குடமுருட்டி, தியாகம், நல்லூர்
பூநகரி வீதியினூடாக பயணம் செய்ய ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பரந்தன் சந்தி, பாம்புக்கமம், ஓசியர் சந்தி, 5ம் வாய்க்கால், நீலனாறு, பெரியபரந்தன், கொல்லனாறு, குஞ்சுப்பரந்தன், செருக்கன், நீவில், குடமுருட்டி ஆறு, தியாகம், சாமிப்புலம், நல்லூர். தமிழ்நாட்டில் கோவில்கள் நிரம்பிய கும்பகோணத்திற்கு அருகே குடமுருட்டி ஆறு பாய்வதாக அறிகிறோம்.
இங்கேயும் ஒரு குடமுருட்டி கார்த்திகை, மார்கழி, தையில் பொங்கி பிரவாகித்து ஓடிச்சென்று கடலில் கலப்பாள். யாழ்ப்பாணத்திற்கு நீர் வேண்டும் என்கிறார்களே? குடமுருட்டியால் பாய்ந்து சென்று கடலில் கலக்கும் நீரைப் பத்து யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் ஓர் நல்லூர். இங்கு பூநகரியிலும் ஒரு நல்லூர், நல்லூரிலிருந்து கோலோச்சிய அரசன் யாழ்ப்பாடிக்கு வழங்கிய நிலப்பரப்பே யாழ்ப்பாணம் என்றாயிற்று என்பார்கள். யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து அரசன் யாழ்ப்பாடிக்கு நிலத்தைத் தானம் செய்திருப்பானாயின் தன்னையும் சேர்த்து வழங்க வேண்டி ஏற்பட்டிருக்கும். எனவே பூநகரி நல்லூரிலிருந்து கோலோச்சிய அரசன் யாழ்ப்பாடிக்கு யாழ்ப்பாணத்தை வழங்கினான் என்பதே ஏற்றுக்கொள்ளக்கூடியது.
பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் குஞ்சுப்பரந்தனில் ஒரு முதுமக்கள் தாழியைக் கண்டெடுத்தார் என்பதும், கைலாயவன்னியன் இந்தியாவிலிருந்து தாளையடி வழியாகப் படையுடன் வந்து, வழியில் சங்கிலி மன்னனைக் கண்டு சமரசம் செய்தானென்றும் பொறிக் கடவையைக் கைப்பற்றிச் சில காலம் வைத்திருந்து பின் உடையார் பரம்பரையினரிடம் பொறிக்கடவையை ஒப்படைத்துச் சென்றான் என்ற வரலாறும் நல்லூரில் ஒரு இராச்சியம் இருந்ததற்கான சான்றுகளாகக் கொள்ளலாமா?
செருக்கன் என்ற பெயரும் மிகப்பழைமையான கிராமத்தைச் சுட்டி நின்றது.
நீவில் கிராமம் மூன்று கிராம மக்களுக்கும் வயல் செய்வதற்காக அரசினர் வழங்கிய நான்கு ஏக்கர் திட்டம் ஆகும். சிலர் நீவில் குடியேறி வேளாண்மை செய்ய பலர் மீசாலை, சாவகச்சேரியில் இருந்து காலபோகம் செய்ய மட்டும் வந்து போவார்கள்.
நீவிலிற்கு அருகே தியாகம் என்ற இடம் பொன் கொழிக்கும் பூமியாக இருந்தது. தென்மராட்சியிலிருந்து பலர் அடாத்தாகக் காடு வெட்டி, களனியாக்கி குடமுருட்டியை மறித்து அணைக்கட்டி அதன் மூலம் நீர்பாய்ச்சி வேளாண்மை செய்தனர். அரசினர் அவர்களின் முயற்சி கண்டு சிலருக்கு அனுமதிப்பத்திரமும் வழங்கினார்கள். இந்தத் தியாகம் என்ற ஊரிலே நடந்த ஒரு துன்பமான நிகழ்வைப் பற்றியே இப்பொழுது எழுதப் போகின்றேன். தென்டராட்சியில் இருந்து வந்த மக்கள் காடு வெட்டி களனியாக்கியவர்கள். கூட்டாக பொங்கி பிரவகிக்கும் குடமுருட்டியை முழுவதும் கட்டுப்படுத்த முடியாது. பெரும்பகுதி நீரைப்பாய விட்டு ஒரு பகுதியை மட்டும் மண்சாக்குகள் போட்டு கூட்டு முறையிலே மறித்து வாய்க்கால்கள் அமைத்து நீர்ப்பாய்ச்சி நெற்செய்கை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். எல்லோரும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டனர். இப்படிப்பட்ட தியாகத்திற்கு சாபம் போல, களை போல ஒருவன் வந்து சேர்ந்தான். முரடன், தான் சொல்வதுதான் செய்வதுதான் சரியென்றும் எதிர்க்கருத்து சொல்பவர்களைத் தாக்கி வருத்துபவனாகவும் இருந்தான். தான் நினைத்த நேரத்தில் தன் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டான். உடல் பலம் மிக்கவன். ஒரு ஒழுங்குக்கும் கட்டுப்படவில்லை. தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டான். மகாபாரத்திலே வீமனால் வதைக்கப்பட்ட “பகன்” என்ற அரக்கனை போல் இருந்தான். எனது சிறு வயதில் நடந்தது. ஞாபகத்தில் எழுதுகின்றேன். சம்பவத்தில் பங்குகொண்டவரெவரும் இப்போது உயிருடன் இல்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது போல தியாகத்தில் குடும்பமாக வாழ்ந்தவர்களின் மனைவியருடன் தவறாக நடக்கவும் துணிந்தான். தியாகத்தில் கமம் செய்த ஏனையவர்களுக்கு ஒரே தெரிவுதான் காணப்பட்டது. கூடித் திட்டம் இட்டார்கள். அரக்கனை அழிப்பதே வழி சட்டம் தெரிந்த யாரோ ஒருவரிடம் ஆலோசனை பெற்றார்கள். இந்தக் கொலை இத்தாலி நாட்டின் “சிசிலித்தீவிலே” மாபியாக்கள் பழிவாங்கச் செய்த கொலைகளை ஒத்திருந்தது. நுளம்புக் கொடுமை, பாம்புக்கடி, யானைகளின் தொல்லை, பன்றிகள் குழுவன் மாடுகளால் அழிவு எல்லாவற்றையும் தாங்கி வயல் செய்து சாதாரணமான வாழ்வு வாழ்ந்த மக்கள் ஒரு கொடூரனைக் கொடுமையாகத் தண்டிக்க துடித்தார்கள். கொடூரன் நன்கு குடித்து உறங்கிய ஒரு நாளைத் தெரிந்து எடுத்தார்கள். தனது கொட்டிலிலே தூங்கியவனை கொல்ல ஐந்து, ஆறு பேர் கொண்ட குழு இரகசியமாக முன்னேறியது. அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அவனால் கடும் பாதிப்புக்குள்ளானவர்கள் அவர்கள் அவசரப்படவில்லை. நிதானமாகக் கொட்டில் கதவை திறந்தார்கள். அவனோ நல்ல நித்திரை. அவனது முழங்கால் சில்லை நோக்கி நிதானமாக அக்குழுவிலிருந்த ஒருவர் சுட்டான். அலறித் துடித்து எழுந்தவனை எல்லோரும் கொட்டன்களால் அடித்துச் செயலிலக்கச் செய்தனர். கைகளை பின்பக்கமாக கட்டினார்கள். அடுத்து நடந்ததை இதய பலவீனம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டாம்.
அவனைப்போல இனியொருவரும் தோன்றக் கூடாது. பிறன்மனை நோக்குபவர்கள் இவனுக்கு வழங்கப்படும் தண்டனை கண்டு அஞ்ச வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஜுலியஸ் சீசரை அவரது அரசிலிருந்தவர்களே கொன்றது போன்று பாதிக்கப்பட்ட அனைவரும் அவனைக் கத்திகளால் குத்திக் கொன்றார்கள். பிணத்தை ஒரு சாக்கிலே இட்டார்கள். குடமுருட்டி ஆற்றின் நடுவிலிருந்த பட்டமரத்துடன் கொண்டு சென்று கட்டிவிட்டார்கள். ஆறு பொங்கிப் பாய்ந்துக் கொண்டிருந்தது. அதனால் ஒருவரும் பிணத்தை காணவில்லை. தை மாதம் நீர் வற்றியது. காகங்கள் கண்களில் பிணம் உள்ள சாக்கு பட்டு விட்டது. அவை கூடிக் கரைந்து கொத்தத் தொடங்கின. நாற்றம் மூக்கை துளைத்தது. பொலிசாருக்குத் தகவல் போயிற்று குடமுருட்டி ஆற்றின் கிழக்குப் பகுதி கிளிநொச்சிப் பொலிசாரின் ஆளுமைக்கும், மேற்பகுதி சாவகச்சேரி பொலிசாரின் ஆளுமைக்கும் உட்பட்டிருந்தன. வழக்கை யார் ஏற்பது என்பதில் சர்ச்சையும் அதனால் இழுபறியும் ஏற்பட்டன. ஈற்றில் சாவகச்சேரி பொலிஸ் வழக்கை எடுத்துக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்பட்ட கொலை என்பதைப் பொலிஸார் புரிந்து கொண்டனர். அவனால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். கொலை செய்தவர்கள் யாவரையும் கைது செய்து விளக்க மறியலில் வைத்தார்கள். ஒருவரும் கோட்டில் வாய் திறக்கவில்லை. பொருத்தமான வேறு சாட்சிகளும் இல்லை. நீண்டகாலம் விசாரனை நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை. கைதான யாவரும் விடுவிக்கப்பட்டனர். காலவோட்டத்தில் ஒவ்வொருவராக இறந்தும் விட்டனர். தியாகம் என்ற கிராமம் இன்றும் உள்ளது. உண்மையாக பாடுபட்டவர்களுக்கு விளைச்சலையும் கொடுக்கின்றது. குடமுருட்டியும் இன்றும் பொங்கி பிரவாகித்து நுரைதள்ளி ஓடுகின்றது.
பாம்புக்கமம்
பாம்புக்கமம் என்பது உண்மையாகவே நாகபாம்புகள் நிறைந்திருந்த காடு. வினாசித்தம்பியென்பார் துணிந்து ஒரு அம்மன் கோவிலை அமைத்து நாக பூசணி அம்மன் என்று பெயரிட்டு பூசை செய்து வந்தார். காடுகளை அழித்துக் களனிகளாக்கினார். பாம்புகள் படி படியாகக் குறையத்தெடங்கியது. அதன் பின்னரே மக்கள் அந்தப் பாதையில் இரவிலும் செல்லும் துணிவு பெற்றனர்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-11/