செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

7 minutes read

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி பயணப்படுகிறேன். மீண்டும் அந்த வாழ்வைநோக்கி, து ஒரு படம் அல்ல அது தான் நான்…

-வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்

சாரத்தை இழுத்து தலையப்போத்த காலும், காலைப் போத்த காதும் குளிர்ந்திச்சுது. “அங்க பார் பக்கத்து வீட்டு அண்ணா இன்னும் நித்திரை கொள்ளாமல் இரவிரவாப் படிக்கிறான், நீ எழும்பாட்டி வாளியோட தண்ணியை ஊத்துவன்” எண்டு திட்டின படி அம்மா போனா. 

மழை பெய்யேக்க எழும்பீட்டு திருப்பி ஒருக்காப் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு படுக்கிற சுகம் இருக்குதே அது ……. அப்ப மனிசியை சுழட்டேக்க  ஒழங்கை வளிய நிண்டு மனிசியோட கதைக்கிற காலத்தில வந்து பத்து நிமிசத்திலயே மனிசி அவசரப்படும் “ யாரும் பாக்க முதல் வெளிக்கிடிறன் எண்டு” ஒரு ஐஞ்சு நிமிசம் எண்டு சொல்லிச்சொல்லி நிண்டு கதைக்கிறதும் அம்மாட்டை இதே dialog ஐ இன்னும் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு சொல்லி மழைக்குளிருக்க திருப்பித் திருப்பி படுக்கிறதும் கனவிலையும்  இனிக்கும்.  ரெண்டும் வேற ஆனாலும் அது தாறது ஒரே சுகம் power nap மாதிரி. 

கிணத்தடீல கரியைத்தேடினா பல்லு மினுக்க காணேல்லை. கரிக்கட்டை துண்டை எடுத்து கொடுப்புப் பல்லால அருவல் நொருவல் ஆக்கீ மினுக்கீட்டு நிக்க, “நேற்றைக்கும் குளிக்கேல்லை இண்டைக்கு குளிச்சிட்டு வா “ எண்ட order வந்திச்சிது.

 நடுங்கி நடுங்கி தண்ணியை அள்ளி ஊத்தவா விடவா எண்டு ஒருக்கா யோசிக்க. என்ன குளிக்கிற சத்தத்தைக் காணேல்லை எண்ட கிணத்தடி CCTV ஐ பாத்து கொண்டிருந்த குரல் வரவும் தண்ணி வாளி தலையில கவிண்டிச்சு. சூரியன் ஏற சுத்தி வர இருந்த மரம் இலைகளில இருந்து புகை ஆவியாக வர, நானும் ரஜனிகாந் மாதிரி வாயால விட்ட புகை வளையம் ஆகாமலே போச்சுது. 

முதல் வாளி மட்டும் குளிர மற்ற வாளி எப்படி சூடா இருக்கது எண்டு சந்தேகம் இடைக்கிடை வாறது, கன்னியா மாதிரி வெந்நீர் ஊத்து இருக்கிறதோ எண்டு எட்டியும் பாத்து இருக்கிறன் . சவக்காரம் எண்டது அப்ப தோயக்க மட்டுமே பயன் படுத்திறதெண்டு நாங்கள்  நினைச்சபடியால் interval விடாமத் தான்  குளிக்கிறது.  

குளிச்சிட்டு வீட்டுக்க போகேக்க ஒரு full body scan எடுத்து, சாரம் நனையாமல் குளிக்கிறது உலகத்தில நீ ஒருத்தன் தான், எப்பிடி முதுகில தண்ணியே படாம குளிக்கிறாய்“ எண்ட கன  கேள்வி வாற படியால் குளிக்கேக்க சாரத்தை  முழுசா நனையப் பண்ணிறதும் முதுகில தண்ணி ஊத்திறதும் முக்கியமன வேலையா இருந்தது . எனக்கென்னவோ அப்ப சுமந்த கன சுமைகளில மழை காலம் எண்டால் காலைக்கடனும் ஒரு சுமையா இருந்திச்சிது . காலைக்கடன்களை அடுத்த நாளுக்கு கடன் வைச்சு செய்யிறதும் இருந்தது குளிக்கிறது உட்பட.

குளிக்கப் போகேக்க துவாயைக் கொண்டு போகாமல் குளிச்சிட்டு வந்து நிண்டு குளிருக்க நடுங்கேக்க துவாயைத்தாறவன் பாஞ்சாலியின் கண்ணன் மாதிரித் தெரிவான்,  “உன்னை ஆர் இப்ப தோயச்சொன்னது“  எண்டு “குளிக்கப்போ “ எண்ட வாயே பேசத்தொடங்கும்.

இதை எல்லாம் கணக்கெடுக்காம போக குசினிக்குள்ள இருந்து வெங்காயம் மிளகாய் போட்டுச் சுட்ட ரொட்டியும் சம்பலும் கொண்டு போன தம்பியைக்  கண்டு alert ஆனன் ஏனெண்டால் பங்கீட்டில எல்லாருக்கும் ரெண்டு ரொட்டி  தான் வாறது. நான் எப்பிடி மூண்டை எடுக்கலாம் எண்டு யோசிச்சுக் களைச்சுப் போய் கடைசி ஆயுதத்தை எடுத்தன்” அம்மான்டை ஒரு ரொட்டி எனக்கு”.  மழை எண்டால் எல்லாருக்கும் பசிக்குமா இல்லை எனக்கு மட்டுமா, வயித்திக்குள்ள மழை meter இருக்கா எண்ட ஆராய்ச்சியைத் தவிர்தது அம்மாவின் பங்கில் பாதியை புடுங்கிச் சாப்பிட, பள்ளிக்கூடம் இல்லையாம் இண்டைக்கு புயல் கரையக்கடக்குதாம் எண்டு ஈழநாடு சொல்ல மீண்டும் தயார் ஆனேன் அடுத்த நித்திரைக்கு. 

நேற்றைக்கு கடலுக்கு ஆக்கள் போயிருக்க மாட்டினம் மூண்டு நாளைக்கு மழை இருக்கும்  இண்டுக்கு கருவாட்டை வைப்பம் முருங்கைக்காய் இருக்கிதோ தெரியேல்லை,  நாளைக்கு முட்டைக்ககறி எண்டு அம்மம்மா தன்டை department ஐ பற்றி கவலைப்பட்டா. 

மழை கொட்டத் தொடங்க அதை ஐன்னலுக்கால பாக்கத் தொடங்கினன். பெய்யிற மழைக்கும் ஓட்டால ஒழுகிற மழைக்கும் போட்டி வர,  ஓட்டால ஒழுகிறதை வெல்ல, மழை அடை மழை யாகி ஓட்டு வெடிப்புக்களால நேர வீட்டுக்க இறங்கிச்சிது. வழமையா ஒழுகிற இடங்களில சட்டி வாளி எல்லாம் வைக்க சில புது வரவுகள் கூப்பிடாமல் உள்ள வந்தச்சிது. உவன் தான் அண்டைக்கும் பட்டம் விடிறன் எண்டு ஏறி நிண்டவன் எண்ட எட்டப்பனின் காட்டிக்கொடுப்பில் நான் மாட்டுப்பட , இல்லை இந்த மழைக்கு எல்லா இடமும் ஒழுகுது எண்டு ஆச்சியின் உதவிக்கரம் என்னைக் காப்பாத்திச்சுது. ஓழுகிற அளவுக்கு ஏத்த மாதிரி சட்டிகள் இடம்மாற, பழைய சாக்குகளும் வேட்டிகளும் அலுமாரிக்குள்ளால வெளீல வந்திச்சுது. 

சட்டையைப் போடு, குளிருக்க நிக்காத, சூடா இந்தப் பிளேன் ரீயைக் குடி , இந்தா போக்கிற bedsheet, பின்னேரம் பகோடா சுடுவம்,  இரவுக்கு பாண் எண்டு அண்டைக்கு முழுக்க நல்ல நல்ல கருத்துக்கள் வர “ நல்லார் ஒருவர் அல்ல பலர் இருப்பதால் தான் இந்த அடை மழை எண்டு விளங்கிச்சுது. 

ஊறிற நிலத்துக்கு சாக்கும் துணியும் போட்டு மூட நிலத்திக்குப் போட்ட சிவப்புச் சாயம் சாக்குக்குக்கால பரவி காலில ஏறிச்சுது. நில ஈரம் இப்ப சிவரையும் ஊறத்தொடங்கிச்சுது. ஊறின சிவர் வெளி மழை வெள்ளத்தின் அளவு  meter மாதிரி  வெள்ளம் கூட உள்ளுக்க ஊறின சிவரின் உயரம் கூட இருக்கும். 

கதவைத் திறந்தா மழைமட்டும் தெரிஞ்சது, வாசலில நனைஞ்ச கோழி என்னை நாளைக்கு வெட்டினாலும் பரவாயில்லை இந்த மழைக்கு வெளீல துரத்தாத எண்ட மாதிரிப் பாத்திச்சுது. கொஞ்சம் நனைஞ்ச காகம் மரத்திலேயே மழை படாத இடத்தை கண்டு பிடிச்சு் நீயும் காகக் குளியல் தானே குளிச்சனி எண்ட மாதிரி என்னைப் பாக்க நான் கவனிக்காம திரும்பினன்.  

மழை பெய்யேக்க வாற சத்தம் எங்க இருந்து வாறதெண்டு ஆராய்ச்சி ஏன் யாரும் செய்யேல்லை எண்டு தெரியேல்லை. தகரக்கொட்டிலில விழுற சத்தம் சைக்கிள் கம்பி வெடி மாதிரி இருக்கும் ஆனால்  காதுக்கு இதமா இருக்காது. முன் முத்தத்தில விழிற மழை  ஒண்டோடொண்டு முட்டியும் தனியவும் நிலத்தில விழறது சோளம் வறுக்கேக்க பொரியிற மாதிரி சத்தம் இதமாயும் அந்த புழுதி மணமாயும் இருக்கும். ஒரே மழையா இருந்தாலும் பகலில ரசிக்கிற ரசனையும் இரவில ரசிக்கிற ரசனையும் வேற, அதுகும் மனிசி மாதிரித்தான். இரண்டுமே பகலில் ஒரு சிலிர்ப்பையும் இரவில் கதகதப்பான அணைப்பையும் தரும். 

இரவு படுத்திருந்து ஓட்டில விழுகிற மழைச்சத்தம் கேக்கிறதும் home theatre இல ARR இன்டை பாட்டுக் கேக்கிற மாதிரி. நேர ஓட்டில விழுற  மழை ஒரு சத்தம், பக்கத்து அறை ஓட்டில விழிறது ஒரு சத்தம். சிவரில அடிக்கிற சாரல் ஒரு சத்தம்,  காத்து ஒரு சத்தம், காத்தில முறியப்போற  மாதிரி ஆடுற மரம் ஒரு சத்தம், கூரையில ஓட்டைக்கால ஒழுகிறது ஒரு சத்தம்,  அதோட சேந்து கத்திற மண்டுவம் ஒரு சத்தம், பெய்யிற மழை அதுகும் stereo effect மாதிரி மழை கூடிக்குறையேக்க ஒரு சத்தம் எண்டு உண்மையான ஒரு இசை மழை கேக்கும். 

இந்த சந்தங்களை கேட்டுக் கொண்டு படுக்க, முகட்டோடு மூலைக்கால விழுகிற ரெண்டு துளி காலில படும், அதுக்கு விலத்தி சிவரில சாய முதுகு பக்கம் ஒரு ஜஸ் அட்டை ஊரிற மாதிரி இருக்கும், இந்தக் குளிரோட காலுக்க ஒரு தலணியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு போத்துப் படுக்க  …. கனவே இல்லாமல் கனவிலேம் நித்திரை வரும். 

வைத்தியநிபுணர் ரி. கோபிசங்கர்

யாழப்பாணம்.

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More