இலங்கையின் மீது பொருளாதாரத் தடை….???இலங்கையின் மீது பொருளாதாரத் தடை….???

 

இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அரசல் புரசலாக கதைகள் கட்டிவிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் தடை குறித்த எச்சரிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்களின் அடிப்படையில் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை விதித்தால் அதற்காக அடி பணியப் போவதில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் சமாதானம் நிலைநாட்டப் பட்டுள்ளதாகவும், மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழுத்தங்களுக்காக அடிபணிந்து செயற்பட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்க்க அனைவரும் அணி திரள வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கூற்றை அடுத்து இவ்வாறான தடையொன்று இடப்படுவது சாத்தியமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயதீன விசாரணையொன்றைச் செய்ய அரசு மறுத்துவருகின்றது. இவ்வாறு இலங்கை அரசு மறுத்துவரும் வேளையில் அதற்குப் பக்கபலமாக செயற்படப் பலநாடுகள் கோதாவில் குதித்துள்ளன. அந்நாடுகளை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்க முடிகின்றது.

முதலாவது வகை நாடுகள் இலங்கையில் போர் நடைபெற்ற போது அப்போருக்கான ஆயத தளபாட வசதிகளை வழங்கிய நாடுகள் ஆகும் .இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, சர்வதேச விசாரணைக்கு எதிராக இருக்கின்றமைக்கு மிக முக்கிய காரணம் என்னவாக? இருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் கிடைக்கக்கூடிய பதில்

1. இறுதிப்போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருந்தால்

2. அவ்வாயுதங்கள் நிச்சயமாக இலங்கைக்குச் சொந்தமானவையாக இருக்காதென்பதால்

3. அதனை வழங்கிய நாடுகள் எவை என்பதும், அவை தற்போதும் அவ்வாயுதங்களைப் பாவனையில் வைத்திருக்கின்றன என்பதும் வெளிவந்துவிடும் என்ற காரணமாகத் தான் இருக்கலாம்.

இரண்டாவது வகை நாடுகள் அமெரிக்காவையும் அந்நாட்டின் கூட்டணி நாடுகளையும் தமக்குப் பொது எதிரியாகக் கொண்ட நாடுகள் ஆகும். அந்நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பது எப்படியெனில் அமெரிக்கா எதற்கு ஆதரவு தெரிவிக்கின்றதோ அதனை எதிர்ப்பதும் அமெரிக்கக் கூட்டணி எவற்றை எதிர்க்கின்றனவோ அவற்றை ஆதரிப்பதும் என்ற கொள்கைப் பாட்டுடனேயே.

எனவே இவ்விரு வகை நாடுகளினதும் ஆதரவுடன் இலங்கை அரசு வெளிநாடுகளில் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதுடன் இரகசிய நகர்வுகள் பலவற்றையும் முன்னெடுத்து வருகின்றது.

இந் நிலையில் உலக அரங்கில் பிளவைக் காட்டி நிற்கும் அரசு உள்ளக அரங்கில் தமது நிமிர்வைக் காட்டி அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிவோம்|| என்ற வீர கர்ஜனையைச் செய்து வருகின்றது. அவ்வாறான அரசியல் தந்திரத்தின் ஒரு அங்கமாகவே இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை என்ற கதைகளை அரசோ அலலது அரச சார்பு அமைப்புகளோ கட்டவிழ்த்து வருகின்றன. ஏனெனில் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கின்ற விடயமே பொருளாதாரத் தடை ஆகும். பொருளாதாரத் தடையினால் இலங்கை மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுகள் இன்றி பாதிப்படைவர் என்பதே உண்மையானது. யுத்தத்தால் சின்னாபின்னமாகிப் போயுள்ள தமிழ் மக்களைக் கடுமையாக அந்த பொருளாதாரத் தடை பாதிக்கும்.

எனவே அவ்வாறான தடையொன்று முன்மொழியப்படுமானால் அதனை எதிர்க்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு தமிழருக்கும் உருவாகிவிடும். தமிழரின் அழிவிற்கு நியாயம் வழங்க முன்வர முயற்சிக்கும் சர்வதேசம் தமது நடவடிக்கையால் அதே தமிழரின் எதிர்ப்பலைகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையை இப் பொருளாதாரத் தடை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு போதும் சர்வதேசம் பொருளாதாரத் தடையினை உடனடியாக முன்மொழியப் போவதில்லை. இவ்வாறானதொரு தெளிவான புரிதலில் போருளாதாரத் தடையொன்று வரலாம்|| என்ற கதை யாரால் கிளப்பிவிடப்பட்டிருக்கலாம் என்பதை புரிந்து கொள்தல் இலகுவானதே. பொருளாதாரத் தடை என்னும் வார்த்தைகளைக் கொண்டு பேரினவாதிகள் பொதுமக்களை இன்னும் உணர்ச்சி வசப்படுத்த முயற்சிக்கின்றார்கள். கொழுந்து விட்டெரியும் உணர்ச்சிப் புயலில் தேர்தல்களில் வாக்கு வேட்டை என்னவோ சாத்தியமாகலாம்.

ஆனால் பொருளாதாரத் தடை என்பது அமாவாசை நாட்களில் வேப்ப மரத்தடியில் தெரியும் பேய் போன்றதே…. பயப்படுத்தலாமே தவிர பயன்படுத்த முடியாது.

 

 

– மாயன் |    இலங்கை –

 

ஆசிரியர்