புகையிரதப் பயணமும் மாணிக்க வாத்தியாரும்
வண்டிலும் தோணியுமாகத் தமது போக்குவரத்தை எளிமையாக அமைத்துக்கொண்ட மூன்று கிராம மக்கள் தம்மை சுற்றி நடைபெறும் மாற்றங்களையும் அவதானித்து உள்வாங்கிக் கொண்டனர். காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்குமிடையே புகையிரதப்பாதை அமைக்கப்பட்டதையும் ஆணையிறவில் பாலத்தின் மேல் புகையிரதப் பாதை சென்றதையும் பார்த்து வியந்தனர். இரணைமடு குளத்தையொட்டி சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் அரசிடமிருந்து ஆயிரம் ஏக்கர் காணியை பெற்று, காடுகளை வெட்டி களனிகளாக்கியதையும் அந்த வேலைகளைச் செய்ய குடாநாட்டிலிருந்து கூலியாட்கள் வரவழைக்கப்பட்டதையும் கண்டனர். அவர்களை அழைத்து வருவதற்காக காங்கேசன் துறையிலிருந்து பளைவரை ஒரு விசேட புகையிரதசேவை நடாத்தப்பட்டது. கூலியாட்கள் பளையிலிருந்து கால்நடையாகவே இராமநாதன் பண்ணைக்குச் சென்றனர். பின்னர் புகையிரச் சேவை பரந்தன் வரை நீடிக்கப்பட்டது. அப்போது ஒரு சிறிய புகையிரத நிலையம் பரந்தனில் இருந்தது. அதைவிட பூனகரிநோக்கிச் சென்ற வண்டில் பாதையை ஒட்டி ஒரு சிறிய கடையும், முல்லைத்தீவு நோக்கிச் சென்ற பாதையில் ஒரு சிறிய கடையும் இருந்தன. மற்றும் படி அவ்விடத்தில் யானைகளும் குழுமாடுகளும் உலாவும் பெருங்காடு காணப்பட்டது. இந்த இடமே இன்று பரந்தன் நகராக பார்த்தோர் வியக்கும் வண்ணம் காட்சியளிக்கின்றது. சிறிய கடைகள் இரண்டிலும் இருபகுதிகள் காணப்பட்டன. ஒரு பகுதி பலசரக்குப் பகுதி, மறு பகுதி தேனீர்க் கடையாக இயங்கியது. இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் இப்போது எழுதும் விடயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. நான் செவிவழி கேள்விபட்டதையே எழுதுகின்றேன். சான்றாதாரம் ஒன்றும் என்னிடம் இல்லை.
பின்னர் இராமநாதன் பண்ணையிலிருந்து ஐந்து ஆறு வண்டில்கள்; பரந்தன் வரை வந்து ஊர் செல்ல விரும்பிய பண்ணையாட்களை இறக்கி விட்டு, ஊரிலிருந்து வந்த பண்ணையாட்களை ஏற்றிச்சென்றன. ஏனெனில் இப்பாதைகளில் தனிவழியே செல்வது அபாயம் மிக்கது.
கண்டாவளை கரவெட்டித்திடல்வரை செல்லவேண்டியவர்கள் புகைவண்டியிலிருந்து இறங்கி முல்லை வீதியிலிருந்த கடையில் இரவு முழுவதும் தங்கி விடிந்த பின் நாலைந்து பேராக நடந்தோ, வண்டிகளிலோ செல்வர். தென்மராட்சியிலிருந்து ரெயில் வண்டியில் வந்தவர்கள் விடியும் வரை பூநகரி வீதியிலிருந்த கடையில் தங்கி விடிந்த பின் எல்லோரும் சேர்ந்து மூன்று கிராமங்களை நோக்கிப் பயணம் செய்தனர். சிறுத்தைகளும், கரடிகளும், யானைகளும் சர்வசாதாரணமாக வந்து போகும் அடர்ந்த காட்டில் எவ்வாறு தனியே பயணம் செய்ய முடியும்.
சேர் பொன் இராமநாதனைத் தொடர்ந்து குடாநாட்டிலிருந்த படித்தவர்களான ஆசிரியர்கள், கிளாக்கர்கள் போன்றோரும் அரசிடமிருந்து தத்தம் வசதிகளுக்கேற்ப இருபத்தைந்து ஏக்கர்கள் முதல் ஐம்பது ஏக்கர்கள் வரை பெற்றுக் காடுகளை வெட்டிக் களனிகளாக்கினர். இவர்கள் வெட்டிய காடுகள் முன்னர் பெரிய பரந்தன் காடு என் அழைக்கப்பட்டன.தற்போது ஐந்தாம் வாய்க்கால் என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்களும் குடாநாட்டிலிருந்தே கூலியாட்களைக் கொண்டு வந்தனர். இவர்கள் களனிகளில் வேலை செய்ய வருவோர் புகைவண்டிப் பயணங்களுக்குப் கட்டணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மேற்படி பதிவு செய்யப்பட்ட கமக்காரர்களிடமிருந்து அவர்களின் கமத்தில் வேலை செய்பவர்கள் என எழுதி ஒப்பமிடப்பட்ட சிறு துண்டை காட்டுதல் போதுமானதாயிற்று. அந்த துண்டுகள் இக்காலத்தில் அரச ஊழியம் புரிவோருக்கு வழங்கப்படும் ‘வாறன்ட்’ (Warent) டை ஒத்திருந்தன. மாணிக்க வாத்தியார், ஆசிர்வாதம் மாஸ்டர், கிளாக்கர் போன்றவாக்கள் பிரபல கமக்காரராகும். மாணிக்க வாத்தியார் என்பவர் மிகவும் நேர்மையானவராகவும் ஏழைகள் மீது அன்பு கொண்டவராகவும் இருந்தார். இவர் மணியடிக்கும் முறையைப் பெரியபரந்தன் காட்டில் நடைமுறைப்படுத்தினர். அதிகாலையிலிருந்த இருள் சூழும் வரை கூலியாட்கள் வருந்துவதை இவர் விரும்பவில்லை. பொல பொல என விடியும் போது ஒருமுறை மணியடிப்பார். பண்ணையாட்கள் யாவரும் எழுந்து காலைக்கடன்களை முடிக்க நேரம் தரப்படும். ஆடுத்த மணிக்கு யாவரும் தேனீர் அருந்தச் செல்ல வேண்டும். தேனீரின் பின் அடிக்கப்படும் மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். ஒன்பது மணிக்கு ஒரு மணி அடிக்கப்படும். யாவரும் கை, கால் அலம்பிக் காலை உணவிற்குச் செல்ல வேண்டும். காலை உணவு என்பது அனேகமாக பாற்கஞ்சியாகவே இருக்கும். முதல் நாள் சாதம் மீதியாய் இருந்தால் நீர் ஊற்றி மூடப்படும். அடுத்த நாள் மிளகாய், வெங்காயம் வெட்டிப்போட்டு அருமையான மோர் விட்டுக் கலக்கிய ‘பழம் தண்ணீர்’ வெயில் காலத்தில் அமிர்தம் போன்றிருக்கும்;. கோதுமை மா அதிகம் புழக்கத்தில் இல்லாததால் இக்காலத்தில் வழங்கப்படுவது போல றொட்டியோ, பாணோ வழங்கப்படுவதில்லை.
மதியம் பன்னிரண்டு மணிக்கு மதிய உணவிற்கான மணி அடிக்கப்படும். யாவரும் உடற் தூய்மை செய்து மூன்று, நான்கு கறி வகைகளுடன் வயிறார உண்பர். உச்சி வெயிலில் வேலை செய்ய விடாது இரண்டு மணிவரை ஓய்வு, ‘உண்டகளை தொண்டருக்கும் உண்டு’ அல்லவா. யாவரும் படுத்து ஓய்வு எடுப்பர். இரண்டு மணிக்கு அடிக்கப்படும் மணிக்கு வேலைத்தளம் செல்லும் பண்ணையாட்கள் ஐந்து மணிக்கு அடிக்கப்படும் மணியுடன் வேலையை முடித்து, குளிப்பு, ஆடைதுவைத்தல் முதலிய தமது சொந்த அலுவல்களை புரிவர். இரவு படுக்க போகும் மட்டும் தாயம் விளையாடுதல், நாயும் புலியும் விளையாடுதல், ஆட்டம் பாட்டம் என அவர்களது பொழுது போகும்.
மாணிக்கவாத்தியாரைப் பார்த்து, அவரது மணியோசைப்படியே ஏனைய கமக்காரர்களும் நடந்து கொண்டனர். இதனால் குடாநாட்டிலிருந்து மேலும் மேலும் கூலியாட்கள் வேலைக்கு வரத்தொடங்கினர்.
மூன்று கிராம மக்கள் வேறு கமங்களில் சென்று வேலை செய்யும் வழக்கம் ‘ராக்டர்’ கலாச்சாரம் வரும்வரை ஏற்படவில்லை. ஆனால் அவர்களும் ரயில் வண்டியில் பிரயாணம் செய்ய ஆசைப்பட்டனர். தமக்கும் துண்டு தரும்படி மாணிக்க வாத்தியாரை வேண்டினர். வேலைசெய்யாதவர்களுக்கு மாணிக்க வாத்தியார் ஒருபோதும் துண்டு கொடார். ஆனால் மூன்று கிராமமக்களிடம் மாணிக்க வாத்தியார் அன்பு மிகக் கொண்டவர். தமது நேர்மையையும் தவறவிடாது அவர்களுக்குத் துண்டு கொடுக்க ஒரு உபாயம் செய்தார். ஒரு சிறிய மண்வெட்டியை தயார் செய்து வைத்து கொண்டார். மூன்று கிராமத்தவர் எவரும் புகையிரதத்தில் இலவசமாக செல்லும் துண்டு கேட்டு வந்தால் அந்தச் சிறு மண்வெட்டியால் மூன்று முறை நிலத்தில் கொத்தும்படி கூறுவார். தமது நிலத்தில் கொத்தியவருக்கு இலவசப்பயணத்திற்கான துண்டை மகிழ்வோடு வழங்குவார். மூன்று கிராமத்து இளைஞர்களுக்கு வாத்தியாரின் நிலத்தில் மூன்று முறை கொத்திய பின் துண்டு பெற்று ரெயிலில் இலவசப் பயணம் செய்தல் மிகவும் ‘திறில்’ ஆன அனுபவமாயிற்று.
இந்த இனிமையான காலம் காலப் போக்கில் நீங்கியது. கட்டணம் கட்டிச் சீட்டுப்பெற்று பயணம் செய்யும் காலமும் வந்தது.
பரந்தன் வரை ஓடிய மேற்படி புகையிரதம் பழையபடி பளையுடன் தனது சேவையை நிறுத்தியது.
புகையிரத பயணமும் ஆனந்தசங்கரியும்
இளைஞராக ஆசிரியராகக் கடமையாற்றவென வந்த திரு ஆனந்தசங்கரி அவர்கள் சிறந்த ஆசிரியர் என மதிக்கப்பட்டார். ஆனையிரவு உப்பள பகுதியின் கரைச்சிபிரதேச சபையின் சாதாரன உறுப்பினரானார். உறுப்பினர்களில் கற்ற இளைஞராக இருந்தமையால் கரைச்சி பிரதேசசபையின் தலைவர் ஆனார். தமக்கு கிடைத்த கரைச்சி பிரதேசசபையின் தலைமைப் பதவியைத் தக்கபடி பயன்படுத்திச் சேவையாற்றியமையால் கிளிநெச்சி மக்களின் அவதானிப்புக்குள்ளாகி கிளிநெச்சித் தொகுதியின் பாராளுமன்ற அங்கத்தவருமானார். இவை என்னால் முன்னே எழுதப்பட்டவிடயங்கள் இங்கே நான் எழுதப்போகும் புகையிரதப் பயணமும் சற்று சுவாரஸ்யமானதுதான். நூன் எழுதும் காலகட்டத்தில் மேற்படி புகைவண்டிப் பயணம் மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பளை வரையே ஓடிக்கொண்டிருந்தது. இன்று நான் இதை எழுதும் 2014 இல் புகையிரத சேவை கொழும்பு கோட்டைக்கும் பளைக்குமிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
முன்பு கமவேலைக்குக் குடா நாட்டிலிந்து ஆட்கள் வந்தது மாறிக் குடா நாட்டிலிருந்து ஆசிரியர்களும் அரச ஊளியர்களும் பெருமளவில் வன்னிக்கு வரவேண்டிய கால மாற்றம் ஏற்பட்டது. குடியேட்டதிட்டங்களினால் பெருமளவுமக்கள் யாழ்குடாநாட்டிலிருந்து வன்னியில் குடியேரினர். குடியேற்றத்திட்டங்கள் தொறும் பாடசாலைகள் அமைக்கப்பட்டன அதனால் அசிரியர்கள் தேவையும் அதிகரித்தது.
காங்கேசன் துறையிலிருந்து பனைவரை வரும் புகையிரத வண்டியின் வரலாற்றை அறிந்த இவ் ஆசிரியர்களும் அரச ஊழியர்களும் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆனந்தசங்கரி அவர்களை அணுகி அந்தப்புகைவண்டியைத் தாம் காலையில் வேலைக்கு வந்து மாலையில் வீடு திரும்ப தக்கதாக நேர அட்டவணையில் சில மாற்றங்கள் செய்து அந்தப் புகையிரதத்தைக் கிளிநொச்சி புகையிரத நிலையம் வரை ஓடும் படி செய்ய ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டார் போக்குவரத்து அமைச்சிடமும் ஏனைய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில் அப்புகையிரதத்தைக் கிளிநொச்சிவரை ஓடச் செய்தார். பயன்பெற்ற ஆசிரியர்களும் அதிகாரிகளும் அப்புகைவண்டிக்கு “சங்கரி வண்டி” எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-11/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-12/