December 6, 2023 2:01 pm

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email


எல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன், எண்டு அன்பழகன் சொல்ல ஆதித்தன் மாமா வீட்டு மதிலில ஏறி எல்லாரும் இருந்தம். இவன் வாறதாலை இண்டைக்கு விளையாட்டும் இல்லாமல் போட்டு எண்டு செந்தில் புறுபறுக்க நாங்களும் பொறுமை இழந்து வெளிக்கிடுவம் எண்ட சத்தம் கேட்டிச்சு.

உடனே Panasonic Radio வில FM ஐ மாத்தினம். அப்ப MW வில தான் எல்லாம் , BBC மட்டும் SW 2 இல கேக்கிறது. நாங்கள் தான் இலங்கையில FM ஐ முதல் கேட்டது, அதுகும் ஒட்டுக் கேட்டது. அவன் கதைக்கிற பாசையை translate பண்ணிறதுக்கும் கிருபான்டை அப்பா இருந்தவர். இந்தா கண்டிட்டானாம் , பதியிறானாம் , கோயில் தெரியுதாம் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க நீராவியடிப்பக்கம் பெரிய சத்தம் கேட்டிச்சு. இருவது தரம் சுத்தி ரெண்டைப் போட்டிட்டு, பத்தாதெண்டு “ ஹெற்ற பலமு” எண்டு, நாங்கள் கேக்காமல் இண்டைக்குப் போட்டு நாளைக்கு வாறன் எண்டான்.

கடைச்சாமி கோயிலடி காம்புக்குத்தான் அடி விழுந்திருக்கும் எண்ட ஊகங்களுக்கு அடுத்த நாள் பேப்பர் போட்ட தலைப்பு “ பொம்பர் குண்டு போட்டதில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி ”. நாளைக்கும் வருவான் எண்டதால பள்ளிக்கூடம் போகமல் வீட்டை எல்லாரும் நிண்டிடம் அடுத்த நாளும். அப்ப எங்களுக்கு நிறைய லீவு வாறது அரசாங்கம் தாறதைத் தவிர. இடைக்கிடை வாற குடாநாடு முழுவதும் ஹர்த்தால், பேரே கேள்விப்படாத குறூப்பின்டை சுவரொட்டிகளில வாற கண்ணீர் அஞ்சலியும் கடை அடைப்பும், செல்லடியும் இடம்பெயர்வும் எண்டு கனக்க வரும்.

முதல் நாள் கால நிலவரங்களுக்கு பிறகு சில நேரம் பள்ளிக்கூடம் இருக்கா இல்லையா எண்டு தெரியாமல் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போக , வாங்கோ எண்டு சொல்லாமல் பள்ளிக்கூடத்தில register மட்டும் mark பண்ண , போங்கோ எண்டு சொல்லாமல் நாங்களே வெளிக்கிட்டு வாறது. பள்ளிக்கூடம் போட்டு அதுகும் இல்லாமல் வீட்டையும் போகாமல் எங்கேயாவது set ஆனால் கிரிக்கட் இல்லாட்டி cards . ஒட்டுக்கேட்ட குழுவின் கருத்தால் இண்டைக்கு பள்ளிக்கூடம் அனுப்பிறேல்ல எண்ட ஏகமானதான அம்மாமாரின்டை முடிவை அறவிக்க நாங்கள் காலமையே பெரியண்ணா வீட்டை set ஆனம். ஒழுங்கையின் நடுவில இருக்கிறதாலேம், பொம்பிளைப்பிள்ளைகளும் அக்கா மார் எண்டதால அது தான் எங்கடை base.

வயது கருதி என்னைக் cards விளையாட சேக்காமல் விட்டு வெளியில இருத்த, நானும் பாண்டி விளையாடிற குறூப்பில சேந்தன். பாண்டீல ரெண்டு பசுவும் தடவித்தடவி கும்பலும் எடுத்து வச்சிட்டு அடுத்த கும்பலுக்கு ready ஆனேன். Monopoly க்கும், cards க்கும் முன்னோடி பாண்டி தான். பாண்டிப்பலகை சாமத்தியப்பட்ட பிள்ளைகளுக்கு செய்து குடுக்கிறதாம். அதை அவை சீதனமாக் கொண்டு போய் வயித்திலை பிள்ளை இருக்கேக்கம் விளையாடிறதாம் எண்டு சொல்லிறவை. எந்தக்கும்பலைக் கலைச்சுத் தொடங்கோணும், குலைக்கிற கும்பலில எத்தினை புளியங்கொட்டை இருக்கு , இந்த முறை விட்டு அடுத்த முறை எப்படி கும்பல் எடுக்கிறது எண்டது, bank இல எப்ப FD போடிறது, எப்ப எடுக்கிறது எண்ட கணக்குத் தான்.

கை பாண்டீலேம் கண் cards இலேம் இருக்க cards விளையாடின பாலகுமார் எழும்பிச்சது, பாத்துக்கொண்டிருந்த நான் ஓடிப்போய் அதில இருந்தன் . நாலு பேரா ஆறு பேரா எண்டு கேட்டிட்டு cards ஐப் பிரிக்கத் தொடங்கினார் கிருபான்டை அப்பா. பக்கத்தில இருந்து பாத்துத் தான் 304 பழகிறது ஒருத்தரும் கோச்சிங் போறேல்லை . நாட்டு நிலைமையால வெளிக்கிடாமல் இருக்கேக்க வீட்டை பொழுது போக்கு இது தான்.

மத்தியானம் சாப்பிட்டாப் பிறகு பின்னேரம் தேத்தண்ணி வரை cards தான். யாழ்ப்பணத்தின்டை தேசிய விளையாட்ட வரவேண்டிய 304 சில பல அரசியல் காரணங்களால் ஒலிம்பிக்கில் இல்லாமல் போனது கவலையான விசயம். பழைய பேப்பரை விரிச்சு வைச்சிட்டு card பக்கற்றோட வந்து ராசியான பக்கம் பாத்து தான் விளயாட இருக்கிறது. கேள்வி (ஐம்பது) உதவி (அறுவது) எண்டு கேட்டிட்டு துரும்பு வைக்கேக்க ஒருத்தரும் பாக்காம கவிக்கிறது , அதையும் சப்பாணி கட்டின காலுக்க கீழ வைக்கிறது, கவலைப்பட்டு துரும்பைக் காட்டிறது மனமில்லாமல் jack ஐ இறக்கிறது எண்டு தான் தொடங்கும் .

கொஞ்சம் கொஞ்சமாத்தான் பிழைவிட்டு பழகிறது. அம்மம்மா எப்பவும் serious ஆத்தான் விளையாடுவா, கள்ளத்துரும்பு, கம்மாரிசில பிளை பிடிக்கிறது, மடக்கையில cards சரியா எண்ணிப் பிடிக்கிறது எண்டு பயங்கர sharp.

ஆச்சி் அதுக்கும் மேல கேள்வி கேக்கேக்க மணலை (9) கவிள், வீறு (Jack) வைச்சுக் கொண்டு விளையாடத எண்டு பல tricks சொல்லித்தருவா.

பிடி அடுக்கி, போன முறை cards போன ஒழுங்கு ஞாபகப்படுத்தி, துரும்பு மட்டும் இல்லாமல் எல்லாக் cards ஐயும் எண்ணி , மற்றவன் எடுத்த points ஐ மனதில வைச்சு விளையாடி கடைசிப் பந்தில six அடிக்கிற தோனி மாதிரி எழும்பி கம்மாரிசு அடிக்க , victory declare பண்ண முதல் மூன்றாவது நடுவர் மாதிரி எல்லாக்கையையும் விரிச்சு பாத்துத்தான் வெற்றிக்காட்ஸ் குடுப்பினம்.

சங்கேத பரிபாசை காதலிலும் பாக்க cards இல அதிகம். காதைச் சொரிஞ்சா கலாவரை(clubs ), கழுத்தை திருப்பினா ஸ்கோப்பன்(spades). இருமினா இறக்கினது துரும்பு, தும்மினா வெட்டில்லை எண்டு பல விசயங்கள் இருந்தது ஆனால் partner மாறி இருந்தா எல்லாம் out.

Cards அடிக்கிறதும் ஒரு காம்ப் அடிக்கிற மாதிரித்தான். ரெக்கி எடுத்து, எதிரீன்டை எத்தனை துரும்பு இருக்கு, எத்தினை jack இருக்கு அவரின்டை cards strength என்ன எண்டு பாத்து, அவரின்டை கையாலயே இறக்கப் பண்ண எப்பிடி மேவிறது, அவரின்டை எந்தக் cards ஐ வெட்டிறது எதை விடிறது, எதைக் கழிக்கிறது எண்டு கனக்க விசயம் இருக்கு. காம்ப் அடிக்கிறதோ cards அடிக்கிறதோ அடிச்சா கம்மாரிசு அடிக்கோணும்.

ஆனாலும் கம்மாரிசு அடிக்கிற நேரத்தில மேலேம் சத்தம் கேட்க FM radio வும் கரகரக்க கம்மாரிசும் அடிக்கேலாமப் போனது சில நேரத்தில்.

வைத்திய நிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கர் – யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்