பல இலட்சம் ஆண்டுகளாக உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி இதுவரை நான்கு தடவைகள் மிகப்பெரிய பனி உறை காலம் வந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடித்ததாகவும், ஒவ்வொரு பனியுறைகாலத்திலும் உலகிலிருந்த பல உயிரினங்கள் அழிந்துபோனதாகவும் மீண்டும் பனி உருகும் காலத்தில் அவை தோன்றிப் பெருகியதாகவும் கூறுகின்றனர். பனிக் காலங்களில் வாழ்ந்த மனித இனமும் விரல்நுனியில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியாகப் பன்னீராயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் பனிக்காலம் முடிவடைந்ததாக விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். அப்படி முடிவுற்ற பனிக்காலத்தின் பின்னர் உயிரினங்கள் உலகில் பெருகியபோது ஆபிரிக்கக் கண்டத்தில்தான் அதிகமாகப் பெருகியதாக உலக விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். இது பற்றிய விரிவான தகவலை ஸ்பென்சர் வேல்ஸ் என்பவர் எழுதிய The journey of man என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஸ்டீபன் ஒப்பன்கைமர் கிரகம்ஹன்கொக் போன்றபலரும் இதுபற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஏற்புடையதும், ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பட்ட கருத்துக்களையும் கூறியுள்ளனர்.
இறுதிப் பனி உருக்கு காலத்தின் பின் தோன்றிய மாந்த இனம் கோமோ சப்பியன்ஸ் என அழைக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து முதன்முதல் இடம்பெயர ஆரம்பித்த மனித இனம் நீக்குரொயிட் என அழைக்கப்பட்டது. அப்படி இரண்டு மூன்று தடவைகள் ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பிரிவினர் ஆசியா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களுக்குச்செல்ல இன்னொரு பிரிவினர் மத்திய கிழக்கு ஆசியாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அவுஸ்ரேலியா வரை சென்ற இனம் ஒஸ்ரோலொயிட் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களில் சில குழுவினர் கடும் குளிரால் அழிந்துபோக மீண்டும் இடம்பெயர்ந்தனர் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி இடம்பெயர்ந்து திரிந்த போதுகூட மாந்த இனம் விலங்குகளை வேட்டையாடி காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்தது. விலங்குகளும் மனிதரை வேட்டையாடியதால் மனித இனம் பல்கிப் பெருகுவது மிகச் சொற்பமாகவே இருந்தது.
இக்காலத்திலும் உறை பனி நிலை காணப்பட்டாலும் உயிரினங்களைக் கொல்லும் குளிர் இல்லாததால் மனித இனம் அக்குளிரைத் தாங்கும் நிலைக்கு இசைபாக்கம் அடைந்தது. அதனால் உறைந்து கிடந்த கடற்பரப்பில் அவர்கள் பயணம் செய்து மற்றைய கண்டங்களை அடைந்திருக்கலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி இடம் பெயர்ந்த மக்கள் கூட்டம் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தே அமெரிக்கக் கண்டத்திற்குப் பயணித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
இப்படி இடம்பெயந்து சென்ற மக்கள் கூட்டம் நிலையாக ஓரிடத்தில் தங்காது தொடர்ந்தும் நாடோடிகளாகவே அலைந்தது. காலம் செல்லச்செல்ல பச்சை மாமிசத்தை உண்ட மனிதன் தீயின் பயன்பாட்டுடன் மாமிசத்தை தீயில் வாட்டி உண்ண ஆரம்பித்தான். அதன் பின்னர் ஆடு மாடு போன்ற மனிதர்க்குத் தீங்கு விளைவிக்காத உயிரினங்களை வளர்க்கத் தொடங்கினான். விலங்குகளைத் தம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததால் அவற்றிற்குரிய உணவுகளையும் தேடவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையிலும் ஈடுபட்டனர். இப்படி உணவுதேடி அலைந்து திரிந்த குழுவொன்று காடுமேடெங்கும் அலைந்து மெசொப்பொத்தேமியா என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த்தது.
தொடரும் …
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து
இத்தொடரின் முன்னைய பகுதிகள்..
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/
(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)