சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர்களின் உதவியுடனே இவர்கள் வெளியேற்றப்பட்டனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “மோதல் நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எங்களது இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்” எனத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கர்களை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் எங்களுடைய நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம். சூடானில் மீதமுள்ள அமெரிக்கர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பணிகள் குறித்து எனது குழுவினரிடம் இருந்து சரியான முறையில் தகவல்கள் கிடைக்க பெறுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.