Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 3மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 3

மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 3மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 3

6 minutes read

1872 இல் மடுத்திருப்பதியை முதல் முறையாக தரிசித்த அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகை களிமண்ணினால் கட்டப்பட்டிருந்த சிறியகோவிலை கண்ணுற்று, வேதனையுற்று, ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு கன்னிக்கல் ஒன்றை 1872 இல் ஆவணி திங்கள் 8 இல் நாட்டினார். அதி. வந்த. பொஞ்ஜீன் ஆண்டகையால், தொடங்கப்பட்ட மடு ஆலய கட்டுமானப்பணி அதி. வந்த. மெலிசன் ஆண்டகை, காலத்தில் தொடரப்பட்டு பின்பு அதி. வந்த. யூலன் ஆண்டகையின் காலத்தில் முற்றுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அழகான கோவில் முகப்பும், விசாலமான குருமனையும், நற்கருணை சிற்றாலயமும், லூர்த்துக்கெபியும், அடுத்தடுத்து கட்டப்பட்டன. அருகில் உள்ள குளத்தை ஆழப்படுத்தி பக்தர்கள் நீராடுவதற்கும், குடிப்பதற்கும், பல குடிநீர் கிணறுகளும் கட்டப்பட்டன. 1900 ஆம் ஆண்டுகளி;ல் அரச ஊழியர்கள் தங்குவதற்காகவும், தமது கடமைகளை செய்வதற்காகவும், ஓர் அரச விடுதியும், அருட்சகோதரிகளின் சேவைகளுக்காக ஓர் கன்னியர் மடமும், பக்தர்களின் நலன்கருதி நோயாளர்கள் தங்கும் வைத்தியசாலையும், வெளி உலகுடன் தொடர்பு கொள்ள தபால் தொலைபேசி காரியாலயமும், திருவிழாக் காலங்களின்போது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் காரியாலயமும், நீதிமன்றமும், மடுச்சுற்றாடலில் அமைக்கப்பட்டன.

madumatha_2013_2

பின்னர் அதி. வந்த. புறோ ஆண்டகை, இப்பதியை மக்களின் யாத்திரை ஸ்தலமாக அங்கீகரிக்கச் செய்ததுடன் மடு அன்னையின் பழமை வாய்ந்த சுரூபத்திற்கு முடி சூட்டுவிக்க ஆரம்ப முயற்ச்சிகளை மேற்கொண்டார். இவரைத் தொடர்ந்து அதி. வந்த. கியோமார் ஆண்டகை, தமது மறைமாவட்ட பணியை மடு அன்னையின் முடிசூட்டு விழாவுடன் ஆரம்பித்தார். இவர் மடுத்தேவாலயத்தின் முற்பகுதியை விசாலமாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற்பகல் ஆராதனைகளில் முற்றவெளியில் இருந்து பங்குபற்றுவதற்கு வழி சமைத்ததுடன் இயேசுநாதரின் சிலுவையில் அறையப்பட்ட திருச்சுரூபம், பற்றிமா அன்னையின் திருக்சுரூபம் போன்றவற்றையும் மடுத்திருப்பதியில் நிறுவினார். ஜந்து ஆண்டுகள் அரிய சேவையின்பின் முதுமை காரணமாக யாழ் மறை மாவட்டத்தையும், மருதமடுத் திருத்தலத்தின் பாதுகாப்பையும், அதி. வந்த. எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையிடம் ஒப்படைத்தார்.

இவரின் காலத்தில் மடுமாதாவின் பக்தி இலங்கையின் பல்வேறு மறைமாவட்டத்திற்கும் விரைவாக பரவலாயிற்று. 1924ம் ஆண்டு ஆடித்திங்கள் பரிசுத்த பாப்பரசர் 11ம் பத்திநாதரின் பிரதிநிதியாக கொழும்புக்கு வருகைதந்த அதி. வந்த ஆண்டகை ஆஷா குடேற், அவர்கள் மாதாவின் சிரசிலும், கரங்களில் ஏந்தியிருந்த தேவபாலனின் சிரசிலும், வைரகற்கள் பதிந்த இருதங்க முடிகளையும் சூட்டினார்.

அவ்வேளையில் திருநாள் திருப்பலியை. முன்னாள் யாழ் ஆயர் கியோமார் ஆண்டகை, நிறைவேற்றியதுடன், தூத்துக்குடி ஆயர் அதி. வந்த றோச் ஆண்டகை மக்களைக் கவரும் வகையில் மாதாவின் புதுமைகளைப் பற்றி பிரசங்கித்தார். இந்நிகழ்ச்சிக்கு 150 ஆயிரம் மக்களும், 50 ற்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய குருக்களும், அக்காலத்தில் இருந்த யாழ், கொழும்பு, கண்டி, காலி, மறைமாவட்ட ஆயர்களும், பக்திப் பரவசத்துடன் முடிசூட்டு விழாவில் பங்கு பற்றியதாக சரித்திரம் கூறுகின்றது.

hqdefault

இலங்கையிலுள்ள பல தேவாலய மணிகள் ஆர்ப்பரிக்க, பீரங்கிகள் முழங்க, மருதமடு அன்னையின் கீதங்கள் வானொலியில் ஒலிக்க, பல்லாயிரம் மக்களின் கனவு அன்று நனவாகியது. 1944ம் ஆண்டு ஆவணி 25ல் மருதமடு அன்னையின் தேவாலயத்தை அபிஷேகம் செய்ய மக்களும் ஆண்டகைகளும் சித்தம் கொண்டமையினால், 2வது மகாயுத்த காலம் நிலவியபோதிலும் வெகுபக்தி விமரிசையாக 30 ஆயிரம் மக்கள் கலந்துகொள்ள ஆலயம் அபிஷேகம் பண்ணப்பட்டு புதிய மாபிள்கல் பீடத்தில் நன்றித் திருப்பலியை கியோமோர் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார், அமலோற்பவ மரியநாயகி சபைக்குருமார் இலங்கைக்கு வந்து தொண்டாற்றிய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக அதி. வந்த. கியோமோர் ஆண்டகையின் தலைமையின்கீழ் மடு அன்னையின் திருச்சுரூபம் “கன்னிமரியாள் ஒர் பிரசங்கி” என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாண மேற்றாசனத்தில் உள்ள ஒவ்வொரு விசாரனைப் பங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பங்கிலும் இருதினங்கள், செபதபங்கள் அனுசரித்தும், மக்கள் பயபக்தியுடன் தமது மீசாம்களை அலங்கரித்தும், மனம் திருப்புதலுக்கான முயற்சியாக இவ்வருகையை ஆயத்தம் செய்தனர்.

இம் மாதாவின் யாழ் பவனி பங்குனி 15ம் திகதி தொடக்கம் வைகாசி 5ம் திகதி வரை நடந்தேறியது. இந்த 50 நாட்களிலும் சுமார் 80 பங்குகளில் மாதாவின் தரிசனம் கிடைத்ததை கிறீஸ்தவர்களும், பிறசமயத்தவர்களும் பெரும்பேறாக கருதினர். இக்காலப்பகுதியில் சுமார் 51 ஆயிரம் கத்தோலிக்க மக்கள் தங்களை தேவதாயாருக்கு காணிக்கையாக்குவதற்காக பத்திரங்களில் கையொப்பமிட்டு மடு அன்னையின் திருப்பாத கமலங்களில் வைத்ததாக சரித்திரம் சான்று பகருகின்றது. 1949 இல் மருதமடு தாயாரின் முடிசூட்டு விழா 25 வருடங்களை பூர்த்தி செய்தது. அவ்வாண்டில் யாழ் ஆயரான அதி.வந்த.கியோமோர் ஆண்டகை அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிவிழாவும் மடுவில் நிகழ்ந்தது, இவ்வைபவத்தில் 150 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டதுடன், இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 2.00 மணி வரை நடைபெற்ற வேண்டுதல் வழிபாட்டில், ஐம்பதாயிரம்; யாத்திரிகர்கள் கலந்துகொண்டு தமிழிலும், சிங்களத்திலும், இலத்தீன். மொழியிலும் வேண்டுதல் செய்தார்கள். (Maruthamadhu) 1950 இல் மடுத்தேவாலயம் இரண்டு பெரிய மின்பிறப்பாக்கியின் மூலம், ஒரு சதுர கி.மீ க்கு மின்னொளியூட்டப்பட்டு ஜோதி மயமாக காட்சியளித்தது. 1963 இல் மன்னாரில் ஏற்பட்ட கடும்புயல் காரணமாக, மடுத்தேவாலயமும், அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டு மரங்களும், பெரும் சேதத்திற்கு உள்ளாயின.

madu-matha

வண.பிதா.பிறோகான் 1950 இல் தனது அரிய முயற்ச்சியினால் வெளிநாட்டில் இருந்து மாபிளினால் தயாரிக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சுரூபம் இரண்டைத் தரிவித்து, பெரிய சுரூபத்தை மடுமாதா தேவாலயத்தின் முகப்பிலும் (Portico) சிறிய சுரூபத்தை மடுறோட் – மன்னார் – மதவாச்சி சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலிலும் ஸ்தாபித்ததார் (Chronicale). மடுதேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்படும் நிதிகள் யாழ் மேற்றாசனத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதாக நம் முன்னோர்கள் (Cronicale – catholicial in Jaffna.  Rev.Fr.Gnanapirahasiyar.)

1974 இல் ஆடித்திங்கள் 2ம் திகதிக்கு முன்னர் மடுஅன்னையின் மகுட அபிஷேக பொன்விழாவை முன்னிட்டு, மடு அன்னையின் திருச்சுரூபம் யாழ் மேற்றாசனத்தில் சகல விசாரனைப் பங்குகளுக்கும் திருப்பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது. இப்பவனியின் அச்சாரமாக பரிசுத்த தந்தையால் 1975ம் ஆண்டு புனித ஆண்டாக தெரிந்தெடுக்கப்பட்டு “ஒப்புரவாக்குதலும், கிறீஸ்தவ வாழ்வை புதுப்பித்தலும்”  என்ற மையக்கருத்தில் ஒவ்வொரு பங்கிலும் ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று அறிவுரைகள், ஒப்புரவாதல், நற்கருணை வழிபாடு, அன்னைக்கு கூட்டுவழிபாடு, போன்றவற்றினால் மக்கள் மத்தியில் ஒர் உளமாற்றம் ஏற்பட்டது. பொன்விழா திருப்பலியின்போது கொழும்பு அதி.வந்த.மேற்றாணியாரும் இலங்கையின் 1வது கருதினாலுமாகிய அதி.வந்த.தோமஸ் கூறே ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது கத்தோலிக்கர் அல்லாத பிறசமய யாத்திரிகர்களும் மடுமாதாவின் மேல் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை மேற்கொள்வது தற்போதும் நடைபெற்று வருகின்றது. மேலும் “பாவிகளுக்கு அடைக்கலமும்”    “கிறீஸ்த்தவர்களுக்கு தஞ்சமுமாய்”  மடு அன்னை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அத்துடன் திருவிழாக்காலங்களில் காலை தொடக்கம் மாலை வரை பல குருமார் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

திருவிழாக்காலங்களின் போது பக்தர்கள் தமது தேவைகளை உணர்த்தவும் நேர்த்தியை நிறைவேற்றவும் பல வெளிப்படையான அடையாளங்கள் செயல்களில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது. ஒரு சில சிங்கள யாத்திரியர்கள் மடுத்திருத்தலத்தை தரிசிப்பதற்காக தங்களது வீடுகளில் மண்ணினால் பெரிய உண்டியலை செய்து அதில் ஒறுத்தல் மூலமாகவும், தமது வருவாயில் ஓர் பங்கினை சேகரித்தும், நிதி சேர்த்து அந்நிதியை அடுத்த யாத்திரைக்கு செலவாகப் பாவிப்பதும் உண்டு. தேவாலயத்தின் இடது பக்கத்தில் மெழுகுதிரி, செபமாலை, வரவணிக்கம், மன்றாட்டுப் புத்தகங்கள், புகைஞ்சான். நேர்த்திக்கடன் வேண்டுதல் பொருட்களான குழந்தை உருவம், தொட்டில், கை, கால், போன்றனவும் ஓலைப்பெட்டிகளில் மடுமாதாவின் ஆயுள்வேத மூலிகைகள், போன்றவையும் பக்தர்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகின்றன. கோவிலின் உள்ளே உள்ள திருச்சிலுவைப்பாதை ஸ்தலங்களில் மக்கள் சிலுவைப்பாதை செய்வதிலும், கோவிலின் நடுவினில் முழங்காலால் நடப்பதையும்இ சுற்றுப்பிரகாரத்தின் போது கடலைப்பொரி, பூக்கள், போன்றவற்றை கீதங்கள்பாடி தூவுவதையும், சுரூபக்கூட்டுக்கு கீழ்பக்கத்தால் கடப்பதையும் நம்பிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

A9

மடுத்தேவாலயத்தை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த மரங்களின் கீழ் மக்கள் கூடாரங்கள் அமைத்து, தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்குவதும், மூவேளை உணவை கூட்டாக சமைத்து சந்தோஷமாக உண்பதிலும். தமக்கு அருகிலுள்ள அறிந்திராத மக்களுடன் பகிர்ந்து மகிழ்வதையும் காணக்கூடியதாக இருக்கும். சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை குறிப்பிட்ட நேரத்தில் வழங்குவதிலும், உணவுச்சாலைகள் அமைத்து உணவுத்தேவையை பூர்த்தி செய்வதிலும், சுகாதாரத்தை காலையும், மாலையும் பேணுவதிலும், மடு பரிபாலன சபையும், மடுப்பிரதேச செயலாளரும், மடு உள்ளுராட்ச்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் ஈடுபட்டிருப்பதையும் காணலாம். இத்துடன் பல பாடசாலை சாரணர்களும், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினரும், ஏனைய தொண்டர் அமைப்பினரும் பொதுமக்களை வழிப்படுத்துவதிலும், தற்காலிக மருத்துவமனை, அரச நிர்வாகம், நீதிமன்று, தபாற்காரியாலயம், போக்குவரத்துச் சேவை காரியாலயம், புகையிரத நிலைய காரியாலயம், போன்றனவும் திருவிழாக்காலங்களில் சிறப்பான சேவையை ஆற்றிவந்ததை காணக்கூடியதாக இருக்கும்.

தொடரும் ….

Peter   Mr.Peter Sinclair | Project Consultant & Trainer | மன்னாரிலிருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More