Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

6 minutes read

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி பயணப்படுகிறேன். மீண்டும் அந்த வாழ்வைநோக்கி, து ஒரு படம் அல்ல அது தான் நான்…

-வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்

“இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும், கழுவிப்போட்டு அரை “ எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “எண்டு பேச்சுத் தான் விழும்.

வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை, கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும் விளக்கீட்டுக்கு ஒரு பந்தம் வைக்கிறது வழக்கம். ஊர் வழியவும் தனிக்க கொட்டிலுக்க தான் அம்மி, உரல் ஆட்டுக்கல் எல்லாம் இருக்கும். ஒதுக்கபட்ட வாழ்க்கை சில உயர்திணைக்கு மட்டுமில்லை அஃறினைக்கும் வைச்சது ஏனெண்டு தெரியாது.

“அம்மி பொழியிறது… கத்தி சாணை “ எண்டு ரோட்டால கத்திக்கொண்டு போனவனைப் பிடிச்சு போன மாசம் தான் அம்மி பொழிஞ்சது. நடுவில பூ design போட்டு பொழிஞ்சு தந்தவன். பொழிஞ்ச அம்மியை ரெண்டு தரம் பழைய தேங்காய்ப்பூ வைச்சு அரைச்சு பொழிஞ்ச தூசு மண் எல்லாம் தேச்சு கழுவோணும், இருந்தாலும் ரெண்டு நாளைக்கு மண் கடிபடும்.

அம்மியோட குழவியையும் சேத்துத் தான் பொழியிறது. சில குழவிகள் ரெண்டு பக்கமும் முனை மழுங்கி இருக்கும். மற்றதுகள் ஒரு பக்கம் முனை மழுங்கி மற்றப்பக்கம் வட்டமாயும் இருக்கும். குழவியை பிடிச்சு அம்மியின்டை நீளத்துக்கு இழுத்து அரைக்கேக்க ,முதல்ல முழங்கையை நீட்டி குழவியைத் தள்ளி பிறகு நாரியால முன்னுக்கு சரிய குழவியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகும்.

திருப்பி இழுக்கேக்க இறுக்காமலும் அதேவேளை உருளாமலும் மெல்ல குழவியைப் பிடிச்சி தோள்மூட்டால இழுத்து நாரியை நிமித்த குழவி திருப்பி வர “சம்பல் அரைக்கயில என் மனசை அரைச்சவளே” எண்ட இளையராஜா பாட்டு ஓடும். குழவியை உருட்டி உருட்டி அரைக்கிறேல்லை ஆனாலும் ஒவ்வொரு இழுவைக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாத் திரும்பும் நல்லூர் சப்பறம் மாதிரி.

வாங்குப்பலகையில குந்திக்கொண்டிருந்து நனையப் போட்ட எட்டு பெரிய செத்த மிளகாயை நடுவில வைச்சு அதோட சிரட்டையில இருக்கிற கல்லு உப்பை சேத்து குழவியை ரெண்டு பக்கமும் பிடிச்சு சத்தம் வாற மாதிர கடகட எண்டு தட்டி மிளகாயை சப்பையாக்கீட்டு மிளகாய் ஊறப்போட்டிருந்த தண்ணீல கையை நனைச்சிட்டு அந்த நுனி விரலால சொட்டிற தண்ணியை அதுக்க மேல விட்டிட்டு நாலு உரிச்ச வெங்காயத்தை வைச்சு நசிச்சுக்கொண்டு இழுத்து அரைக்கத் தொடங்கினன்.

நாலு தரம் கொஞ்சம் இழுத்து அரைக்க மிளகாய் அருவல் நொருவலா வந்திச்சுது. குழவியால நசிக்கேக்க பறந்த வெங்காயத்தை தேடி எடுத்து தண்ணீல அலசீட்டு திருப்பியும் நசிச்சு கருவப்பலையையும் சேத்து அரைச்சு எல்லாம் கலந்து வர அதை எதிர்ப்பக்கமாத் தள்ளிப்போட்டு ,தட்டில இருக்கிற தேங்காய்ப்பூவை தும்பில்லாம எடுத்து நடு அம்மீல வைச்சு மிளகாயோட சேத்து ரெண்டு இழுத்தரைக்க செம்மை வெண்மையை ஆட்கொண்டது.

தேங்காய் பூவை சேத்து அரைக்கேக்க அம்மிக்கும் நோகாம தேங்காய்ப் பூவுக்கும் நோகாம அரைக்க வேணும், இல்லாட்டி சம்பல் குழையலாத்தான் வரும். கடைசீல கொட்டை எடுத்த ரெண்டு பழப்புளியை சேத்து அரைச்சிட்டு குழவி அம்மி எல்லாம் வழிச்சு தட்டில போட்டுக் கொண்டு எழும்ப அண்ணா ரோஸ் பாணோட உள்ள வர, “ அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்” சந்தர்ப்பம் கூறி விளக்குக எண்டு படிச்சது தான் ஞாபகம் வந்திச்சிது.

ரொலக்ஸ் பேக்கரீல போடுற அச்சுப் பாண், ரோஸ் பாண் (அதுக்கு நீங்க இங்கலீசில என்ன பேர் வைச்சாலும் நமக்கு ரோஸ் பாண் தான்) வெந்து வாற மணம் காலமை alarm அடிச்ச மாதிரி எழுப்பும். சம்பலை விட்டா பாணுக்கு பழைய மீன் குளம்பு தான் பேரின்ப பெரு வாழ்வைத்தரும்.

“ சீலையை வித்தாவது சீலா வாங்கு எண்டு சொல்லிறவை “ எண்ட மீன் பெட்டிக்காரன்டை கதையைக் கேட்டு, வாங்கிக்கொண்டு வந்து மீன் bag ஐ வீட்டை குடுத்தன். அரிவாளில செதில் சீவி, துண்டறுத்து பிறகு கழுவி எடுத்துக் கொண்டந்து மண்சட்டீல வைக்கிற மீன்குழம்பு அடுத்த நாள் காலமை வரைக்கும் demand இல இருக்கும். குழம்பின்டை ருசி அரைச்சுப்போடிற தேங்காய் கூட்டில தான் இருக்கு.

அம்மம்மா ஒரு காலை மடக்கி மற்றதை நீட்டி சுளகில பிடைக்கிற மாதிரி இருந்து தான் அரைப்பா. மீன் குழம்புக்கு கூட்டரைக்குறதில அவ expert. தேங்காயை அரைக்கேக்க மிளகாயத்தூள் உப்புச்சேத்து குழவியை இறுக்கிப் பிடிச்சு தேங்காய்ப்பூவை அமத்தி அரைக்கப் பட்டுப்போல கூட்டு வரும்.

தேங்காய் அரைச்சு பிறகு மிளகு, சின்னச்சீரகம், உள்ளி எல்லாம் சேத்து அதையும் அரைச்சு எடுத்து வைச்சிட்டுத்தான் குழம்பு வைக்கத் தொடங்கிறது. கப்பிப்பாலில புளிவிட்டு வெங்காயம், மிளகாய் உப்புப் போட்டு மண்சட்டீல விட்டு கொதிக்கத் தொடங்க கச்சேரி தொடங்கும். முதல் கொதியோட மீனையும் அரைச்ச கூட்டையும் போட்டு கடைசீல சீரக உருண்டையைப் போட்டு கொதிக்க விட மீனின் ஆத்மா சாந்தி அடைஞ்சு குழம்போட ஐக்கியமாகும்.

அவசரத்துக்கு அம்மி உரலாயும் திரிகையாயும் மாறும். கை உரல் வர முதல் ஏலக்காயில இருந்து இஞ்சிவரை நசிச்சோ குத்தியோ போடிறதெண்டா அம்மீல தான். குழவியை வைச்சு தட்டுப் பெட்டீல பழைய பேப்பரைப் போட்டிட்டு பயறு, உழுந்து கோது உடைக்கிறதும் சில வேளை அம்மீல வைச்சு மாவும் அரைக்கிறது.

சாமத்திய வீட்டில மொம்பிளைக்கு, குழவியை வைச்சுக்கொண்டு நிக்க விடுறதாம் எண்டு ஆச்சி சொல்லிறவ. ஆலாத்தி முடியும் வரை அதைத் தாங்கிக்கொண்டு நிண்டா நாளைக்கு எதையும் தாங்குவாளாம் எண்டதுக்குத்தான் அப்பிடி எண்டும் சொல்லிறவ. அது பிறகு குடமாகி, பிறகு செம்பாகி இப்ப Make up காரர் குடுக்கிற bouquet ஆக மாறீட்டுது.

சாமத்தியம் தாண்டி கலியாணத்திலேம் அம்மிக்கு இடம் இருக்கு மிதி படுறதுக்கு. மச்சாளின்டை கலியாண வீடண்டு விடாம மழை பெய்யேக்க, மாமி வருண பகவானுக்கு நேந்து தேங்காய் உடைச்சு வைச்சிட்டு, ”அப்பவும் உனக்குச் சொன்னான் அம்மீல வைச்ச தேங்காய்ப் பூவை எடுத்துச் சாப்பிடாதை எண்டு இப்ப பார் மழை விடமாட்டன் எண்டிது“ எண்டு மச்சாளைப் பேச, அண்டைக்கு நானும் சம்பல் அரைக்கேக் சாப்பட்டதை நெச்சு கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினன் நல்ல வேளை மனிசி அம்மிப்பக்கம் போகாத படியா மழை பெய்யேல்லை.

வைத்திய நிபுணர் மருத்துவர் ரி. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More