பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
வேலாயுதசுவாமி
அயலில் உள்ள உருத்திரபுரம் கிராமத்தில் ஏற்பட்ட சில நிகழ்ச்சிகள் மூன்று கிராமத்தவர் மத்தியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தின. கூலாவடிச் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் பூசாரியாகவிருந்த வேலாயுதசுவாமி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் நடுக்காட்டில் சிவநகர் குளத்திற்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலை அமைத்து அதற்கு பூஜை செய்ய ஆரம்பித்தார். மூன்று கிராமங்களும் உருத்திரபுரம் மக்களுடன் அவரது கோவிலுக்கு போக தொடங்கினர். வேலாயுதசுவாமியுடன் ஒரு உதவியாளர் மட்டுமே அந்த யானைக் காட்டில் தங்கினார்.
உருத்திரபுரீஸ்வரர்
ஒரு நாள் சிவன் வேலாயுதசுவாமியின் கனவில் தோண்றி தாம் அக் காட்டில் ஒரு குகையில் அடைபட்டிருப்பதாக கூறினார். அவரது கனவைத் தொடர்ந்து பக்தர்களும் வேலாயுதசுவாமியுடன் சேர்ந்து அந்த அடர்ந்த வனத்தில் தேடுதல் நடத்தினர். செங்கற்களால் மலை போன்று அமைப்பும் அதனடியில் குகை போன்ற அமைப்பும் தென்பட்டன. அப்போது கிளிநொச்சி மாவட்டம் தனியாக பிரியவில்லை. யாழ்ப்பாணத்துடனே இயங்கியது. பளையிலிருந்த டீ.ஆர்.ஓ(DRO ) முருகேசம்பிள்ளைக்கும் யாழ்ப்பாண (GA ) ஸ்ரீ காந்தாவிற்கும் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வாராட்ச்சி செய்த போது சோழர் காலத்தைச் சேர்ந்த சிவலிங்கம் தோண்றியது. அச்சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து உருத்திர புரீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டது. சிவன் கோவிலை சூழயிருந்த காட்டில் மக்கள் குடியேற சிவநகர் கிராமம் உண்டாயிற்று. பழமை வாய்ந்த குளம் புணரமைக்கப்பட்டு சிவநகர் மக்களுக்கான நீர்ப்பாசண குளமாக மாறியது. இதனை உருத்திரபுரீஸ்வரர் தல வரலாறாகவோ சிவநகர் கிராமத்தின் வரலாறாகவோ கொள்ளலாகாது. அப்போது சிறுவனாயிருந்த நான் செவிவழி கேள்விப்பட்ட செய்திகளே இவையாகும்.
பின்னர் அமைக்கப்பட்ட அறங்காவல் சபையில் அப்போது மூன்று கிராமங்களுக்கும் உருத்திரபுரத்திற்கும் கிராம விதானையாகவிருந்த எனது தந்தையார் ஒரு சாதாரண உறுப்பினராகவிருந்தார். யாழ்ப்பாணம் இராமகிருஷ்ண மிஷன் வைதீஸ்வர வித்தியாலயத்தின் புகழ் பெற்ற அதிபர். உயர்திரு. அம்பிகைபாகன் சிறிது காலம் அதன் தலைவராக இருந்தார். அதன் காரணமாக எனது சகோதரன், சகோதரியுடன் சாதாரண வன்னிக்கிராமத்தில் பிறந்த நானும் வைதீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாக்கியத்தைப் பெற்றோம்.
இன்று இளைப்பாறிய கிளிநொச்சி அரச அதிபர் திரு.இராச நாயகம் தலமையில் அறங்காவல் சபை மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
கோகிலாம்பாள் கொலை வழக்கு
கோகிலாம்பாள் கொலை வழக்கு மூன்று கிராம மக்களையும் உருத்திரபுர மக்களையும் உலுக்கவில்லை. வடமாகாணம் முழுவதையும் திகைக்க வைத்தது. முன்னர் புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்ட போது அத்திரைப்படத்தின் கதைச்சுருக்கத்துடன் அத்திரைப்பட பாடல்களையும் சிறு புத்தகமாக அச்சிட்டு யாழ்ப்பாண பஸ்டாண்டில் கூவிக் கூவி விற்பார்கள்.
கோகிலாம்பாள் கொலை வழக்கும் அவ்வாறு சிறிய புத்தகமாக அச்சிட்டு கூவிக் கூவி விற்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் வழக்கு முடிய முடிய அன்றைய சாட்சி விசாரணை பற்றிய விபரங்கள் அச்சிடப்பட்டு அப்புத்தகத்துடன் இணைக்கப்படும். மக்கள் அடிபட்டு அப்புத்தகத்தை வாங்கினர்.
ஈழநாடு பத்திரிக்கை என்று ஞாபகம், காலை மாலைப் பதிப்புகளும் வெளியிடப்பட்டன.
நெடுந்தீவைச் சொந்தமாகக் கொண்ட கோவில் குருக்கள் தமது சமயக்கல்வியைப் பெற இந்தியா சென்ற போது கோகிலாம்பாளையும் திருமணம் செய்து அழைத்து வந்தார். அவர்களுக்கு பத்து பன்னிரன்டு வயதில் மூத்த மகளும் அதைத் தொடர்ந்து வேறு பிள்ளைகளும் உண்டு.
குருக்கள் உருத்திரபுரத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குருவாக கடமையேற்று மக்கள் போற்ற கோவில் கடமைகளை திறம்பட நடாத்தி வந்தார். ஒரு நாள் அவரை திடீரென காணவில்லை. கோகிலாம்பாள் அவரை காணவில்லை என அறிவித்துவிட்டு வழமை போல் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்.
நெடுந்தீவிலிருந்த குருக்களின் தந்தையார் மகனைத் தேடி உறவினர் நண்பர்களின் வீடுகள் ஊர்களுக்கு அலைந்து திரிந்தார். ஒரு நாள் குருக்கள் தந்தையின் கனவில் தோண்றி தாம் கோவிலின் மாட்டுப்பட்டியிலுள்ள சாணிக்கும்பிகளுக்கடியில் கிடப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து ஊர்மக்களும் தந்தையாரும் சாணிக்கும்பியை தோண்டிய போது குருக்களின் உடல் கிடைத்தது.
கோகிலாம்பாளும் இரண்டு வேலைக்காரரும் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையின் போது தெரிய வந்தது. இளைஞனான வேலையாள் கொலையில் பங்குபெறவில்லை என்றும் உடலை மறைக்க மட்டுமே உதவினார் என்றும் பயத்தின் காரணமாக பேசாதிருந்தான் என்றும் கண்டுகொண்ட பொலிசார் அப்புறுவராக மாற்றி சாட்சியாக ஏற்றுக் கொண்டனர். தாயாருக்கு எதிராக மகள் சாட்சி சொன்ன சோக சம்பவமிது. குருக்களை வெட்டிய அன்று வீடு முழுவதும் கழுவிய விபரமும் (இரத்தத்தை மறைக்க) தந்தையாரை காணாது அவர் மேல் கூடுதல் பாசம் வைத்த மூத்த மகள் அழுத போது கோகிலாம்பாள் “சாணிக்கும்பிக்குள் கிடப்பார் போய்ப் பார்” என்று வாய் தடுமாறி கூறிய விபரமும் மகளால் கூறப்பட்டது. வேலைக்காரனுக்கு மரண தண்டனையும் கோகிலாம்பாளுக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தன.
தண்டனை முடிந்து வந்த கோகிலாம்பாள் ஆதரிப்பார் யாருமின்றி அலைந்து பின் தன் உறவினர்களுடன் இந்தியா சென்றுவிட்டதாக வதந்தி. தகாத உறவு ஒரு இனிமையான வாழ்க்கையை அழித்துவிட்டது.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/