வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 11வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 11

பெரிய பரந்தன்குஞ்சுப்பரந்தன்செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.

ஆனையிறவு:

பரந்தனுக்கு வடக்கேயும் இயக்கச்சிக்கு தெற்கேயும் அமைந்திருந்த யாழ்குடாவிற்கான நுழைவாயில், செங்கை ஆழியானின் ‘யானை’ என்ற நூலில் யானைகளின் பயணத்தின் போது இறங்கிச் செல்லும் இடம் என்பதைக் காணலாம். ஆனையிறவும், பாலமும், புகையிரதப் பாதையும் பின்னர் அமைக்கப்பட்டவை. 1954ம் ஆண்டளவில் கிளிநொச்சியிலிருந்து சைக்கிளில் செல்லும் இரண்டு பொலிசாரே ‘பரியல்’ என்று சொல்லப்பட்ட (Barrier) தடையிற்குப் பொறுப்பாக இருப்பர். கிளிநொச்சியிலிருந்து வேறிருவர் வந்து பொறுப்பேற்கும் வரையிருப்பர். கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திலும் ஒரு சார்ஜன் தலைமையில் ஏழு, எட்டுப் பொலிசாரே இருந்தனர். பரியலில் இருப்பவர்களுக்கு பஸ் வண்டிகளில் உணவு அனுப்பப்படும்.

tamilmakkalkural_blogspot_eelam_Epass

வாடி வீடு – Rest House:

ஆனையிறவில் ஒரு வாடி வீடு ஒரு மாடியுடன் அமைந்திருந்தது. அரச அதிகாரிகளும் வசதி படைத்தவர்களும் மது அருந்துவதற்காகவும், உணவிற்காகவும் அங்கு செல்வர். பயணிகள், யாழ்ப்பாணம் செல்லும் வழியில் இங்கு தங்கிச் செல்வர். தென்னிந்தியாவின் பிரபல நடிகை யாழ் செல்லும் வழியில் இங்கு தங்கிச் சென்றதைப் பத்திரிகைகள் செய்தியாகப் பிரசுரித்திருந்தன. நடிகையின் பெயர் இராஜசுலோசனா. கடல் நீரேரியின் காற்று வந்து வீசும் திசையில் அழகாக அமைந்திருந்தது அந்த வாடிவீடு.

கள்ளக் குடியேற்றத் தடுப்பு முகாம்:

இந்தியாவிலிருந்து தொழில் தேடி அனுமதியின்றி வருபவர்களைத் தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதற்காகவே இந்த இராணுவ முகாம் முதன் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டது. விடத்தல் தீவு, நாச்சிக் குடா, பள்ளிக் குடாவிற்கே இந்த குடியேற்றவாசிகளை ஏற்றி வரும் வள்ளங்கள் வருவதுண்டு. காற்றினால் அலைக்கழிக்கப்பட்டுத் திசை மாறும் சில வள்ளங்கள் சுட்டத் தீவுத் துறைக்கு வந்து விடுவதுமுண்டு. இந்த வள்ளங்களையும் அதில் வருபவர்களையும் கள்ளத் தோணிகள் என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.

சுட்டதீவு:

கச்சாய் துறையிலிருந்து மூன்று கிராம மக்கள் போக்குவரத்துச் செய்த இடம்.

நம்பியவர்களுக்கு நம்பியதைக் கொடுக்கும் சுட்டதீவு அம்மனும், பிள்ளையாரும் அமர்ந்திருந்த இடம்.

திசைமாறும் கள்ளத் தோணிகள் வந்து இறங்கும் இடம்.

1995, 1996இல் பாரிய யாழ்மக்களின் இடப்பெயர்வின் போது இலட்சக்கணக்கில் மக்கள் வந்து இறங்கிய இடம். அப்போது மக்கள் கிளாலியிலிருந்து சுட்டதீவிற்கும் கறுக்காய் தீவிற்கும் வந்திறங்கினர்.

இவைமட்டுமல்ல வள்ளங்களில் வரும்போது இராணுவத்தால் கொல்லப்பட்ட உடல்களும் சுட்டதீவுக்கருகிலேயே நூற்றுக்கணக்கில் வந்து ஒதுங்கின.

தனுஷ்கோடி, சுப்பு, அழகு:

திசைமாறி வந்த கள்ளத்தோணியொன்று சுட்டதீவுக் கடற்கரையில் வந்து ஒதுங்கியது. அதில் வந்த சிலர் கள்ளக் குடியேற்றத் தடுப்புப் படையினரால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் தப்பி ஓடிவிட்டனர். தனுஷ்கோடியும் அவரது மருமகனான சுப்புவும் (பத்து வயது) உறவினனான அழகுவும் (பன்னிரண்டு வயது) இரண்டு நாட்கள் காட்டில் சாப்பாடு, தண்ணியின்றி ஒழித்திருக்கும் போது மூன்று கிராமத்தவரால் மீட்கப்பட்டனர். இரண்டு கிழமை மூவரையும் வைத்துப் பராமரித்தப்பின் தனுஷ்கோடியை திருகோணமலைக்கு அனுப்பிவிட்டனர். சுப்புவும், அழகுவும் பெரியபரந்தன் மக்களால் மாறி, மாறி பராமரிக்கப்பட்டனர். இளந்தாரிகளாகும் வரை பெரிய பரந்தனில் வாழ்ந்ததால் வன்னியின் மொழி வழக்கும், பழக்க வழக்கங்களும் அவர்களுக்குப் பிடிபட்டுவிட்டன.

4220851943_28f1bbf464

தனுஷ்கோடி இடையிடையே வந்து சுப்புரையும், அழகுவையும் பார்த்துச் செல்வார். அவருக்குத் திருகோணமலைத் துறைமுகத்தில் நாட்டாமை (மூட்டை தூக்கும்) வேலை கிடைத்தது. சிறுவர்களானபடியால் சுப்புவும் அழகுவும் குடியேற்றத் தடுப்புப் படையினரிடமிருந்து தப்பி விட்டனர். இளைஞர்களாகும் வரை மாறி மாறி மூன்று கிராமத்து மக்கள் வீடுகளில் தங்கி அவர்களது வயல் வேலைகளில் உதவி புரிந்தனர். கூலியும் பெற்றனர். இரண்டு வருடங்களுக்கொருமுறை கச்ச தீவிற்குச் சென்று தாம் சேர்த்து வைத்த காசையும் வாங்கிச் சென்ற உடுப்புகளையும் தமது தாய், தந்தை, உறவினர்களிடமும் கொடுத்து அனுப்பினர். சுப்பு கார் ஓட்டப் பழகி அனுமதிப்பத்திரமும் பெற்று விட்டான். இருவரும் விதானையாரின் மனைவியிடம் எழுதப் படிக்க, கணக்குப் பார்க்கப் பழகி விட்டனர்.

தனுஷ்கோடியும் உழைத்த காசை அனுப்பி மதுரையில் காணி வாங்கி, வீடும் கட்டச் செய்து விட்டார். சுப்புவிற்கு பாஸ்போட் எடுப்பித்து இந்தியாவிற்கு அனுப்பித் தமது மகளைத் திருமணம் செய்ய வைத்து விட்டார்.

அழகு இந்தியாவிற்குக் காசு அனுப்புவதை நிறுத்திச் சேமிக்க ஆரம்பித்தான். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணொன்றை மூன்று கிராமத்தவரின் முழுமனதான ஒத்துழைப்புடன் திருமணம் செய்து கொண்டான். இலங்கையில் பிறந்தவரான மனைவியின் பெயரில் அரசினரிடமிருந்து பெற்று வயல் செய்யத் தொடங்கினான். மேலும் வயல்கள், ராக்டர் என்பவற்றைக் கொள்வனவு செய்தான். பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கோஸ்ரலில் தங்கியிருந்து படிக்கச் செய்தான்.

இன்று அழகின் பிள்ளைகளெல்லாம் மேற்கு நாடுகளில் குடியேறி நன்கு வாழ்கின்றனர். ஒரு மகன் மட்டும் அரசு உத்தியோகம் பெற்று சாவகச்சேரியில் மணமுடித்துச் சிறப்பாக இங்கேயே வாழ்கின்றார். அழகு இந்தியாவில் உள்ள உறவினரை இன்றும் போய் சென்று பார்த்து விட்டு வருகின்றார். இடையிடையே காசும் அனுப்புகின்றார்.

highlights-sri-lanka

நீவில் வாழ்க்கை:

1995ம், 1996ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது மூன்று கிராமத்து மக்களில் பெரும்பகுதியினர் நீவில் கிராமத்தில் குடியேறினர். பலருக்கு நீவிலில் காணிகள் இருந்தன. ஏனையோர் உறவினர், நண்பர்களின் காணிகளில் தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்தனர். கிளி/பரந்தன் அ.த.க.பாடசாலையும் அவர்களுடன் இடம்பெயர்ந்து சென்று தற்காலிகக் கொட்டகைகளில் இயங்கியது. பாடசாலையருகேயே கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளையும் இயங்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து குஞ்சுப்பரந்தன் தபாற்கந்தோரும் அங்கேயே குடிபெயர்ந்து சென்றது. செஞ்சிலுவைச் சங்கத்தினர் அங்கு குடியேறிய மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், சிறுவர் பாடசாலையையும் நடத்தினர். சைக்கிள் கடை, சிறு மரக்கறிச் சந்தையென்று பாடசாலைச் சுற்றாடல் ஒரு சிறு நகரமாக மாறியது. 2003ம் ஆண்டு மீளக்குடியேறும் வரை பாடசாலை, தபாற்கந்தோர், ப.நோ.கூ.சங்க கிளையென்பன அங்கேயே இயங்கின. மக்களும் அதுவரை அங்கேயே வாழ்ந்தனர்.

தொடரும்….

 

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/

ஆசிரியர்