பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
வல்லிபுரம், செல்லையா, சுப்பிரமணியம்:
மூன்று கிராமத்தவர், குமரபுரம் கிராமத்தவர் மற்றும் பொதுவாக கிளிநொச்சி மக்களுக்கு விவசாயம் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வல்லிபுரம், செல்லையா, சுப்பிரமணியம் ஆகியோர் திகழ்ந்தனர். சரசாலையிலிருந்து 1950 களில் வந்த சகோதரர்களான இவர்கள் மண்ணின் மீது வைத்த நம்பிக்கையால் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினர். இவர்கள் மூவரும் மூன்று கிராம மக்களுடன் மிகவும் அன்புடன் பழங்கினர்.
மூத்தவரான வல்லிபுரம் பரந்தனில் அரிசி ஆலையையும் கரடிப்போக்குச் சந்தியில் “ஈஸ்வரன் தியேட்டர்” என்ற சினிமா தியேட்டரையும் அமைத்துச் சிறப்புடன் வாழ்ந்தார்.
இளையவரான சுப்பிரமணியம் மூன்று கிராம மக்களுடன் மிகவும் ஐக்கியமாகப் பழகினார். அவரை மூன்று கிராமத்தின் சிறுவர்கள் முதல் முதியவர் வரை ‘மணியண்ணை’ என்றே அழைத்தனர். பெரியபரந்தனும், குமரபுரமும் இணைந்த கிராமசபை வட்டாரத்தில் தொடர்ந்து கிராமச்சபை உறுப்பினராக இருந்து இரு கிராமங்களுக்கும் அரிய பல சேவைகளைச் செய்தார். தேர்தல்களின் போது குமரபுரம் மக்களின் வாக்குகள் கட்சிவேறுபாடுகள் காரணமாகச் சிலவேளைகளில் எதிர்த்து விழுந்தபோதிலும் பெரியபரந்தன் வாக்குகள் முற்று முழுதாக அவருக்கே விழுந்தன. குமரபுரம் பட்டினசபைக்குள் வந்தபோது மணியண்ணை அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
மணியண்ணை:
மணியண்ணை அரசியலிலிருந்து தான் விலகினாரே தவிர, சமூக சேவையிலிருந்து விலகவில்லை.
1960 களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மூன்று கிராமமக்களும் குமரபுரத்தின் தாழ்ந்த பிரதேச மக்களும் பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் புகலிடம் தேடினர். கிராம விதானையார் அவர்களுக்கான தயாரித்த உணவு, தேனீர் ஒழுங்கு செய்திருந்தார். ஆனால் அவ்வுணவு வருவதற்கிடையில் பாடசாலைக்கு முன் வீட்டிலிருந்து அனைத்துச் சிறுவர்களுக்கும் தோசையும், தேனீரும் வந்து விட்டன. பாடசாலைக்கு முன் வீட்டில் குடியிருந்தவர் மணியண்ணையாகும். அவரது மனைவியாரான இராசம்மா அவர்களே நேரில் தோசை, தேனீர் கொண்டுவந்து கொடுத்தார். நாங்கள் சிறியவர்களாக மணியண்ணை வீட்டு விறாந்தையில் தோசை சாப்பிட்டதும் மதிய நேரங்களில் திருமதி இராசம்மா குழைத்துத் தந்த சோற்று உருண்டைகளைச் சாப்பிட்டதும் இன்றும் பசுமையான நினைவுகளாக உள்ளன.
குமரபுரம் முருகன்:
குமரபுரம் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் கொட்டிலாக இருந்த கோவிலுக்கு கட்டிடம் அமைப்பதில் மணியண்ணை முழுமூச்சாகப் பாடுபட்டார். அவரை மக்கள் பாராட்டிய பொழுது “என்ரை முருகனின் அருளாலும் எமது ஊர்மக்கள் போகத்துக்குப் போகம் வழங்கிய நெல்மணிகளாலும் தான் அது சாத்தியமாயிற்று. குமரபுரத்தான் ஒவ்வொருவரினதும் வேர்வைத்துளிகள் முருகன் கோவில் கட்டிடத்தில் இருக்கின்றன” என்று கூறுவார்.
குமரபுரம் மக்கள் குடாநாட்டிலிருந்து 1950களில் குடியேறியவர்கள். அவர்களிடையே இழப்பு ஏற்பட்டபோது மக்கள் மரணவீடு செய்ய மிகவும் சிரமப்பட்டார்கள். இன்றைய முன்னேற்றகரமான நிலையை அடையாத காலம். மணியண்ணையும், செட்டியாரும், கிராம விதானையாரையும், டீ.ஆர்.ஓ.முருகேசம்பிள்ளையையும் அழைத்து ஒரு பொதுக்கூட்டம் கூட்டினர். மணியண்ணை ஒவ்வொரு மரணம் ஏற்படும்போதும் குமரபுரம் மக்கள் யாவரும் ஒவ்வொரு ரூபாய் வழங்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சகல மக்களும் மகிழ்வுடன் ஏற்றனர். ஒரு ரூபாய் இன்று விரும்பிய தொகையாக மாறிவிட்டது. ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்து இன்றுவரை குமரபுரத்தில் எவரும் மரண வீடு நடாத்த சிரமப்பட்டதில்லை.
மணியண்ணை கிராமச்சபை உறுப்பினராக இருந்த போது கரைச்சிக் கிராமச் சபையின் தலைவராக ஒரு படித்த இளைஞர் வரவேண்டும் என்று மிகவும் விரும்பினார். திருவையாறு படித்த வாலிபர் திட்ட இளைஞர்களடனும் கலந்துரையாடினார். திருவையாறு படித்த வாலிபர் திட்டக் கிராம சபை உறுப்பினரான கிருஷ்ணராசா என்பவரையும் இணைத்து பூநகரியின் உதவி ஆசிரியராகவும் உப்பளத்தின் கிராமசபை உறுப்பினராகவும் இருந்த திரு.ஆனந்தசங்கரி என்பாரை மணியண்ணை முன்மொழிந்தார். ஆனந்தசங்கரி பெரிய அளவில் வெற்றி பெற்று கிராமசபைத்தலைவர் ஆனார். அதுவே அவரைப் பிற்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராவதற்கும் வழிவகுத்தது.
மணியண்ணை ஆரம்பகாலத்தில் ஒரு ஏ-போட்டி காரே வைத்திருந்தார். எந்தச்சாமத்தில் எவர் வந்து மனைவிக்கு வயிற்றுக் குத்து, பேறு காலம் என்று கூறினாலும் அவரது கார் உடன் சென்று அப்பெண்களை ஏற்றிச் சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பிப்பார். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இவரது காரிலேயே பிள்ளை பிறந்த சம்பவமும் இடம்பெற்றது.
மணியண்ணை கிளி/பரந்தன் இந்து ம. வி இன் பாடசாலை அபிவிருத்தியிலும் அதிபர்களோடு தோள் நின்று பாடுபட்டார். அவரது பிள்ளைகள் யாவரும் ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்றனர்.
தெரிந்தவர், தெரியாதவர் யாவரினதும் மரண வீட்டிற்கும் செல்லும் மணியண்ணை, மரண வீடுகளில் தேவாரம் பாடும் குழுவினருடனும் இணைந்து தேவாரங்கள் பாடுவது இப்போதும் மனக்கண் முன் தெரிகின்றது.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/