பால்வீதியின் நடுவே இருப்பதாக கூறப்படும் இராட்சத கருந்துளையை விண்வெளி வீரர்கள் படமெடுத்துள்ளனர்.
அவர்களின் பல்லாண்டு ஆய்வின் பலனாக அது சாத்தியமாகியுள்ளது. அந்தக் கருந்துளை ‘சகிட்டாரியஸ் ஏ ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பெரியது.
கருந்துளை சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் துளையைச் சுற்றிப் பளிச்சென்று மிளிரும் அதிகமான வெப்பவாயுக்களின் உதவியோடு கருந்துளையின் நிழலை அடையாளங்காண முடியும்.
ஒரு இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
நிகழ்வெல்லை என்னும் 8 தொலைநோக்கிகள் அடங்கிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்கிக் கருந்துளையை விண்வெளி வீரர்கள் படமெடுத்தனர்.
இந்த முயற்சியில் 80 அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.
இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கருந்துளைகளின் புகைப்படங்களை பிடிக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த கருந்துளை ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் உள்ளது. இதனால் அவர்களால் படத்தை தெளிவாக பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தனர்.
மேலும் இது கருந்துளையின் முதல் புகைப்படமல்ல. முன்னதாக, இதே குழு 2019இல் 53 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து கருந்துளையின் படத்தை வெளியிட்டது.
நட்சத்திரங்கள் இறக்கும்போது கருந்துளைகள் உருவாகின்றன. இதன் ஈர்ப்பு விசை மிக அதிகமாகும். ஒளி உட்பட எதுவும் கருந்துளையில் இருந்து தப்ப முடியாது.