புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை”- ‘காக்கா முட்டை’ மணிகண்டன்

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை”- ‘காக்கா முட்டை’ மணிகண்டன்

8 minutes read
“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

 ” ‘காக்கா முட்டை’யில் பீட்சா சாப்பிட ஆசை, ‘ஆண்டவன் கட்டளை’யில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு போக ஆசை, ‘குற்றமே தண்டனை’யில் கண்களைச் சரிசெய்ய ஆசை… இப்படி ‘கடைசி விவசாயி’யில் குலதெய்வத்துக்கு ஒரு மரக்கால் நெல் வைத்து சாமி கும்பிட ஆசை!’’ – தன் முந்தைய படங்களைப் பற்றியும், ‘கடைசி விவசாயி’ பற்றியும் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் மணிகண்டன். ‘

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“ ‘கடைசி விவசாயி’ எப்போது உருவானது?”

“ ‘காக்கா முட்டை’யைத் திரைப்பட விழாவுக்கு அனுப்பும்போதுதான் ‘கடைசி விவசாயி’ கதையை எழுதினேன். தென்தமிழகத்துல ஒரு விவசாயிக்கு நடந்த ஒரு சின்ன சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனா, அந்தச் சமயத்துல விவசாயப் பிரச்னையைப் பற்றி எந்த மீடியாவும் பெருசா பேசல. அதனால படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. தவிர, நான் சொன்ன பட்ஜெட்டுக்கு எந்தத் தயாரிப்பாளரும் உடன்படலை. ஓகே சொன்ன தயாரிப்பாளர்களும், ‘அந்த விவசாயி கதாபாத்திரத்துல பெரிய ஹீரோவை வயசான தோற்றத்துல நடிக்க வைக்கலாம்’னு சொன்னாங்க. இப்படிச் சில காரணங்களால படம் தள்ளிப்போயிட்டே இருந்தது. இதுக்கு நடுவுலதான் ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களை முடிச்சேன். படமும் ஹிட். இதனால ‘கடைசி விவசாயி’ படத்தைப் பெரிய ஹீரோக்களை வெச்சு மூவ் பண்ணச் சொல்லி, சில தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்தாங்க. வேற வழியில்லாம, நானே படத்தைத் தயாரிக்கிறேன்.”

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“படத்துக்காக என்னென்ன வொர்க் பண்ணியிருக்கீங்க?”

“இப்போ இருக்கிற கிராமங்களுடைய சூழல் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க உசிலம்பட்டியைச் சுத்தி இருக்கிற 150 ஊர்களுக்குப் போனேன். அந்தத் தேடலில் நிறைய தெரிஞ்சுகிட்டேன். அதைக் கதையிலும் கொண்டுவர நினைச்சேன். விவசாயப் பிரச்னை தீர்ந்துட்டா, தமிழ்நாடு நல்லா இருக்குமான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, இப்போ இருக்கிற சூழல்ல அதைத் தாண்டிப் பல பிரச்னைகள் இருக்கு. டெக்னாலஜி வளர்ச்சியால நிறைய சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கு.

நான் பார்த்த வரைக்கும் அங்கே இருக்கிற எல்லா விவசாயிகளும் கரிசல்காட்டு விவசாயிகள்தான். நதிகள் கிடையாது. வானம் பார்த்து மழை வந்தபிறகு கண்மாய் நிரம்பியதும் பழைமையான முறையில விவசாயம் பண்றவங்க. இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த அந்த ஊர் மக்களையே படத்துல நடிக்க வைக்க முடிவு பண்ணினேன். முக்கியமான மூணு கதாபாத்திரங்கள் தவிர, ‘கடைசி விவசாயி’ல நடிச்ச எல்லோருமே கிராமத்து மனிதர்கள்தான். டப்பிங் கிடையாது. எல்லாமே லைவ் ரெக்கார்டிங்தான். கிராமங்களிலேயே தங்கி ரொம்பப் பொறுமையாதான் ஷூட்டிங் நடத்தினேன். இதுவரை நான் இயக்கிய படங்கள்ல, இதுதான் பெரிய பட்ஜெட்ல உருவாகிட்டிருக்கு. செட் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்குப் போட்டிருக்கோம்.

“விவசாயிகளின் முக்கியமான பிரச்னைகள்னு எதைக் கருதுகிறீர்கள்?”

“பணம் கொடுக்கிறதோ, கடனை அடைக்கிறதோ மட்டுமே விவசாயிக்கு வாழ்றதுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காது. மாட்டு வண்டியில விவசாயம் செய்றவனுக்குத் தச்சன், டிராக்டர்ல உழுறவனுக்கு டிராக்டர், பயிரைப் பாதுகாக்க மருந்து, விதை… இப்படி விவசாயிக்கு நிறைய தேவைகள் இருக்கு. இதுதவிர, கந்துவட்டிப் பிரச்னைகள் வேற! இதையெல்லாம் தாண்டி ஒருத்தன் விவசாயம் பண்ணணும்னு நினைச்சா, நாட்டு விதைகளை வெச்சு விவசாயம் பண்ணுன காலம் போய், இப்போ எல்லாமே ஹைபிரிட்டா மாறிடுச்சு. சாதாரண மனிதனுக்குக் கிடைக்கிற அடிப்படை வசதிகள்கூட இப்போ இருக்கிற கிராமங்கள்ல கிடைக்கிற தில்லை. சுருக்கமா சொன்னா, சினிமாவுல காட்டுறமாதிரியான கிராமங்கள் இப்போ இல்லை.

பொதுவா ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குலதெய்வம், அதை வழிபடுறதுக்கு ஒரு முறை இருக்கும். ஒரு மரக்கால் நெல்லைப் படைச்சு சாமி கும்பிடணும். அந்த நெல்லை அந்தக் குடும்பத்தைச் சார்ந்த மூத்த விவசாயிதான் எடுத்துக் கொடுக்கணும். அந்தச் சமயத்துலதான் ஊர் மக்களுக்கு விவசாயம் பற்றியும், மொத்த ஊருலேயும் 75 வயது முதியவர் ஒருத்தர் மட்டும்தான் விவசாயம் பண்ணிக்கிட்டு வர்றார்னும் தெரியவருது. அவர்தான் முக்கிய கதாபாத்திரம். தண்ணியே இல்லைன்னாலும், கொஞ்சமா விவசாயம் செஞ்சு வாழ்ந்து வர்றவர். இந்த மாதிரியான சூழலில் ஏற்படுற பிரச்னைகள்தான் கதை. தவிர ஒரு கிராமம், அங்கே இருக்கிற மனிதர்கள், அவங்களுடைய நம்பிக்கைகளும் கதையோடு வரும். நகரங்கள்ல நாம எவ்வளவு முன்னேறி யிருந்தாலும், கிராமங்கள்ல இயற்கையோடு ஒன்றி வாழத்தான் நமக்கு ஆசை இருக்கும். அந்த உணர்வை ‘கடைசி விவசாயி’ கொடுக்கும்.”

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“கமர்ஷியலும் கலைத்தன்மையும் இணைந்த படமா இது?” 

“என் படங்கள்ல கண்டிப்பா கமர்ஷியல் இருக்கும். படத்தை எல்லோரும் வந்து பார்க்கணும், வணிகரீதியா லாபம் வரணும். டிவி-யில போடும்போது மக்கள் அதை விரும்பிப் பார்க்கணும். என் படங்கள்ல பாட்டு, சண்டைக் காட்சிகள் இல்லாததனால அதை வேற கோணத்துல பார்க்குறாங்க. ‘காக்கா முட்டை’ படம் வசூல் ரீதியா வெற்றிபெற்ற பிறகுதான், கமர்ஷியல் படமா ஏத்துக்கிட்டாங்க. அந்தவகையில, ‘கடைசி விவசாயி’ திரைக்கதை பரபரப்பாதான் இருக்கும். அதேநேரத்தில் முக்கியமான விஷயத்தைப் பேசும் படமாகவும் இருக்கும்”

“விஜய் சேதுபதிக்கு என்ன ரோல்?”

“அந்தப் பெரியவரோட சொந்தக்காரப் பையனா வர்றார், விஜய் சேதுபதி. பெரியவர் பெயர் மாயாண்டி, விஜய் சேதுபதி பெயர் ராமையா. ரொம்பச் சின்ன கேரக்டர்லதான் நடிச்சிருக்கார். கோயில் கோயிலா சுத்திக்கிட்டி ருக்கிற முருக பக்தர். நெடுஞ்சாலையில பயணிக்கும்போது கண்டிப்பா இந்த மாதிரியான ஆள்களைப் பார்த்திருப்பீங்க. சமூகம் அவங்களை மனநிலை பாதிக்கப்பட்டவன்னு சொல்லும். ‘நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ’ன்னு ஒரு ஓரமா உட்கார்ந்து, உலகம் இயங்குறதைப் பார்த்துட்டு, அவங்க விருப்பத்துக்கு வாழ்றவங்க அவங்க. அப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கிறார் விஜய் சேதுபதி. கண்டிப்பா, பேசும்படியான கேரக்டர்.”

“குறும்பட இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே விஜய் சேதுபதிகூட இருக்கீங்க. அவரோட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?”

“விஜய் சேதுபதி ஒரு அபூர்வமான மனிதர். நான் எடுத்த ‘விண்ட்’ குறும்படத்துல தான்ரெண்டு பேரும் நெருக்கமானோம். நம்முடைய வாழ்க்கையில எப்போவும் ஒரு கை மட்டும் நம்மை விடாதுன்னு தோணும்ல… எனக்கு விஜய் சேதுபதி அப்படியான ஒரு ஆள். சரியான நேரத்துல எனக்குத் துணையா இருந்தார். அவர் எவ்வளவு கோடி சம்பளம் வாங்கினாலும், நான் எவ்வளவு நல்ல படங்களை இயக்கினாலும், குறும்பட காலத்துல எங்க நட்பு எப்படி இருந்ததோ, அப்படியேதான் எப்போவும் இருக்கும். என் படத்துல அவர் நடிக்கும்போது கால்ஷீட், அக்ரிமென்ட்லாம் போட்டதே இல்லை.”

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“பெரியவர் கேரக்டர்ல யார் நடிச்சிருக்காங்க?” 

“விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லாண்டிங்கிறவர் நடிச்சிருக்கார். இந்த கேரக்டருக்காக பல பேருக்கு ஆடிஷன் வெச்சோம். இவர்தான் அந்தக் கேரக்டருக்காகவே பிறந்தவர் மாதிரி இருந்தார். இயல்பா நடிச்சிருக்கார். ஒரு இயக்குநரா, இவர் நடிப்பைப் பார்த்துப் பல இடத்துல ஆச்சர்யப்பட்டிருக்கேன்.”

“உங்க படங்களுக்கு நீங்களே ஒளிப்பதிவு பண்ண என்ன காரணம்?”

“ஒரு இயக்குநர் எழுத்துல நினைச்சதைத் திரையிலும் கொண்டுவர நினைப்பார். அதனாலதான் நானே ஒளிப்பதிவு பண்ணினேன். தவிர, நான் முன்னாடி ஒளிப்பதிவுதான் பண்ணிக்கிட்டிருந்தேன். அதனால ஒளிப்பதிவும் சுலபமாதான் இருக்கும்.”

“யோகி பாபுவும் உங்ககூட ரொம்ப வருடமா டிராவல் பண்ணிக்கிட்டு வர்றார். இந்தப் படத்துல அவருக்கு என்ன கேரக்டர்?”

“15 ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற ஒருத்தரோட மகனா நடிச்சிருக்கார். நான் அவரை ஒரு காமெடியனா பார்க்கல; ஏன்னா, காமெடியையும் மீறி அவர்கிட்ட நிறைய விஷயங்கள் இருக்கு. எப்போவுமே எனக்குப் போன் பண்ணி, ‘உங்க படத்துல ஏதாவது ஒரு ரோல்ல நடிக்கணும்’னு கேட்பார். ‘குற்றமே தண்டனை’ படத்துல அவருக்கு நான் கேரக்டரே வைக்கல. வலுக்கட்டாயமா வந்து நடிச்சுக் கொடுத்தார். அவரை ஹீரோவா வெச்சுப் படம் பண்ணணும்னு நினைச்சிருக்கேன். அவருக்கும் அது தெரியும்.”

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“இளையராஜாவின் இசை…?”

“பொதுவா நான் படத்தை முடிச்சுட்டுதான், இசையமைப்பாளரைச் சந்திப்பேன். இந்தப் படத்தை ராஜா சாருக்குப் போட்டுக் காட்டியதும், அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததா சொன்னார். ஊர் மக்களுடைய சத்தங்களைக் கேட்கும்போது உற்சாகமாகிட்டார். சிங்க் சவுண்டு பண்றதெல்லாம் முன்னாடிதான் கஷ்டமா இருந்தது. இப்போ டெக்னாலஜி வளர்ந்ததனால எல்லாமே ரொம்ப ஈஸியாகிடுச்சு. கிராமத்து மக்களுடைய உடல்மொழி, அவங்க பேசுறது, அங்கு நடந்த சில உண்மைச் சம்பவங்கள்னு எல்லாத்தையும் ராஜா சார் ரொம்பவே ரசிச்சார். அந்த சந்தோஷத்தோடயே கம்போஸிங்கையும் முடிச்சுட்டார்.”

“இப்போ வெளிவர்ற அரசியல் படங்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

“எல்லோரும் அவங்க கருத்துகளைத் தெரிவிக்கிறது நல்லதுதான். இப்போ இருக்கிற சமூகம் அவரவர் சொந்தக் கருத்துகளை உலகத்துக்கு நேரடியா சொல்ற அளவுக்குச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. ஆரம்பக்கட்டம் இது. அதனால கொஞ்சம் கசகசன்னு இருக்கு. டேட்டாவுடைய விலை குறைந்து, டெக்னாலஜி அதிகமா வளர்ந்ததுதான் இதுக்குக் காரணம். இதை நான் ஆரோக்கியமானதாதான் பார்க்கிறேன்.”

“நலன்குமாரசாமியுடனான நட்பு பற்றி?”

“விஜய் சேதுபதி அளவுக்கு நலன் எனக்கு நெருங்கிய நண்பன். ‘கடைசி விவசாயி’ படம் சாத்தியமானதுக்கு இவங்க ரெண்டுபேரும்தான் முக்கிய காரணம். இந்தப் படம் பண்றதுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டது. எப்படியாவது பண்ணணும்னு உறுதியா இருந்தேன். என்னுடைய மற்ற படங்களைத் தயாரிக்க பலபேர் முன்வந்தாங்க. இந்தப் படத்துக்கு அப்படி அமையல. ரொம்ப மன உளைச்சல்ல இருந்தேன். இவங்க ரெண்டுபேரும்தான் பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்குக் கதையைச் சொல்ல ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. பெரிய ஹீரோக்களை நடிக்க வைக்கலாம்னு முடிவெடுத்து, கிட்டத்தட்ட எல்லாமே ஓகே ஆகிடுச்சு. ஆனா, எனக்கு மனசு கேட்கல. அப்போ இவங்க ரெண்டுபேரும், ‘என்ன பண்ண நினைக்கிறீங்க’ன்னு கேட்டாங்க. ஓப்பனா சொன்னேன். தைரியம் சொல்லி எனக்குத் துணையா இருந்தாங்க. என் கதைகளைப் பற்றி நலன்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். நலன் மாதிரியே அவங்க அம்மாவும் எனக்கு பெஸ்ட் ஃபிரெண்டு. அவங்க விமர்சனம் நல்லாருக்கும். என்னைச் சுத்தி நலன் மாதிரி 15 பேர் இருக்காங்க.”

“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை!”

“ஆனந்த் அண்ணாமலை, அனுசரண் இருவரும் உங்களுக்கு நெருக்கமானவர்களா?”

“கதிரை வைத்து ஒரு படம் பண்ணச் சொல்லி அவர் அப்பா கேட்டார். கதிரைத் திரையில் வெளிப்படுத்துற விதம் வேற மாதிரி இருக்கணும்னு நினைச்சேன். நடிக்கிறதுக்கும் ஸ்கோப் இருக்கிற மாதிரி ‘கிருமி’
படக் கதையை ரெடி பண்ணினேன். அப்போ இயக்குநர் அனுசரண் நகரத்துல இருந்தார். ஒரு படத்தை இயக்குற அளவுக்குத் திறமையான நபர். அதனால, அவரையே இயக்க வெச்சேன். ‘பன்னிக்குட்டி’ ரவிமுருகையாவுடைய கதை.
நான் பண்றதுக்காக மூணு வருடங்களுக்கு முன்னாடி வாங்கிட்டேன். கிராமத்துல நடக்குற காமெடிப் படம். ‘கடைசி விவசாயி’ வேலைகளால இந்தப் படம் தள்ளிப்போயிடுச்சு. அதனால, அனுசரண் பண்ணினார். ஆனந்த் அண்ணமலை ஒரு எழுத்தாளரா எனக்கு நெருங்கிய நண்பர். என்னோட எழுத்திலும் பங்குகொள்வார். என் படங்களுடைய திரைக்கதையை எப்போதும் அவர்தான் ஃபைன் டியூன் பண்ணுவார்.”

“திரைத்துறையில் நடக்கிற கதைத் திருட்டை எப்படிப் பார்க்கிறீங்க?”

“இது ரொம்ப நாளா இருக்கு. நானேகூட பாதிக்கப்பட்டிருக்கேன். கதை ரெடி பண்ற அளவுக்கு இங்கே நிறைய பேருக்கு அறிவு இல்லை. அதனால மத்தவங்க கதையைத் திருடுறாங்க. ஆனா, இது தொடர்ந்து நடக்க வாய்ப்பில்லை. ஏன்னா, எழுத்தாளர்களும் இயக்குநர்களும் விழிப்புணர்வோடு இருக்காங்க. இனி கதைத் திருட்டு கண்டிப்பா குறைஞ்சிடும். ஏன்னா, அந்தத் திருடர்கள் வெளிப்படையா தெரிய ஆரம்பிச்சுட்டாங்க.”

– தார்மிக் லீ, சனா

நன்றி – ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More