருந்த கதவை திறந்து அவரை உள்ள விட்டிட்டு (இந்த முன் கதவுகள் ஆக்கள் ஏறாம இருக்கவும் ஸ்கூல் பஸ்ஸில பாதுகாப்புக்கும், முன்னால புட்போர்ட்டில நிக்கிறதுகள் side கண்ணாடியை மறைக்காம இருக்கவும் கொண்டு வந்தது, முன் கதைவை திறந்து பூட்ட ஒரு ஆளுக்கு பத்து சதம் தாறது ),ஏறின சேவியர் அம்மான்டை கிளினிக் கொப்பியையும் மருந்தையும் குடுக்க கவனமா வாங்கி வைச்சிட்டு இழுத்து ஓடத்தொடங்கினன். என்ன சேவியருக்காக நிண்டு வெளிக்கிடுறீங்கள் வீட்டில ஐஞ்சாவது விசேசம் போல எண்டு சந்திரன் சொன்னதை கவனிக்காத மாதிரி கியரை மாத்தினன். வெப்பத்திலை தான் விந்து உற்பத்தி கூடிறதாம் எண்டு ஒரு வாத்தி கதைக்கேக்க சொன்னது ஞாபகம் வந்திச்சுது அதோட , “ அண்ணை உங்களுக்கும் தெரியும் தானே long trip ஓடிற பஸ் டிரைவர் மார் சிலருக்கு போற ஊரெல்லாம் பிள்ளை இருக்குது “, எண்டு நக்கலடிச்சதும் ஞாபகம் வந்திச்சுது.

வழமையான Route ஓடேக்க ஆக்களுக்காக பாத்து நிண்டு ஏத்திறது, சாப்பாட்டு பாசல், பேப்பர், சின்ன சின்ன சாமாங்கள் எண்டு கொண்டேக் குடுக்கிறது எண்டு சின்ன சின்ன சமூக சேவையும் செய்யிறனாங்கள்.

கனநேரமா உள்ள இருந்து வேர்த்து இருக்கேக்க ,பஸ் கொஞ்சம் இழுக்கத் தொடங்க யன்னலால வாற காத்து பட, முழு நெல்லிக்காயை சாப்பிட்டுட்டு தண்ணி குடிச்ச மாதிரி இருந்திச்சுது . கழுத்துக்க வைச்ச கைலேஞ்சியை எடுத்து முகத்தை துடைச்சிட்டு திருப்பியும் கழுத்துக்குப் பின்னால வைச்சிட்டு சீட்டில மாட்டி இருந்த காக்கி சட்டைக்குள்ள இருந்த வெத்திலை கூறை வெளிய எடுத்தன்.

முன்னால வந்த சந்திரன், அண்ணை சாப்பாட்டுப் பார்சல் ஒண்டு சுன்னாகம் சந்தீல குடுக்கோணும் எண்டு ஞாபகப்படுத்தினான். அப்ப வேலைக்கு வெள்ளனவே போற ஆக்களுக்கு வசதிப்படேக்க வீட்டுச்சாப்பாடு பஸ்ஸில குடுத்து விடிறவை, தெரிஞ்ச தெரியாத எல்லாருக்கும் இலவச Uber சேவை செய்யிறனாங்கள். Long trip பஸ்ஸிகளில பெரிய பாசல்களும் வந்து போறது. வந்த சந்திரன் திரும்பிப் போகேக்க ரிக்கற் எடுக்காதவையை சரியாப் பாத்து ரிக்கற்றை குடுத்திட்டு காக்கிச்சட்டைக்குள்ள கையை வைச்சு குலுக்கி சரியான சில்லறையை பாக்கமலே எடுத்து குடுத்திட்டு காதில பேனையை செருகீட்டு பின் படிக்குப் பக்கத்தில சீற்றுக்குப் பின்னால இருக்கிற இடைவெளியில சாஞ்சு நிண்டான்.

சேவியரிட்டை கதை கேட்டு ஆசுபத்திரி புதினங்களை அறிஞ்சபடி மனோகரா சந்தி தாண்ட மணி அடிச்சுது. மணி ஒருக்கா அடிச்சா நிப்பாட்டிறது ரெண்டு தரம் அடிச்சா எடுக்கிறது ஆனாலும் சில வப்புகள் சும்மாயும் அடிக்கும் . நிப்பாட்டீட்டு எடுக்கேக்க தான் வடிவாப் பாக்கவேணும் ஒண்டு திடீரெண்டு குதிக்கும் , மற்றது ஓட ஓட ஏறும். பஸ்ஸை எடுத்தாப்பிறகு ,ஒடுற சைக்கிளை பின்னாலயே நாய் துரத்திக்கொண்டு வார மாதிரி ஒண்டு ஓடி வரும் , பஸ்ஸை நிப்பாட்டாட்டி திட்டித்தீர்க்கும். பாவம் இதை விட்டா அடுத்தது ஒரு மணித்தியாலம் செல்லும் எண்டு நாங்களும் பாத்து நிப்பாட்டிறனாங்கள்.

தப்பித்தவறி ஏறினது குமர் எண்டால் சந்திரன் ஒரு “ அண்ணை ரைட்டை “ நக்கலாப் பிலத்து சொல்லுறதை கேக்காத மாதிரி நாங்களும் ஓடிறது. தப்பித்தவறி யாருக்கும் ஏற இறங்கேக்க அடிபட்டிட்டால் அண்டு முழுக்க நாள் சரி .டிப்போவுக்கும் பொலிசிக்கும் அறிவிச்சு வேற பஸ் எடுப்பிச்சு வீட்டை வர வெறுத்துப்போடும் . இதால தான் பஸ்ஸை எடுக்கேக்க ஒவ்வொரு முறையும் கும்பிட்டு முன்னுக்கு ஒருக்கா உருட்டி நிப்பாட்டி சகுனம் பாத்து எடுக்கிறது . இதால எல்லாம் தப்பி நாலு trip ஓடி முடிச்சு வர அடுத்த நாள் time table தந்தாங்கள் . பி்ன்னேரக் கொட்டிச் சந்தையில மீனும் வாங்கி்கொண்டு சைக்கிளை உழக்க வீடு கிட்டவாத் தெரிஞ்சுது.

இதில் போன சந்தோசம் இ.போ.ச இப்ப A/C காரிலேம் இல்லை எண்டது தான் கவலை.

Dr.T.கோபிசங்கர்
யாழ்ப்பாணம்.

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More