வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 7வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 7

பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.

 

தீவு

சுட்டதீவுக்கு அருகாமையில் ஒரு நிலப்பரப்பு காணப்பட்டது. அதன் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டு ஒரு பக்கம் மட்டும் ஒரு நீண்டபாதை போன்ற நிலப்பரப்பு ஏனைய பிரதேசங்களுடன் இணைத்தது. அந்த நிலப்பரப்பில் நிறைய மேய்ச்சல் பிரதேசமும், ஒரு பகுதியில் பொட்டல் காடும், சில பகுதியில் மிக உயர்ந்த மரங்கள் நிறைந்த மேட்டுப்பகுதியும் காணப்படும். காலபோகம் விதைத்ததும் மூன்று கிராமத்து மாடுகளும் இத்தீவில் விடப்படும். மாரி மழை பெய்ததும் தொடர்புப்பாதை நீரில் மூழ்கிவிடும். அது ஒரு தீவாக மாறிவிடும். இனி அரிவி வெட்டியபின்தான் மாடுகளைக் கிராமத்துக்குக் கொண்டு செல்வர். அதுவரை பால்கறக்கவும் புதிதாக ஈனப்படும் கன்றுகளை நரிகளிடமிருந்து பாதுகாக்கவும் நான்கு ஐந்து பேர் முறைபோட்டு மாறி, மாறி போய்வருவர். மழை பெய்யும் பொழுது மாடுகள் மேட்டு நில மரங்களின் கீழ் ஒதுங்கி விடும். பால் கறப்போருக்காக இரண்டு மூன்று கொட்டில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

sa01

இத்தீவைப் பார்ப்பதற்காக இளம் வயதில் நானும் நண்பனும் சென்றோம். தீவின் உயரமான மரமொன்றில் ஏறிப்பார்த்தோம். ஒருபக்கத்தில் மாடுகள் மேய்ந்தன. இடைக்கிடை மான்களும், மரைகளும் மேய்ந்தன. அங்காங்கே பன்றிகளும் காணப்பட்டன. திடீரென ஒரு பக்கத்தில் யானைக்கூட்டம் மேய்வதும் தெரிந்தது. ஒரு எல்லையில் ஒற்றை யானையைக் கண்டோம். தனியன் யானை, தனிப்பன்றி, தனியன் குழுவன் மாடு ஏனையவற்றிலிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு வாழ்பவை. முனிதரை மூர்க்கமாகத் தாக்கும் இயல்பு உடையவை. நல்லகாலம் நாங்கள் காற்று வீசும் திசையில் இல்லை. மிக அவசரமாக தீவை விட்டு நீங்கி வீடு நோக்கி நடந்தோம். வன்னியில் காடுகள் அழிக்கப்பட்டபின் இவ்வாறான இயற்கை அழகும் அழிந்துவிட்டது.

 

ரங்கூன் மணியத்தார்

இவர் பர்மாவின் ரங்கூனிலிருந்து திரும்பி வந்தவர். நீலன் ஆற்றங்கரையில் காணியைப் பெற்றுத் திருத்தி சிறந்த பண்ணையாளராகவும் உயர்ந்த மனிதப்பண்பு கொண்டவராகவும் திகழ்ந்தார். சொந்த ஊர் அளவெட்டி. இவரைக் குறிப்பிடாது மூன்று கிராமத்தின் கதை முழுமை பெறாது. ஏன் கண்டாவளைப் பிரதேசமே இவருக்குக் கடமைப்பட்டது. குஞ்சுப்பரந்தன், பெரியபரந்தன், செருக்கன், குமரபுரம், முரசுமோட்டை, கண்டாவளை, கரவெட்டித்திடல், புதிதாகத் தோன்றிய தர்மபுரம் கிராமமக்களை ஒன்றிணைத்து கரைச்சி – வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக நீண்டகாலம் ஊதியம் ஏதும் பெறாது கடமையாற்றி வளர்த்தெடுத்தவர். கொழும்பு வரை சென்று பண்டங்களைத் தரமானவையாகத் தெரிவு செய்து கொண்டுவந்து மக்களுக்கு தனியார் கடைகளை விடக் குறைந்த விலைக்கு கொடுத்தவர். அதே நேரம் சங்கத்தை இலாபகரமாகவும் நடத்திக் காட்டியவர்.

 

பிளாக்கர் பொன்னம்பலம்

இவரையும் குறிப்பிடல் பொருத்தமானது. அன்ரன் பொன்னம்பலம் என்பது இயற்பெயர். கரைச்சிக் கிராமச்சபையின் தலைவராகவும் கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். பெரிய பரந்தனின் தெற்குப் பக்கத்தில் எட்டாம் வாய்க்காலும், உருத்திரபுரம் வீதியும் சந்திக்கும் மூலையில் காணியைப் பெற்று தென்னஞ்சோலையும், வயல்வெளியையும் உண்டாக்கியவர். குஞ்சுப்பரந்தன் கிராமச்சபை உறுப்பினரது வாக்கும் பெரியபரந்தன் கிராமச்சபை உறுப்பினரது வாக்கும் தலைவராவதற்குத் தேவையாக இருந்தமையால் மூன்று கிராம மக்களுடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தவர்.

495_20130320124048

மாற்றம் ஒன்றே மாறாதது

மூன்று கிராமத்தைப் பற்றி எழுதப் புகுந்தால் தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். எனினும் மூன்று கிராமத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை மட்டும் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என எண்ணுகின்றேன்.

 

ஆங்கிலேயர் பழமையை பேணுபவர்கள். ஒல்லாந்தர், போர்த்துக்கேயரால் வரிகளை வசூலிக்கவும், தமது நிர்வாகத்தைச் சுலபமாக நடத்தவும் நியமிக்கப்பட்ட விதானை (Vidan), உடையார் பதவிகளைத் தொடர்ந்து பேணினார்கள். விதானையின் மகன் விதானை, உடையார் மகன் உடையார் என்ற ரீதியில் நியமனமும் தொடர்ந்தது. பரம்பரையாகப் பதவி வரும் என்ற காரணத்தால் விதானை, உடையார் குடும்பப் பிள்ளைகள் கல்வி கற்பதில் அதிக நாட்டமின்றி இருந்தனர். குஞ்சுப்பரந்தனில் உடையாரும், விதானையும் அண்ணன் தம்பிகள். உடையாருக்கு வயதான போது உடையார் முறை நீக்கப்பட்டு, GA (ஜீஏ) இற்கு அடுத்த நிலையில் இலங்கை நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்ற டீ.ஆர்.ஓ க்கள் (DRO) நியமிக்கப்பட்டனர். விதானை என்ற பதத்தை மாற்றி ‘கிராமத் தலைமைக்காரர்’ (Village Headman) என்று புதிய பெயரால் அழைத்தனர். இவர்கள் நேரடியாக டீ.ஆர்.ஓ விற்குக் கீழே பணி ஆற்றுவர். கிராமத் தலைமைக்காரர் என்பது கிராம சேவையாளராகி இப்போது கிராம சேவை உத்தியோகத்தர் ஆகிவிட்டது.

 

யாழ்ப்பாணத்திற்கு கடைசியாக அரசாங்க அதிபராக (GA) இருந்த ஆங்கிலேயர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். கிராமத் தலைமைக்காரர் (VH) நியமனத்தில் பரம்பரை, கல்வித் தகைமை, மக்கள் ஆதரவு மூன்றையும் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

குஞ்சுப்பரந்தனின் பழையப்பரம்பரை விதானையாராகிய கைலாய விதானையார் இளைப்பாற, புதிய தெரிவிற்கு அரச அதிபர் நேரில் பரந்தன் அ.த.க.பாடசாலைக்கு வருகை தந்தார். பதினேழுபேர் விண்ணப்பித்திருந்தனர். விதானையாக வருபவர் திருமணம் முடித்தவராக இருக்கவேண்டும் என்பதற்காக பத்துப் பேர் உடன் மணம் முடித்தனர். மூன்று கிராமத்தில் சொந்தமாக காணி வேண்டும் என்பதற்காக மீசாலையைச் சேர்ந்த சிலர் காணியும் வாங்கினர்.

meeting_under_tree

பதினாறுபேர் விதானை, உடையார் பரம்பரையைச் சேர்ந்த குஞ்சுப்பரந்தன் வாசிகள். ஓருவர் பெரியபரந்தன் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கன் என்ற சாதாரண விவசாயியின் மகன். எஸ்.எஸ்.சி சித்தியெய்தியவர். ஆங்கில பாடத்திற்குத் தனியே தோற்றித் திறமைச் சித்தி பெற்றவர். சிங்கள மொழியைச் சிங்களவர் போலப் பேச வல்லவர்.

 

உடையாரின் மகன் ஜே.எஸ்.சி (8ம் வகுப்பு) படித்தவர். விதானையாரின் மகன் 5ம் வகுப்புப் படித்தவர். கல்வி முக்கியம் என்றதும் பதின்னான்கு பேர் ஒதுங்கிக் கொண்டனர்.

 

பரம்பரைக்கான புள்ளியை விதானை, உடையாரின் மகன்கள் பெற்றனர். மகாலிங்கனுக்குப் பூச்சியம். கல்விக்காக மகாலிங்கன் கூடிய புள்ளியைப் பெற்றார். வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது செருக்கன், பெரியபரந்தன் மக்கள் மகாலிங்கனுக்கே கைஉயர்த்தினர். குஞ்சுப்பரந்தன் வாக்குகள் மூன்றாகப் பிரிந்தது. பாலசுந்தரம் மாஸ்டர் முதலியோர் மகாலிங்கனுக்கே வாக்களித்தனர். ரங்கோன் மணியத்தார், பிளாக்கர் பொன்னம்பலமும் மகாலிங்கனுக்கே வாக்களித்தனர். மகாலிங்கம் என்ற சாதாரண விவசாயி முதன்முறையாக விதானை பதவிக்குத் தெரியப்பட்டதாக அரச அதிபர் அன்றே அறிவித்தார்.

 

தொடரும்….

 

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

ஆசிரியர்