செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன் சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன்

சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன் சீனத்திரை முற்றாக அகலுமா?.. வல்லாதிக்கப் பனிப்போர் ஆரம்பமாகுமா? | இதயச்சந்திரன்

4 minutes read

மாவோவின் செஞ்சீனம் ,டெங் சியாவோ பிங்கின் பொருளாதாரக் கொள்கையோடு நிறம் மாறிவிட்டது. தற்போது அந்நாடு ஆசியச் சந்தையை மட்டுமல்ல, உலகச் சந்தையையே வளைத்துப் போடும் வல்லமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) அளவினையும் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது,  மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால், சீனா தென் கொரியா ஆசிய நாடுகளே அதிக நன்மையடைகின்றன. இருப்பினும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்கத்தடை சீனாவையோ அல்லது இந்தியாவையோ பாதிக்கவில்லை.
நட்டத்தில் இயங்கியவாறு, பாதீட்டில் தங்கியிருக்கும் மின்சாரசபையையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் கொண்ட இலங்கை போன்ற நாடுகளே எண்ணெய்த் தடையால் பெரிதும் பாதிப்புறுகின்றன.

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிந்தாலும், உள்நாட்டில் பெட்ரோல்,டீசல், மண்ணெண்ணையின் விலை குறைவதில்லை. உலகமே சரிந்தாலும், இங்கு ‘உயர்வது’ இறங்காது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கணிசமான மக்கள் மீது, விலை உயர்வும் வரிச் சுமைகளும் அழுத்திக் கொண்டுதானிருக்கின்றன.
ranil-a
தேர்தல் பிரச்சார காலத்திலும், ஆட்சி கைமாறிய பின்னரும், பரவலாகப் பேசப்படும் பூகோள அரசியல் விவகாரம் ஒன்றினைப் பற்றி இப்பத்தியில் விவாதிக்கலாம்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் சீனாவின் வகிபாகத்தை நிறுத்துவோமென இரணில் விக்கிரமசிங்க கூறியதாக சொல்லப்படும் செய்தி, சர்வதேச மூலோபாய ஆய்வு மையங்கள் வெளியிடும் கட்டுரைகளில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. சீனாவை அப்புறப்படுத்த புதிய ஆட்சியாளர் தயாராக இருக்கின்றார்கள் என்கிற செய்தி, பக்கத்து நாட்டிற்கும் மேற்குலகின் நிதிமூலதன நிறுவனங்களுக்கும் மகிழ்வினைக் கொடுத்தது.

அனைத்துலக நாணய நிதியத்தைவிட அதிக வட்டிக்கு கடன் வழங்கும் சீன எக்ஸிம் (EXIM ) வங்கி தேவையா? என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்ல, மகிந்த ராஜபக்ச மீதான கோபம் சீனாவின் மீதும் திரும்பியது.

ஆனாலும் தேர்தல் முடிந்ததும், அதிகாரம் -ஆட்சி என்று வந்துவிட்டால், சீனாவோடும் பேசத்தான் வேண்டும் என்கிற நடைமுறை உண்மையை இரணில் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனாவால் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட முதலீடுகளை, எழுந்தமானமாக தூக்கி எறிந்துவிட முடியாது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்திப்பணிகளை விரும்பினால் நிறுத்தலாம். ஒரு சில பெரிய ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏனையவை நிறுவனங்களுக்கிடையே உருவாகியவை. இவை யாவும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்தியாவும் மேற்குலகமும் கவலைப்படும் விடயம் வேறு வகையானது.

அதாவது சீனாவுடன் மிகநெருக்கமான பொருண்மிய- இராஜதந்திர உறவினைப் பலப்படுத்தும் மகிந்த அரசு, எதிர்காலத்தில் பலுச்சிஸ்தானிலுள்ள குவாடர் (kuwadar ) துறைமுக நிர்வாகத்தினை, 2013 பெப்பிரவரி மாதம் சீனாவின் அரச சார்பு நிறுவனமான சைனா ஓவசீஸ் போர்ட் ஹோல்டிங் கம்பனிக்கு (COPHC) சிங்கப்பூர் துறைமுக அதிகாரசபையிடமிருந்து கைமாற்றியது போல, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினையும், கொழும்பு கொள்கலன் துறைமுகத்தினையும் சீனக் கொம்பனிகளுக்கு மகிந்த அரசு வழங்கிவிடும் என்கிற சந்தேகம் இவ்விரு வல்லரசுச் சக்திகளுக்கும் இருந்தது.

ஆகவே ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலமே இதனைத் தடுத்து நிறுத்தலாம் என்கிற முடிவிற்கு இச் சக்திகள் வந்திருக்கின்றன.

அதேபோன்று சீனாவின் பாரிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினை சீனாவின் அரச சார்பு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நிகழ்கின்றது என்கிற செய்தியும் மேற்குலக- இந்திய அணிக்கு உவப்பானதாக இல்லை.

அத்தோடு சீனாவின் கடல்வழிப்பட்டுப்பாதைத் திட்டத்திற்கு இராஜதந்திர ரீதியாக மகிந்த அரசு அங்கீகாரம் வழங்கிய முதன்மைச் செய்தி,  ஆசிய- பசுபிக் பிவோட் மற்றும் கிழக்கு நோக்கிய திட்டம் கொண்ட எதிரணிக்கு சவாலாக இருந்திருக்கிறது.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில், பாரிய முதலீட்டின்  ஊடாக துறைமுகங்களைக் கையகப்படுத்தும் சீனாவின் நகர்வு, மத்தியகிழக்கிலிருந்து பெறப்படும் 60 சதவீதமான மசகு எண்ணெய் , சோமாலியாக் கடற்கொள்ளையர்களின் இடையூறு இன்றி  சீராக வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஆனாலும் அதனை மேற்குலகமோ அல்லது இந்தியாவோ நம்பவில்லை.

ஆட்சியை மாற்றினால் ஆசியப்பெரும் வல்லரசின் ஆதிக்கம் இலங்கையில் குறையும் என்கிற நோக்கத்தோடு சில காய்நகர்த்தல்கள் நடந்திருக்கின்றன. இதில் இந்தியாவின் நேரடிப்பங்களிப்பு பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. புதிய எதிரணிக்கு ஆதரவு வழங்கி, இருப்பவரே மீண்டும் ஆட்சியைப்பிடித்தால், சீன-இலங்கை நட்பு மேலும் இறுகிவிடும் என்கிற அச்சம் இந்திய தென் வளாகத்தினருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
china-sri-lanka-21
மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன் இந்தியா மேற்கொள்ளும் சில துரித நடவடிக்கைகள் அதன் தேர்தல்காலத்து மௌனத்தைப் புரிய வைக்கின்றன.
இலங்கையுடன் பொருளாதார உறவினைப் பலப்படுத்த வேண்டுமென்கிறார் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி. புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை டெல்லிக்கு வருமாறு வசந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.

இருப்பினும், ஜி.எல்.பீரிசின் ஊடாக முயற்சிக்கப்பட்ட  சீபா (CEPA ) ஒப்பந்தம் இனிச் சாத்தியமில்லை எனத் தெரிந்தும், நிதிப்பற்றாக்குறையால் முன்பு கைவிடப்பட்ட துறைமுகங்களையும் , திருக்கோணமலையில் நிறுவப்படவிருக்கும் பாரிய கனரக தொழிற் பேட்டையையும் தமது ஆளுகைக்குள் கொண்டுவர இந்தியா விரைந்து செயற்படும் போல் தெரிகிறது.

இவைதவிர இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது 80 களின் ஆரம்பத்திலிருந்த, இலங்கை குறித்தான அமெரிக்க- இந்திய ஆதிக்கப்பனிப்போர்  மீண்டும் உயிர்பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது.

எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் தேசிய இனங்களின் வாக்குகள் இத் தேர்தலில் முக்கிய பங்கினை வகித்திருக்கிறது. இதனை இந்தியாவும் மேற்குலகமும் புரிந்து கொள்ளும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தச் சட்டமே நீடித்த நிவாரணி என்று இந்தியா சொல்லும்போது, அமெரிக்கா தீர்வு குறித்துப்பேசுவதில்லை.

விசாரணை ஒன்றின் ஊடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் (?)நல்லிணக்கமும், நல்லாட்சியும் ஏற்படும் என்பதுதான் அமெரிக்காவின் நேற்றுவரையான நிலைப்பாடு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து, மைத்திரி ஆட்சி பலமடைந்தால், இதே நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருக்குமா? என்கிற கேள்வி எழாமலில்லை.
நிரந்தரத் தீர்வு பற்றி தீவிரமாகப்பேசும் புலம் பெயர் அமைப்புக்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க ,மேற்குலகம் முற்படலாம் என்பது குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த தேர்தலில்கூட, போட்டியிட்ட இரண்டு பிரதான அணிகளும் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வாய் திறக்கவில்லை. இதுவே இந்நாட்டின் பிரதான முரண்பாடாக தேசிய இனப் பிரச்சினை இருக்கிறது என்பதனை நிறுவுகிறது.

அதேபோல் இலாபத்தை மட்டுமே குறியாகக்கொண்ட, உலகமயமாதலின் சந்தைப் பெருச்சாளிகள் இப்படியொரு பகைமுரண் நிலை இருப்பது போல் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
போர்க்குற்றவாளி தண்டிக்கப்பட்டால் நல்லிணக்கம் வந்துவிடுமென்றும், நிகழ்கால ஊழல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டால் மீட்பரின் இராஜ்ஜியம் நிலைநாட்டப்படுமென்றும் கூறுவார்கள்.

இருப்பினும் அடுத்த 100 நாட்களுக்குள் அதிசயங்கள் எதுவும்  நிகழ்ந்து விடப்போவதில்லை. ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்புலத்தில் தொழிற்பட்ட முக்கிய காரணிகள் மெதுவாக வெளிவரத் தொடங்கும்.

 

– இதயச்சந்திரன் –

நன்றி | வீரகேசரி
18/1/2015

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More