Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன் வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன்

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன் வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 14 | மகாலிங்கம் பத்மநாபன்

7 minutes read

 

மூன்று கிராமத்தவர் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவை எருமைகளும், மாடுகளும். இன்றைய தலைமுறையினர் எருமைகளைக் கண்களால் கண்டதில்லை அவற்றின் சுவைமிக்க தயிரை சாப்பிட்டதும் இல்லை.

 

மாடுகள்

தமிழில் ‘மாடு’ என்பது செல்வம் என்றும் பொருள்படும். ஒவ்வொருவரின் பட்டியிலுள்ள மாடுகளின் எண்ணிக்கையை கொண்டே அவரது செல்வம் மதிக்கப்படுகின்றது. இன்றும் மாடுகளின் எண்ணிக்கைக் கொண்டே ஆபிரிக்காவின் சில பகுதிகளில் மனிதனின் செல்வச் செழிப்பு கணிக்கப்படுவதும் மணமகனால் மாமனாருக்கு வழங்கப்படும் மாடுகளின் எண்ணிக்கை கொண்டே அவன் தனது மகளுக்கு பொருத்தமானவனா? ஏனத் தீர்மானிக்கப்படுவதும் நடைபெறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. மூன்று கிராமத்தில் இலங்கையின் ஆதி இனமான சிறிய தோற்றமுடைய மாடுகளே முதலில் இருந்தன. பின் இலங்கையின் வடக்குத் திசையிலுள்ள இந்தியாவிலிருந்து  கொண்டுவரப்பட்டதால் வடக்கன் மாடுகள் என்று அழைக்கப்பட்ட உருவத்தில் பெரியமாடுகள் சேர்ந்து கொண்டன. இதனால்  கலப்பினங்களும் உருவாகின.

இன்றைய தலைமுறையினரிடம் சிந்து, ஜேர்சி, பிரிசீயன் முதலிய வெளிநாட்டு இனங்கள் அறிமுகமாகியுள்ளன. குளிர் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இவ்வினங்கள் இலங்கையின் தட்ப வெப்ப நிலையில் வாழ சிரமப்பட்டதால் கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன. முதிர்ந்த மாடுகளில் ஆண் ‘எருது’ என்றும் பெண் ‘பசு’ என்றும் அழைக்கப்படுகின்றன. இளம் மாடுகளில் ஆண் ‘நாம்பன்’ எனவும் பெண் ‘நாகு’ எனவும் அழைக்கப்படுகின்றன.

 

tgfஎருத்து மாட்டு வண்டில்கள்

சில்லுகளில் பதிப்பதற்கான இரண்டு வளையங்களும் இரண்டு அச்சாணிகளும் சில வேளைகளில் அச்சும் தவிர ஏனைய பகுதிகள் மரத்தாலும் ஆனதே மாட்டு வண்டிகள். பெண் பசுக்களையோ நாகு கன்றுகளையோ மூன்று கிராமத்தவர் வண்டில்; இழுத்தல், உழவு போன்ற கடினமான வேலைகளுக்கு பயன்படுத்துவதில்லை. மாறாக அமெரிக்காவின் முதல் குடியேற்றவாசிகள் பெண் குதிரைகளை பூட்டி உழுத சம்பவங்களையும் வாசித்து அறிகின்றோம். இரண்டு எருதுகள் பூட்டப்பட்ட  வண்டில்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. ஒரு எருது மட்டும் பூட்டிய ‘ஒற்றைக்கரத்தை’ மூன்று கிராமத்தவரிடம் காணப்படவில்லை.

மாடுகளின் நிறத்தின் அடிப்படையில் கறுப்பி, சிவப்பி, வெள்ளை, மாவெள்ளை, மயிலை என மாடுகளுக்கும் பெயர் சூட்டி அழைக்கும் வழக்கம் மூன்று கிராமத்தவரிடமும் காணப்பட்டது.

காட்டு மரம், அலம்பல் போன்றவற்றால் காட்டு எல்லைகளில் வட்ட வடிவில் அக்கில்களால் அமைக்கப்பட்டதே ‘பட்டிகள்’ என்று அழைக்கப்பட்டன. மழைக் காலத்தில் நீர்தேங்கி நிற்காத மேடான பகுதிகளிலேயே மூன்று கிராம மக்கள் தங்கள் பட்டிகளை அமைத்தனர். மழைக்கு ஒதுங்கி நிற்கத்தக்க ஓங்கி உயர்ந்து கிளைகள் பரப்பிய மரங்கள் ஒவ்வொருவரின் பட்டியிலும் காணப்பட்டன. வயல்கள் செய்யப்படாத காலத்தில் மாடுகள் வயல்களிலே அலம்பல்களினால் ஆன தட்டிகளால் செவ்வக வடிவப் பட்டிகளில் அடைக்கப்பட்டன. வயல், மாடுகளின் சிறுநீரினாலும் எருவாலும் நிரப்பப்பட்டதும் பட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

ஒரு பக்கம் அப்படியே இருக்க ஏனைய மூன்று பக்க தட்டிகளையும் மாற்றிக் கட்டுவதன் மூலம் புதிய பட்டி உருவாக்கப்படும். இந்த முறையினால் வயலின் எல்லாப்பகுதிகளும் இடைவெளியற்றுப் பசளையூட்டப்படும்.

வண்டில்களை மூன்று கிராமத்தவர் விதம் விதமாக அலங்கரிப்பர். சிலர் பிரயாணம் செய்வோர் மழை, வெய்யிலினால் பாதிக்கப்படாதிருக்க கூரையும் அமைத்திருப்பர். கொடும் சித்திரை வெய்யிலின் போது மரநிழலில் நிறுத்தப்பட்டிருக்கும். கூரை வண்டில்களில் மதிய உணவின் பின் சிறிது நேரம் அயர்ந்து உறங்கி எழுதல் சொர்க்கமாகும். இன்றைய குளிரூட்டப்பட்ட அறையில் படுப்பதைவிட அவ்வண்டில்களில் படுப்பது சுகமானது.

வண்டில் மாடுகளின் கழுத்தில் யாவரும் மணிகளைக் கோர்த்துக் கட்டியிருப்பர். அவை வண்டில்களை இழுத்து ஓடும் போது “ஜல்” “ஜல்” என மணியோசை கேட்கும்.

சிலர் எருதுகளின் கொம்புகளை சீவிவிட்டிருப்பர். சிலர் கொம்புகளில் வர்ணங்களும் தீட்டி விட்டிருப்பர்.

எங்களிடம் கடைசியாக இருந்த எருதுகள் இன்றும் என் கண்முன் நிற்கின்றன. வடக்கின் கலப்பினம் ஒன்று சிவப்பு, மற்றது மயிலை. தந்தையார் வேட்டி கட்டி, தலைப்பாகை வைத்து சேர்ட் எதுவும்; போடாது வெறும் மேலுடன் துவரம் கேட்டியால் மெதுவாக எருதுகளை தட்ட அவை பாய்ந்து ஓடும் அழகை மறக்கத்தான் முடியுமா?

 

குறிசுடுதல், நலமடித்தல்

குறிசுடுதலும், நலமடித்தலும் ஒரு கூட்டுமுயற்சியாகவே நடைபெறும். மூன்று கிராமத்தின் இன்பமான பல நிகழ்வுகள் ஞாபகத்தில் வந்தாலும் துன்பமான மிருக வதையான சில சம்பவங்களும் நடைபெற்றன. மனிதன் தனது என்று உறுதிப்படுத்துவதற்காக ஆண், பெண் பேதமின்றி எல்லாமாடுகளுக்கும் அவை கதறக் கதற தமது குறியைச் சுட்டு கொண்டான். நாம்பன்களை அவற்றின் இயற்கையான தேவையை மறுத்து தன் சுயநலத்திற்கு அவற்றிற்கு நலமடித்து துன்புறுத்தினான்.

fghdhb

பயணங்கள்

மூன்று கிராமத்தவரின் பிரதான தரைப்போக்குவரத்துச் சாதனமாக மாட்டுவண்டில்களே இருந்தன. கோவில் திருவிழாக்கள், சந்தை, சிலர் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை ஏற்ற என்று எல்லா இடத்திற்கும் போய்வர வண்டில்களைப் பயன்படுத்தினர். சினிமாக் கொட்டகைகள் தோன்றிய போது முதலில் போகத் தயங்கிய கிராம மக்களிடம், பின்னர் மூன்று, நான்கு குடும்பங்கள் வண்டில் பூட்டி ஒன்றாகச் சென்று படங்களைப் பார்த்து வரும் வழக்கம் உருவாகியது. வண்டில்களின் அடியில் சாக்குகளில் வைக்கல் (ரெடிமேட் உணவு) வைத்துக் கட்டியிருப்பார்கள். கொட்டகைகளில் மாடுகளை அவிட்டுக்கட்டி சாப்பிட வைக்கல் போடுவார்கள். ஆரம்பத்தில் படங்களின் இடையே இரண்டு இடைவேளை விடுதல் சென்று மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க வசதியாக இருந்தது. சிறுவர்களான எமக்கு வண்டில்கட்டி பாட்டுக்கள் பாடியபடி ஒன்றாகச் சினிமா போவதும் திரும்பும் போது வண்டில்களில் சுருண்டு படுத்து நித்திரை கொள்வதும் மிகவும் மகிழ்வான தருணங்களாகும்.

 

வண்டில் சவாரிப் போட்டிகள்

யாழ்ப்பாணத்து முற்றவெளியில் வண்டில் சாவாரிப் போட்டிகள் நடைபெறும். மாடுகளின் தரத்திற்கேற்ப பிரிவு 1, பிரிவு 2, பிரிவு 3 எனப் பிரிவுகளின் கீழ் போட்டிகள். நடாத்தப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபை மேயரினால் பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டிக்காக வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி தீவுப்பகுதியிலிருந்தெல்லாம் பங்குபற்றுவார்கள். மூன்று கிராம மக்களில் ஆர்வம் மிக்கோர் தமது மீசாலை, சாவக்கச்சேரி, கச்சாய் பகுதி உறவிருடன் சேர்ந்து நாம்பன்களைத் தேடி வாங்குதல், நாணயம் பூட்டல், நலமடித்தல், வண்டில்களின்றி நுகங்களில் மட்டும் பூட்டி ஓடப்பழக்குதல், பொருத்தமான சோடிகளை இனம் கண்டு சேர்த்தல் வண்டில்களில் பூட்டி ஓடப்பழக்குதல் எனப் பற்பல வேலைகளைச் செய்வர்.

tvl_mattu_vandi_img

தென்மராட்சி உறவினர் மூன்று கிராமத்திற்கு வந்து தமது உறவினரையும் அழைத்துக் கொண்டு சிறந்த நாம்பன்களைத் தேடி மன்னார், பரப்பாங்கண்டல், உயிலங்குளம் அடம்பன், நாநாட்டான் வட்டக்கண்டல் போன்ற கிராமங்களுக்குச் செல்வர். வந்தாரை வரவேற்பதில் வன்னி மக்கள் தலைசிறந்தவர்கள். அங்கு மூன்று நான்கு நாட்கள் தங்கித்தமக்குப் பிடித்த நாம்பன்களுடன் ஊர் திரும்புவர்.

இவ்வாறு நாம்பன்களை தேடி வன்னி சென்ற எவரின் பணமோ, பொருட்களோ ஒருபோதும் தொலைந்ததும் இல்லை. திருட்டுப் போனதும் இல்லை. ஆயினும் மூன்று கிராம மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கை உடையவர்கள். முற்காலத்தில் ஆண்கள் இப்போதுள்ள நாகரீகமான உள்ளாடைகளை அறியார்கள். கோவணம் கட்டும் பழக்கம் மட்டுமே உடையவர்கள். வன்னியில் இரவு உறங்கச் செல்லு முன் கடன் கழிக்கச் செல்வது  போல தாம் முன்னரே அவதானித்து வைத்த பற்றை மறைவிற்குச் சென்று தமது பணத்தைக் கச்சையில் சுற்றிப் பற்றைக்குள் ஒளித்து வைப்பர். காலையில் கடன் கழிக்கச் செல்வது போன்று சென்று பணத்தை கச்சையுடன் எடுத்துக் கட்டிக்கொள்வார்கள். மாட்டுச் சவாரிப் போட்டியிலும் போட்டிகள் மட்டுமல்ல பொறாமை, பழிதீர்த்தல் முதலிய தீய நடத்தைகளும் காணப்பட்டன. மீசாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பாரின் சோகக் கதை அந்நாளில் பிரபலம் வாய்ந்தது. சவாரிக்கார வேலர் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று யாழ் மேயரிடம் (சாம்சபாபதி என்று நினைவு) பரிசு பெற்று விட்டார். மூன்று முறையும் தோற்றுப்போன ஒரு குழு வேலரை போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கத் தீர்மானித்தது. வேலரின் நண்பர் ஒருவரையே விலைக்கு வாங்கியது. வேலர் மீசாலைக்கு, வரும் வழியில் ஒரிடத்தில் இறங்கி கள் குடிப்பது வழக்கம். இவ்வாறு அவர் கள் அருந்திக் கொண்டு இருக்கும் போது நண்பர் போல நடித்த, வேலரின் புகழை விரும்பாத அந்தக் கையாள் வண்டிலின் ஒரு பக்க அச்சாணியை வேலர் அறியாது கழற்றி விட்டார். கள் மயக்கத்திலிருந்த வேலர் அச்சாணிகளை அவதானிக்கவில்லை. மாடுகளை பூட்டி வால்களில் சிறிது முறுக்கி விட்டார். சவாரிமாடுகள் அல்லவா? மீசாலையிலுள்ள வேலரின் வீடுவரை செலுத்துவாரெதுகுமின்றி வேலரின் நிலையை அறியாது ஓடிவந்து சேர்ந்தன. அச்சாணி இல்லாததால் ஒருபக்கச் சில்லு வழியில் கழன்று ஓடிவிட்டது. வேலரோ கயிற்றின் பிடியை விடவும் இல்லை. ஒரு பக்க அச்சும் வேலரின் தலையும் தேய்பட, மற்றச் சில்லுடன் மாடுகள் வேலரை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டன. படுகாயமடைந்த வேலர் சிகிச்சை பலனின்றி சிறிது காலம் நோயாளியாக இருந்து பின்னர் இறைவனடி சேர்ந்தார். மாட்டுச்சவாரி என்ற வீரவிளையாட்டு வேலரைப் பொறுத்தவரை வினையாகி விட்டது.

 

 

தொடரும்

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

http://www.vanakkamlondon.com/periya-paranthan/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/

http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-10/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-11/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-12/

http://www.vanakkamlondon.com/periya-paranthan-13/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More