April 1, 2023 5:43 pm

ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானி: பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானி: பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனதியான வாழ்வு அமைத்து முன்மாதிரியாக வாழ்ந்த ஒரு பெருமனிதரின் நினைவுக்கு குறிப்பு. இவருடைய கைகளில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் மனிதர்களாக மாற்றம் கண்டார்கள்.

ஒருவரைப் பற்றிய அபிப்பிராயத்தை மற்றவர்களிடம் கேட்க்கும் பொழுது ஒவ்வொருவரிடமும் இருந்து பல் வேறு கோணங்களில் இருந்து பதில் வரும். அவர் நல்லவர். அல்லது கொஞ்சம் சிடு மூஞ்சிக்காரன். கதைக்க பேச இனிமையானவர். சுய நலக்காரன். அல்லது அவருடன் பழகும் பொழுது கவனமாக பார்த்து பழக வேண்டும் என்று பலதரப்பட்டவர்களிடம் இருந்தும்  பதில் வரும். அனால் ஒரேயொரு மனிதரைப் பற்றி எல்லா மட்டத்திலுல் விசாரிக்கும் பொழுதும்  ஒரே பதில் தான் வந்தது.  ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானியாக கருதப்படும் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் இந்த நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கே கொண்ட ஒரு நல்ல மனிதராக பார்க்கப்பட்டார்.

அந்த நல்ல மனிதன் பற்றிய ஒரு பதிவாக இந்த கவர் ஸ்டோரி அமைகின்றது.

Prof N.Bala

கலைப் பட்டதாரியான இவர் பொருளியல் துறையில் சிறப்பு பெற்று பேராதனை மற்றும் யாழ்ப்பானப் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றிய பெருமை கொண்டவர். தனது ஓய்வுக் காலத்தில் சேவை நீடிப்பு பெற்று வவுனியா வளாகத்தில் முதல்வராக மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்னரும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள், பொருளாதார அபிவிருத்தி அமைப்புக்கள் போன்றவற்றிக்கு ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மிக நீண்ட காலமாக “பொருளியலாளன்” சஞ்சிகையில் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான பத்திகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதுடன் அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்து வந்துள்ளார்.

இவரது ஆளுமைகள் பல்வகைப் பட்டதாகவும் பலருக்கு பயன் கொடுத்த ஒரு அறிஞராகவும் விளங்கியுள்ளார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதிவரை யாழ்ப்பான பல்கலை கழகத்தின் பொருளியல் விரிவுரையாளனாக இருந்ததோடு மட்டுமன்றி கலைப் பீடத்தின் பீடாதிபதியாகவும் அரசறிவியல், பொருளியல்,வர்த்தகமும் முகாமைத்துவமும்  மற்றும் சமூகவியல் துறைகளின் தலைவராகவும் ஏகமனதாக பலமுறை தெரிவு செய்யப்பட்டு சேவை புரிந்துள்ளார். பதில் துணை வேந்தராக பலருடன் பனி புரிந்துள்ளார்.

பதவிகளை தேடிச் செல்பவர்கள் இருக்கும் சமுதாயத்தில் பதவிகள் தானாவே இவரை தேடி வந்தது என்பது இவர் ஒருவருக்காக மட்டும் தான் இருக்கும். அப்படி ஒரு சிறந்த நிர்வாக சேவையாளன் என்ற பெயரினை தமிழ் சமூகத்தில் மட்டுமல்லாது பெரும்பான்மை சமூகத்திடமும் இவர் பெற்றிருந்தார்.

பேராசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பலவாயிரம் மாணவர்கள் தங்களுடைய முதுமாணி மற்றும் முது தத்துவமாணி கல்வியினை கற்று தேர்ந்து இன்று பல உயர் பதவி வகித்து வருகின்றனர். கல்வி அபிவிருத்தியுடன் மட்டும் தனது சேவையினை மட்டுப்படுத்தாமல் பல்கலை கழகத்தின் அபிவிருத்தி, நூலக அபிவிருத்தி போன்றவற்றிலும் தனது கணிசமான பங்கினை செலுத்தி வந்துள்ளார். யாழ்ப்பான  பல்கலைக்கழகத்தில் ‘தொழிலாளர் கல்வி’ எனும் துறையினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பலர் கல்வி வாழ்விற்கு கலங்கரை விளக்காக அமைந்தவர். யாழ்ப்பான விஞ்ஞான சங்கத்தின் தலைவராகவும் யாழ்ப்பான பல்கலைக்கழக ஆளுநர் சபையில் நீண்ட கால உறுப்பினராகவும்  இருந்து வந்துளார்.

மறைந்த துனைவேந்தர்களாகிய பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன் துரைராஜா போன்றவர்களின் விருப்பத்திற்கும் பாராட்டுக்கும் உரிய ஒரு கல்விமானாக இருந்து வந்துள்ளார்.

பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து மேடை நாடகங்கள் மற்றும் கூத்து நிகழ்வுகளில் அரங்க நிர்வாகியாகவும் ஒப்பனை கலைஞன் ஆகவும் அவ்வப்பொழுது சில பாத்திரங்களில் நடித்தும் இருக்கின்றார்.

இவர் பற்றி அவற்றுடன் பணியாற்றிய மற்றும் மாணவர்கள் பலருடன் உரையாடும் பொழுது அவர்கள் எல்லோரும் ஒருங்கே அவரது நல்ல குணத்தையும் நேர்மையையும் எளிமை சுபாவத்தையும் பதிவு செய்கின்றனர்.

அவரது காலத்தில் பணியாற்றிய பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்  ‘அவர் ஒரு நல்ல நிர்வாக திறன் கொண்ட மனிதர்’ என்று குறிப்பிடுகின்றார்.

அவரது மாணவனும் பின்னர் அரசறிவியல் துரையின் சிரேஸ்ட விரிவுரையாளருமாகிய திரு க.ரகுநாதன் அவர்கள் ‘ஒரு கல்வி மானுக்கும் நிர்வாகிக்கும் இலக்கணமாக இருந்தது மட்டுமன்றி யார் மனதையும் காயப்படுத்தாத மனித நேயம் கொண்ட மகான்’ என்றும் ‘இவரால் பொருளியற் துறையும் கலைப்பீடமும் மேன்மை கண்டது’ என்றும் குறிப்பிடுகின்றார்.

வவுனியா வளாகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளனாக கடமையாற்றும் கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேஷன் அவர்கள் ‘தன்னலமற்ற, எந்தவொரு அரசியலுக்கும் உட்படாத நேர்மையான மனிதனுடன் பணியாற்ற கிடைத்தது ஒரு பாக்கியம்’ என்கிறார்.

‘செய்யும் தொழிலில் விசுவாசமும் நேர்மையும் ஒருங்கே கொண்டமைந்த உள்ளொன்று வைத்து புறம் பேசாத ஒரு அற்புத மனிதர் அவர்’ என தன் அனுபவத்தை கூறுகின்றார் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள்.

992889_10151650802218960_1111615987_n

‘வவுனியா வளாகத்தில் முதர்வராக இருந்த காலத்தில் அங்கு கலை இலக்கிய மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர்’ என மூத்த இலக்கியவாதி அகளங்கன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

பேராசிரியர் பற்றி அவரது மாணவனும் விரிவுரையாளருமாகிய கலாநிதி அ. புஷ்பநாதன் அவர்கள் ‘ஒரு சிறந்த விரிவுரையாளனாக இருந்து எமக்கு வழிகாட்டிய  ஒரு மனிதர்’ என தனது அனுபவத்தை பதிவு செய்கின்றார்.

‘எல்லாரது மனங்களையும் நன்கு புரிந்து கொண்ட பழகுவதற்கு மிக எளிமையான ஒருவர் பேராசிரியர்’ என கூறுகின்றார் முன்னாள் வவுனியா வளாக விரிவுரையாளர் வேணி விஜயராஜா அவர்கள்.

பேராசிரியர் அவர்களிடம் கல்வி கற்கா விட்டாலும் அவரால் மட்டுமல்லாது அவரது குடும்பமே தனது வாழ்வில் மாற்றத்துக்கு பெரும் பங்காற்றியதாக அவரது ஊரில் வாழ்ந்த பேராசிரயர் அவர்களின் அயலவனும் முன்நாள் கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமாகிய திரு க.கணேசமூர்த்தி அவர்கள் ஐயா பற்றிய நினைவுகளை மீட்கின்றார்.

இவர்கள் எல்லோரும் அவருடன் பழகிய காலங்கள் அதிகமாக இருப்பினும் மிக சொற்ப காலம் ஐயாவின் நிர்வாக காலத்தில் அங்கு கல்வி கற்றது, அவருடன் சேர்ந்து பல நிகழ்சிகளை வளாகத்தில் அவர் தலைமயில் நாடாத்தியது இன்றும் என் மனதில் பசுமையாகவே இருக்கின்றது.
முதல்வருக்கான வாகன வசதிகள் இருந்த பொழுதிலும் அலுவலக வேலைகள் தவிர்ந்த நேரத்தில் தனது சொந்த துவிச்சக்கர வண்டியில் தனது அலுவலக பையை கொழுவிக்கொண்டு ஆறுதலாக அந்த வண்டியினை மிதித்து வவுனியா வீதிகளில் வருவது இன்றும் என் கண்ணுக்குள் நிற்கின்றது.

அவரது எளிமைக்கு பல செயற்பாடுகளைக் கூறலாம். தனது கல்வி மற்றும் பதவிச் செல்வாக்கினை பயன்படுத்தி எந்த ஒரு பொதுமகனின் சேவைக்கும் நேரத்துக்கும் இடையூறு செய்தவர் அல்ல.

அவரது சேவைக் காலத்தில் அவரது குடும்பத்தினர் கொழும்பில் வசித்து வந்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் புகையிரதத்தில் கொழும்பு சென்று வரும் வழக்கம் இருந்து வந்தது. அந்த காலங்களில் வவுனியா புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் மிகவும் உச்சத்தில் இருந்து வந்த காலம். புகையிரதத்தை விட்டு இறங்குபவர்கள் வரிசையில் முன் இடம் பிடிப்பதற்காக முண்டி அடித்து – ஓடி விழுந்து வந்து முன்னுக்கு இடம் பிடிப்பார் (நாங்கள் உட்பட). இவரது முதுமை இடம் கொடுக்காது. ஆறுதலாக இறங்கி தனக்கு கிடைக்கும் இடத்தில் வரிசையில் நிர்ப்பார். அங்கு வேறு அலுவலகங்களில் பணியாற்றிய பணியாளர்கள் கூட தங்களது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து முன்னுரிமை அடிப்படையில் முன்னுக்கு சென்று விடுவர். ஆனால் இவரோ ஒரு பொழுதும் தனது பதவிச் செல்வாக்கினை பொது இடங்களில் பயன்படுத்தியது இல்லை.

அப்பொழுது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கை பல்கலைக் கழகங்களின் கல்வியியலாலர்களை அழைத்து மாநாடு ஒன்றை நடாத்தி விட்டு அவர்களின் வருகைக்கான கையொப்ப படிவத்தினை பாவித்து ‘இலங்கையின் கல்விமான்கள் அனைவரும் தனக்கு ஆணை வழங்கியுள்ளனர்’ என அடுத்து வந்த தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தியதை எதிர்த்து துணிந்து நின்று ஆட்சேபித்தவர்.
ஒரு முறை நாங்கள் இவரது காரை மறித்து அலுவலக பணியினை செய்ய விடாமல் ஆர்ப்பாட்டம் செய்த பொழுது மிகவும் சாந்தமாக அதனைக் கையாண்டு தீர்வு கண்டவர்.

நாங்கள் கல்வி கற்ற காலங்களில் நாட்டில் பாதுகாப்பு கெடுபிடிகள் என்பது பலவழிகளிலும் முடுக்கி விடப்பட்டு இருந்தது. எப்போ சுற்றி வளைப்புகள், எப்போ கைதுகள், தடுத்து வைப்புக்கள் நடைபெறும் என்பது யாருக்குமே  தெரியாது. அப்படி எங்கள் சகாக்களுக்கு இடம்பெற்றது என அறிந்தவுடன் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விடுதலைக்காக பேசி ஒரு பெற்றாரைப் போன்ற சிரத்தையை எங்கள் மீது வைத்து எங்களை பாதுகாத்து வந்தவர்.

எங்களது நண்பர்கள் ஒரு சிலரது எதிர்பாராத இழப்பின் பொழுது அவர்களது பூதவுடலை சொந்த ஊரில் இருந்த பெற்றாரிடம் சேர்ப்பதற்கு பல பிரயத்தனம் எடுத்து சேர்ப்பித்து உதவிய பெருமகன் அவர்.

இவரது திறமைக்கும் தகுதிக்கும் பல உயர் பதவிகளை நாடி இவர் சென்றிருக்கக் கூடும். ஆனால் அப்படி எந்த வித விட்டுக் கொடுப்புகளும் செய்யாது மிகவும் ஒரு நீதியான நேர்மையான வாழ்வினை வாழ்ந்து ஜூன் மாதம் 14 ஆம் திகதி அன்று எமை விட்டு பிரிந்துள்ளார்.

இயற்க்கை அவரை ஏற்றுக் கொண்டு விட்டது.

s1  சேகர் தம்பிராஜா | கனடாவிலிருந்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்