Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

6 minutes read

“நாளை யாழ்குடா நாடு முழுவதும் ஹர்த்தால்”எண்டு முரசொலியில முன்பக்கம் வாசிச்சவுடன் எனக்குள் ஒரு குறுகுறுப்பு. ஏன் இந்த ஹர்த்தால், ஹர்த்தால் எண்டால் என்ன, யார் இதை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள், யாரை எல்லாம் ஹர்த்தால் செய்யச் சொல்லுறார்கள் எண்ட சிந்தனை ஒண்டும் இல்லை, ஆனாலும் எனக்குள் இருந்த அந்த ஆர்வம் அம்மாவுக்கு தொற்ற முதல் நான் வெளிக்கிட்டன். இண்டைக்காவது கொஞ்சம் இருந்து மெல்லச் சாப்பிடன் எண்டு வீட்டை சொன்னதை எல்லாம் கவனிக்காம, அவசரமா வெளிக்கிட்டன் ஹர்த்தாலை எப்பிடி முழுமையா அமுல் படுத்துவது எண்டு.

நல்ல ஞாபகம், நிசாகரன் லண்டனுக்கு படிக்கப் போய் அனுப்பின முதலாவது கடிதத்தில் “ மச்சான் இங்கேம் உங்க மாதிரித்தான் திடீரெண்டு holiday எண்டு அறிவிச்சா, விசிலடிச்சு கூக்காட்டுறாங்கள்” எண்டு எழுதி இருந்தான்.

படிக்கேக்க மகிழ்ச்சி தாறது ரெண்டே ரெண்டு விசயம், ஒண்டு திடீரெண்டு பாடம் free வாத்தி வரேல்லை எண்டதும், மற்றது நாளைக்கு ஹர்த்தால் பள்ளிக்கூடம் இல்லை எண்டிறதும் தான்.

“நான் போட்டு வாறன் எண்டு சொல்லீட்டு“ அம்மா ஓமெண்ட முதல் வெளிக்கிட்டிட வேணும் இல்லாட்டி வாசிக்காமலே sign பண்ணிற bank agreement மாதிரி அம்மான்டை condition list பெரிசா இருக்கும். மத்தியானம் வந்து உடுப்புத் தோய்க்கிறது, பின்னால வாழைக்கு பாத்தி வெட்டிறது, தூசு தட்டிறது ஒம்பதாம் வாய்ப்பாடு, ரெண்டு தேவாரம், English spelling பாடமாக்கிறது எண்டு மனிசி போற mood ஐயே குளப்பீடும். அவைக்கு ஒரே கருத்துத்தான் “ விளையாட்டு படிப்பைக் கெடுக்கும், படிப்பெண்டாக் கஸ்டப்பட்டு படிக்கோணும்“.

ஹர்த்தால் அண்டு சைக்கிளில எங்கேம் தூரப்போயிடுவன் எண்டு சைக்கிளைப் பூட்டி துறப்பை ஒளிச்சு வைச்சிட்டினம். மதிலால நடந்து போய் பக்கத்து ஒழுங்கை நவாஸ் குறூப்பாட சேர cricket தொடங்கிச்சுது. சிவசொரூபன் open bowling, அரவிந்தன் open batting எண்டு team ஐப் போட்டு வழமை போல எங்களை கடைசிக்குத் தள்ளி விட்டாங்கள். எப்பவும் கடைசிவரை batting தர மாட்டாங்கள் அதுகும் ஆக்கள் கூட எண்டால் team இலயே இல்லை. Last-man I chance கேட்டு ஒருக்கா என்னை அவட்டாக்கேலாம கஸ்டப்பட்டாப்பிறகு தான் ஒரு மாதிரி team இல சேத்தாங்கள், reserve playerஆய். எங்கடை சாபம் பலிக்க ரெண்டாவது ஓவரிலயே அடிச்ச பந்து பக்கத்து வெறும் வளவுக்கை விழுந்து துலைஞ்சு போக, பத்தைக்குள்ள பந்தில்லாத ஆத்திரத்தை பக்கத்து தென்னை மரத்தில காட்டினம்.

இவ்வளவு நேரமும் கடைசியாய் இருந்த நான் இப்ப open batsman ஆ வந்தன் வேற ஆக்கள் இல்லாத படியால். நான் மரம் ஏறி இளனீர், தேங்காய் எல்லாம் புடுங்கிப் போட, cricket plan மாறிச்சது. தேங்காயை உரிச்சு பக்கத்து வீட்டையே வித்து, அதில முன் ஒழுங்கையில ஜெயந்தன் வீட்டை கோழி வாங்கி, செல்லடிப் பயத்தில வேலணைக்கு வீட்டை விட்டுப் போன lecturer வீட்டை ஆக்கிரமிச்சம்.

ஒரு வீட்டை மிளகாய்த்தூள், ஓரு வீட்டை வெங்காயம் எண்டு உரிமையோட களவெடுத்து ஒரு சமத்துவக் கறிவைக்க, என்னத்தோட கறியைச் சாப்பிடிற எண்டு கேள்வி வந்திச்சிது. சந்திக்கடையில ரொட்டி வாங்குவம் எண்டு முடிவெடுக்க, நான் போறன் எண்டு வெளிக்கிட்ட கணேஸ்குமார் அண்ணையையும், சிவசொரூபனையும் ரொட்டியோட வருவினம் எண்டு வெந்த கோழியும், வெறும் வைத்தோட நாங்களும் பாத்துக் கொண்டிருந்தம்.

ஓடிப்போன ஐஞ்சு நிமிசத்தூரம் ஆனால் அரை மணித்தியாலமாக் காணேல்லை, சுடச்சுட ரொட்டி போட்டுக் கொண்டு வாறாங்களோ எண்டு யோசிக்க ஒழுங்கையால நடந்து போன ரெண்டு பேரும் மதில் பாஞ்சு ஓடி வந்து, “ பங்கர் வெட்டப் பிடிக்கப் பாத்தாங்கள் நல்ல வேளை அருந்தப்பு” எண்டு விவரிக்க, ரொட்டி போச்சே எண்டு நவாஸ் கவலைப்படத் தொடங்கினான். கொண்ட கொள்கையில மாறக்குடாது எப்பிடியும் ரொட்டி தான் சாப்பாடு எண்டு ஆரோ சொல்ல , தினேசின்னடை அப்பா பாங் மனேஜர் அரை நேரத்தோட பாங்கை பூட்டிட்டு வந்தார். ஆபத்துக்குப் பாவமில்லை எண்டு அவரைக் கேக்க தம்பி எனக்கும் சாப்பாடு வேண்டப்போறன், வாங்கித்தாறன் எண்டு சொல்லி காலத்தால் அவர் செய்த உதவிக்கு நன்றியாக அடுத்தமுறை அவர் வீட்டுக் கோழியையே பிடிச்சு சமைச்சனாங்கள்.

ஹர்த்தால் இன்னும் தொடரக் காலமைச் சாப்பாடு முடிஞ்ச உடனயே set ஆகி cards, carom எண்டு தொடங்கினம். நெல்லிக்காய், மாங்காய், புளியங்காய் எண்டு எல்லா மரத்துக் காயும் வயித்தை நிரப்பிச்சுது. உழைக்கும் வர்க்கத்து உறுப்பினர்களின் உபசரிப்பால் சில நேரம் ரொட்டியும் கறியும் வாங்கி பிச்சுக்கொத்தி (கொத்து ) சாப்பிட்டம். ஆர்வத்தில கனக்க தேங்காயைப் புடுங்கீட்டு விக்கப் பாக்க,” sorry கள்ளத் தேங்காய் வாங்க மாட்டம் “ எண்டு அக்கம் பக்கம் சனம் சொல்லிச்சது. கொம்பனிக்கு நட்டம் வராம இருக்க, பால் புளிஞ்சு தொதல் கிண்ட, வந்தது கழியா தொதலா எண்டு ஆராயாமல் சட்டியோட சாப்பிட்டம்.

ரெண்டு நாள் ஹர்த்தால் முடியாமல், தொடர்ந்து பள்ளிக்கூடத்தைப் பூட்ட, தென்னை எல்லாம் மொட்டையாக, கோழி எல்லாம் கூட்டுக்க பாதுகாக்கப்பட சாப்பட்டுக்கு வீட்டை நம்பி இருக்க வேண்டிய நிலை வந்தது.

ரெண்டு நாளில வாறகிழமை பள்ளிக்கூடம் திறக்குதாம் எண்டு பேப்பர் தலைப்புப் போட, எங்கடை நிஜ உலகத்தில இருந்து கனவுலகத்திக்கு (பெற்றோரின் கனவு) போக ரெடியானோம்.

வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் – யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More