உக்ரைனில் தொடரும் போர் , கடற்பகுதிகளில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கப்பல்களில் உணவு, மருந்துப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவை அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற கடல்வழிப் பாதைகளை அமைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
கருங்கடல், அசோவ் கடல் ஆகிய பகுதிகளில் வர்த்தகக் கப்பல்களில் சிக்கியுள்ள ஊழியர்களை வெளியேற்ற பாதுகாப்பான கடல்வழிப் பாதை அமைக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கப்பல் அமைப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் அதில் சிறிய முன்னேற்றமே காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனியக் கரையோரத்தில் இருந்த 5 கப்பல்கள், ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 கப்பல்கள் அந்தப் பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனியப் போர் காரணமாக அவற்றில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.