Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 8வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 8

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 8வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 8

8 minutes read

பெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.

 

மாற்றம் ஒன்றே மாறாதது. வலுவுள்ளவர்களே வாழ்வில் நிலைத்து நிற்பர். வலுவில்லாதவர் அழிந்துபோவர். இந்த இயற்கையின் விதியை படிக்காதவர்களாயினும் மூன்று கிராம மக்கள் அறிந்திருந்தனர்.

 

உழவு இயந்திரம் வாங்கலும், சாரதிகளாகச் செல்லலும்

எருமைகளின் யுகம் முடிந்ததும் வாழாவிருக்காது வசதி மிக்கவர் தாமும் உழவு இயந்திரத்தை வாங்கினர். வசதி இல்லாத இளைஞர்கள் சாரதி பயிற்சி பெற்று வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றனர். ஆண்கள் வேலை தேடி வெளியூர் செல்வது முதன்முதலாக நடந்தது. வயலில் உவர் நீர் புகுந்ததனாலும் நூறாண்டுகளாக நெற்செய்கை பண்ணப்பட்டதாலும் வயலில் வேளாண்மை இலாபமற்ற தொழிலாக மாறிவிட்டது. பெண்கள், ஆண்களுக்குச் சமமாக வேலை செய்தவர்கள். ஆடு, மாடு, கோழி பராமரிப்பதும் சிறியளவில் வயல் செய்வதுமாகக் காலம் கழித்தனர்.

a4

மில் நாகலிங்கம்

காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். மலேசியாவில் பிறந்தவர். அங்கு நிலமை பொருத்தமில்லை என்று கண்டு தாய்நாடு திரும்பியவர். தொழில் செய்வதற்கு ஏற்றதென்று கருதிப் பழைய கிராமமான பெரிய பரந்தனைத் தேர்ந்தெடுத்தார். இங்கே நீலன் ஆற்றங்கரையில் ஒரு நெல்குற்றும் ஆலையை அமைத்தார். படித்தவர். முதிய வயதினர். பண்பாளர். மக்களுடன் இனிமையாகப் பழகி மூன்று கிராமத்தவர்களில் ஒருவர் ஆனார்.

 

பெண்களில் சிலர் அரிசி வியாபாரிகள் ஆயினர்

மத்திய வயதை அடைந்த பெண்கள் குடும்பம் சிறக்க வேண்டுமாயின் தாம் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வமாயிருந்தவர்கள். அரிசி ஆலை தோன்றியதைத் தமக்குச் சாதகமாக மாற்றினர். எல்லோரிடமும் ஏற்கனவே வண்டில், மாடுகள் இருந்தமையால் துணிந்து காரியத்தில் இறங்கினர். தமது வயலில் விளைந்த நெல் முழுவதையும் அவித்துக், காயப்பண்ணி நாகலிங்கம் ஐயாவின் ஆலையில் குற்றி அரிசி ஆக்கினர். போட்டி போட்டுக் கொண்டு பரந்தன், கரடிப் போக்கு, கிளிநொச்சி முதலிய இடங்களில் உள்ள கடைகள் யாவற்றிற்கும் அரிசியை வழங்கினர். மிகுதி அரிசியை கிளிநொச்சியில் சனிக்கிழமையில் மட்டும் இயங்கிய வாரச் சந்தையில் நெல் அரிசி விற்கும் பகுதியில் வைத்து விற்றனர். அரிசி வியாபாரம் முழுவதும் மூன்று கிராமப் பெண்களின் ஏகபோக உரிமையாயிற்று. தம்வயலில் விளைந்த நெல் போதாது, வேறு இடங்களில் கொள்வனவு செய்யத் தொடங்கினர். நாகலிங்கம் ஆலை மூன்று கிராம மக்களின் நெல்லை குற்றுவதை மட்டும் செய்தும், இரவு பகல் இயங்கித்தான் அவர்களின் தேவையை நிறைவு செய்தது. ஆண்கள் நெல்லை அவித்துக் காயப்பண்ணும் வேலையைச் செய்தனர். நெல், அரிசி வியாபாரம் ஏகபோக உரிமையாக இருக்கும்வரை கிராமத்தில் மீண்டும் செல்வம் புரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக வேறு கிராம மக்களும் அரிசி வியாபாரத்தில் இறங்கினர். மாவட்டத்தில் பல அரிசி ஆலைகள், மிகப் பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலை உரிமையாளர்கள் தாமே நெல்லைக் கொள்வனவு செய்து, அவித்துக் குற்றத் தொடங்கினர். மூன்று கிராமமக்களின் பொருளாதாரம் மீண்டும் நலிந்தது.

a1

வைத்தீஸ்வரக் குருக்கள்

மூன்று கிராம மக்களின் கதையை எழுதும்போது முதன் முதலில் இவரைப்பற்றித் தான் எழுதியிருக்க வேண்டும். இவர் மூன்று கிராமமக்களின் இரண்டு தலைமுறையினருக்கு ‘கோட்பாதர்’ (God Father ) போன்றவர். கிளி/பரந்தன் அ.த.க.பாடசாலையின் ஆசிரியராக முதன் முதல் நியமனம் பெற்று வந்தவர். பாடசாலையின் விடுதியில் மனைவி, பிள்ளைகளுடன் தங்கி மூன்று கிராமத்துப் பிள்ளைகளுக்கு இலவசமாக மாலை வகுப்புக்களை வைப்பார். காரை நகரைச் சேர்ந்தவர். வைத்தீஸ்வரக் குருக்கள் அந்தணராகப் பிறந்தவர். உண்மையான அன்பு, பண்பு, ஆற்றல், அறிவு மிக்கவராக இருந்தார். சாதி பார்க்கு மூடத்தனத்தை மாற்றியவர். பாடசாலையில் எல்லோரையும் சமமாக நடத்திக் காட்டியவர். காந்தீயவாதி. மகாலிங்கன், பாலசுந்தரம் முதலியவர்களுக்கு ஆரம்பக் கல்வியை ஊட்டி மகாலிங்கனை யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலைக்கும், பாலசுந்தரத்தைச் சாவகச்சேரிக்கும் சென்று இடைநிலைக் கல்வியைத் தொடர ஊக்குவித்தவர்.

 

சில வருடங்களுக்கு முன்னர் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பற்றி பாமாலை இயற்றி வெளியிட்டவர். யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் அதிபராக இருந்த சரவணபவான் இவரது மருகர் எனக் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

 

இவர் பரந்தன் அ.த.க.பாடசாலை விட்டுப் பயிற்சிக் கலாசாலை சென்று, பின் மலைநாட்டில் சேவையாற்றி, முதிய வயதில் மீண்டும் பரந்தன் அ.த.க.பாடசாலையிற்கு அதிபராக வந்தார். நாங்கள் இவரிடம் ஆரம்பக் கல்வியையும், பண்பாடுகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டோம். யாழ்ப்பாணம் சென்று இடைநிலைக் கல்வியைப் பெறத் தூண்டப்பட்டோம்.

 

எங்கள் கிராமத்துச் சிகையலங்கார நிபுணர் பெயர் பரமர் என்றுதான் ஞாபகம். அவர் மனைவி மட்டுவிலைச் சேர்ந்தவர். படித்தவர். தனது பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்றதா என நேரில் வந்து பார்த்து வைத்தீஸ்வரக் குருக்களுடன் கதைத்து திருப்தியடைந்த பின்னரே குடும்பமாக எமது கிராமத்தில் வந்திருக்கச் சம்மதித்தவர். அவரது மகன் என்னுடன் மூன்றாம் வகுப்பு ஆரம்பத்தில் வந்து சேர்ந்தார். நல்ல நண்பராக இருந்தார். எனது சிறுவயது அறியாமையால் அவரை ஒரு நாள் சாதிப் பெயர் சொல்லி அழைத்துவிட்டேன். அவரும் அழுது கொண்டு தன் வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரத்தில் தாயார் புலிபோல ஆவேசமாக வந்தார். அதிபரிடம் புகார் செய்தார். வைத்தீஸ்வரக் குருக்களும் உடனேயே உதவியாக இருந்த ஒரு ஆசிரியையும், மாணவர்களையும் கூட்டி என் சார்பில் தாயாரிடம் தானே மன்னிப்புக் கேட்டார். மாலை என்னை அழைத்து நான் விட்ட பிழையை அன்பாக, ஆதரவாக எடுத்துரைத்தார். எனது தந்தை, தாயாரும் அவ்வாறு கதைப்பது பிழையெனவும் அடுத்த நாள் காலை வணக்கத்தின் பொழுது அந்த நண்பரிடம் எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்குமாறு கூறினர். அடுத்தநாள் அந்த நண்பரிடம் வைத்தீஸ்வரக் குருக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்டேன். அன்று தொடக்கம் அந்த ஆண்டு முடியுமட்டும் அவருடன் மிகவும் நட்பாகவும், அன்பாகவும் பழகினேன். அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு கற்பதற்காக முதலிலே சென்றிருந்த மூத்த சகோதரரைத் தொடர்ந்து நானும் செல்ல வேண்டியதாயிற்று.

 

வைத்தீஸ்வரக் குருக்கள் விவேகானந்தரைப் பற்றி, மகாத்மா காந்தி பற்றி, நாவலர் பெருமாள் பற்றி, சாதி, மத பேதத்தின் அறியாமைபற்றி, கௌதம புத்தர் பற்றி, பஞ்சபாண்டவர் பற்றி, இராம லக்குமணர் பற்றி சிறுவயதில் கூறிய கதைகள் அப்படியே பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிட்டது. அதனால் அவரளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல ஆசிரியராகவும், சிறந்த அதிபராகவும் சேவை செய்யக் கூடியதாக இருந்தது.

a3

உடுக்கடிப் பாடல்கள்

சித்திரை மாதத்தில் எமது கிராமத்தின் எல்லாக் கோவில்களிலும் சித்திரைக் கஞ்சி காய்ச்சுவர். ஆனால் எல்லாக் கோவில்களிலும் அவசரம் அவசரமாகக் காய்ச்சி, படைத்து, குடித்துவிட்டு எல்லோரும் பள்ளமோட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்வோம். அங்கும் பகலில் சித்திரைக் கஞ்சி காய்ச்சப்பட்டு விடும். பின் இரவுப் பூசையின் முன்னர் சித்திரைக் கதை பாடப்படும். செல்லையா பூசாரியாரும் மெம்பர் வல்லிபுரமும் மாரியம்மன் கதை, காத்தவராயன் கதை, சிறு தெய்வங்களான அண்ணன்மார் கதை, வீரபத்திரர் கதை முதலியவற்றை உடுக்கடித்தபடி பாடுவர். செருக்கனைச் சேர்ந்த தங்கத்துரை, செல்லத்துரை போன்றவர்கள் உடுக்கு அடிப்பதில் நிபுணர்கள். செல்லையா பூசாரியார் காதில் கடுக்கனும், உருத்திராக்க மாலையும் அணிந்திருப்பார். கிராம சபையின் உறுப்பினரான வல்லிபுரம் கடுக்கன் பூட்டிய காது, குடும்பி, தங்கச் சங்கிலியுடன் காட்சி அளிப்பார். பூசாரியார் சில பகுதிகளைப் பாட, மெம்பர் தொடர்ந்து பாட சித்திரக் கதை இரவிராக நடைபெறும். இவர்களது உடுக்கடிப் பாடல்களுக்கு தங்கத்துரை, செல்லத்துரை ஆகியோரின் உடுக்கடி மேலும் மெருகூட்டும். இளைஞராக இருந்த செல்லத்துரை பின்னாளில் பல நாட்டுக் கூத்துக்களை நடாத்தி செல்லத்துரை அண்ணாவியார் என்று பெயரெடுத்தார். சித்திரக் கதையைக் கேட்டு ரசிப்பதற்காக பூநகரி, மீசாலை, சாவகச்சேரியிலிருந்தெல்லாம் பக்தர்கள் வந்திருப்பர்.

a2

கோவில்கள் புனரமைப்பு

(அ) பள்ள மோட்டைப் பிள்ளையார் மூன்றாவது மண்டபம் அமைக்கப்பட்டு மடப்பள்ளியும் கட்டப்பட்டு சுற்றுமதில், தண்ணீர்த்தாங்கி முதலியவற்றுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இப்போது ஒழுங்காக தினப்பூசை நடைபெறுகின்றது. பெரியபரந்தனைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் தற்போது கனடாவில் வசிப்பவர்கள். அவர்களே புனரமைப்பு, கும்பாபிஷேகம், பூசகர் சம்பளம் யாவற்றையும் பொறுப்பேற்றனர். அதுமட்டுமன்றிப் பெரிய பரந்தனின் சகல மாணவர்களுக்குமான மாலை வகுப்பை கோவில் மண்டபத்தில் இலவசமாக நடத்த ஒழுங்கு செய்து ஆசிரியையின் சம்பளத்தையும் வழங்கி வருகின்றனர்.

 

(ஆ) குழந்தையன் மோட்டைப் பிள்ளையார் கோவிலையும் பெரிய பரந்தனைச் சேர்ந்த கனடா வாழ் இளைஞர் தங்கராசா முரளி புனரமைத்து இரண்டாவது மண்டபம் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்தார். தினப்பூசை செய்யும் அந்தணர் சம்பளத்தையும் வழங்கி வருகின்றார். மணிக்கூட்டுக் கோபுரமும் அமைத்துள்ளார்.

 

குழந்தையன் மோட்டைப் பிள்ளையாருக்கும் காளி அம்மனுக்கும் ஐந்து ஏக்கர் காணி உண்டு. காணியின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவிலும் வடமேற்கு மூலையில் காளி கோவிலும் உள்ளன. இக்கோவிலுக்கு பக்தர்கள் காட்டுப் பாதையினூடாகவே வாகனம் கொண்டுவரமுடியும். இதை மாற்றி அமைக்க எண்ணிய திரு.வே.சுந்தரலிங்கம் என்பார் பல காணி உரிமையாளர்களிடம் மனப்பூர்வமான அனுமதியைப் பெற்று பக்தர்களிடம் சேர்த்த பணத்தில் பூநகரி வீதியிலிருந்து 2 கிலோமீற்றர் நீளமுள்ள மண்பாதையை, இடைக்கிடை மதகுகள், குழாய்கள் வைத்து அமைத்துள்ளார். இப்போது பக்தர்கள் நேரடியாகவே பிள்ளையார் கோவில் வளாகத்திற்குச் செல்லமுடியும். கோவிலிற்கு ஒரு குழாய்க் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. பாதையை அமைக்கவும் மடப்பள்ளி அமைக்கவும் பிரதான பங்கு ஆற்றியோர் திரு.வே.கந்தசாமி, திரு.சிவ.உதயன், சுந்தரலிங்கம் குடும்பத்தவர், திருமதி.கமலா கந்தசாமி, திருமதி சின்னக்கிளி, தருமர் குடும்பம்.

 

(இ) இக்கோவிலை அமைத்தவர் முத்தர் என்பார். அவர் மகன் கணபதிப்பிள்ளை. இவரின் மகனான சண்முகம் பூசாரி பரம்பரையாகப் பூசை செய்கின்றார். பல வருடங்களுக்கு முன் காட்டின் நடுவே கல், சூலம் முதலியவற்றால் கொட்டில்களில் அமைக்கப்பட்ட கோவில் அதன் அமைப்பு மாறாது சீமேந்துக் கட்டடமாக அமைக்கப்பட்டு கூரையும் நிரந்தரமாகப் போடப்பட்டுள்ளது. மடப்பள்ளி, மணிக்கூட்டுக் கோபுரம், கிணறு என்பனவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை திரு கணபதிப்பிள்ளை குடும்பத்தவர்களும் திரு நல்லையா குடும்பத்தினரும் செய்துள்ளனர்.

 

(ஈ) இக்கிராமத்திலிருந்து கனடா சென்ற திரு சிதம்பிரப்பிள்ளை குடும்பத்தவர் இக்கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து நித்திய பூசைக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்.

 

தொடரும்….

 

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More