புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா `200 வீடுகளோட செல்லப்பிள்ளையை சுட்டுக்கொன்னுட்டானே பாவி!’ – இறந்த நாயைப் பார்த்து கதறிய மக்கள்

`200 வீடுகளோட செல்லப்பிள்ளையை சுட்டுக்கொன்னுட்டானே பாவி!’ – இறந்த நாயைப் பார்த்து கதறிய மக்கள்

5 minutes read

இந்தச் சூழலிலும், `நாய்’ என்று நாம் அழைத்ததற்கு கோபப்பட்டார்கள். “நாய்னு அதைச் சொல்லாதீங்க சார். அது எங்க காவல் தெய்வம்; எங்க உசிரு. ரமேஷ்னு பேர் சொல்லி கேளுங்க” என்று நம்மைக் கடிந்துகொண்டார்கள்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ் என்னும் நாய்

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ் என்னும் நாய்

 

“எங்க தெருவுல உள்ள 200 வீடுகளுக்குச் செல்லப்பிள்ளையா இருந்தான் ரமேஷ். ஆனா, அவனை அநியாயமா சுட்டுக்கொன்னுட்டானே பாவி. அவனை தூக்குல போடணும்” என்று சுட்டுக்கொல்லப்பட்ட நாய் ஒன்றுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் கூடி, சாலை மறியல் செய்து போராட்டம் நடத்திய சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷை பார்த்து கதறும் மக்கள்

அதில் பல ஆண்களும், பெண்களும் இறந்து கிடந்த நாயைப் பார்த்து கதறி அழுத காட்சி, காண்போரை கண்கலங்கவும், மனம்நெகிழவும் வைத்தது.

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகில் இருக்கிறது, கணக்குப்பிள்ளை தெரு. இந்தத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அத்தனை பேரின் பாசத்தையும், பரிவையும் பெற்ற ரமேஷ் என்ற நாட்டுநாயை, அதே பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர், நேற்று மாலை சுட்டுக்கொன்றதாக கூறி, ஒட்டுமொத்த மக்களும் குடும்பத்தில் ஒருத்தரை இழந்ததுபோல் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ்
“பாலுவை கைது பண்ணி தூக்குல போடுங்க. ஏன் அவர் எங்க ரமேஷை கொன்னார்னு காரணம் தெரியணும். அதுவரை, ரமேஷை அடக்கம் பண்ணாமல், தொடர்போராட்டம் நடத்துவோம்” என்று மக்கள் ஆவேசம் காட்டினார்கள். இதனால், சம்பந்தபட்ட பாலு என்பவரை வெங்கமேடு காவல்நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்துப்போயிருக்கிறார்கள்.

இந்தச் சூழலிலும், `நாய்’ என்று நாம் அழைத்ததற்கு கோபப்பட்டார்கள். “நாய்னு அதைச் சொல்லாதீங்க சார். அது எங்க காவல் தெய்வம்; எங்க உசிரு. ரமேஷ்னு பேர் சொல்லி கேளுங்க” என்று நம்மைக் கடிந்துகொண்டார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் பேசினோம்.

“ரமேஷ் நாட்டுவகையைச் சேர்ந்தவன்தான். குட்டியா இருந்தப்ப இருந்தே இங்கதான் இருக்கான். தெரு முனையில படுத்திருப்பான். ஆனா, எல்லாருக்கும் செல்லமா இருப்பான். எல்லோரது வீடுகள்லயும் உரிமையா வலம் வருவான். 200 வீடுகளிலும் உள்ள அத்தனை பேரின் முகங்களும் அவனுக்கு அத்துப்படி. அவர்களைத் தவிர, வேறு யாராவது புதிய வெளிநபர்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டால் போதும்.

கொலை செய்வரை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் நடத்தியபோது..

கொலை செய்வரை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் நடத்தியபோது..ஆக்ரோஷமாக குரைத்து அவர்களை விரட்டிக்கொண்டு போய், தெருவைத்தாண்டி விட்டுட்டு வருவான். எந்த வீடுகளையும் இரவு நேரங்கள்ல பூட்டமாட்டோம். வண்டி வாகனங்களை ரோட்டுலகூட துணிச்சலா நிப்பாட்டி வைப்போம். அந்த அளவுக்கு நாலஞ்சு வருஷமா திருட்டுப்பயமே இல்லாம இருந்தோம். ஊரை காவல்காக்குற அய்யனாரு மாதிரி, ரமேஷ் எங்களை பாதுகாத்தான். இங்க இருக்குற பெண்கள் எல்லாம் கரூர் டவுன்ல உள்ள டெக்ஸ்டைல்ஸ்களுக்கு வேலைக்குப் போயிட்டு, நைட் ஷிப்ட் முடிச்சுட்டு லேட்டாதான் வருவாங்க. அவங்களை ரமேஷ்தான் கூட போய், அவங்கங்க வீடுகள்ல பத்திரமா விட்டுட்டு வருவான். தினமும் ஒவ்வொரு வீட்டுல போய் முறை வச்சு சாப்பிடுவான்.

பிள்ளைங்களுக்கு பால் இல்லைன்னாகூட கலங்கமாட்டோம். ரமேஷுக்கு பால் இல்லைன்னா, கலங்கிப்போயிருவோம். அப்படி அவன் எங்க குடும்பத்தோடு குடும்பமா, உசிரோடு உசிரா கலந்து இருந்தான் சார். அவன் கெட்டவங்களுக்குதான் கெட்டவன். அவன்மேல பிரியமா பேசுனோம்னா, சடுதியில நாம நல்லவங்களா இருந்தா, ஈஸியா ஒட்டிக்குவான். அவனைப்போய் அந்தப் பாவி நெஞ்சுல இரக்கமே இல்லாம சுட்டுக்கொன்னுட்டானே. எங்க தெருவுல கடைசி வீட்டுல இருக்கார் அந்த பாலு. அவரும் டெக்ஸ்லதான் வேலை பார்க்குறார். யாரோடும் அதிகம் பேசமாட்டார். சிரிச்சுபேசி பார்த்ததில்லை.

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ்

அந்தப் பாவிதான், இன்னைக்கு மதியம் எங்க தங்கம் ரமேஷை நடுரோட்டுல வச்சு சுட்டுக்கொன்னுப்போட்டுட்டான். அதைப் பார்த்த, கேள்விப்பட்ட எங்களுக்கு ஈரக்குலையே ஆடிப்போயிட்டு. அந்த ஆளை தூக்குல போடணும். எங்க சாமியை அந்த ஆள் ஏன் கொன்னார்னு தெரியணும்.

ரமேஷ் இருந்த பாதுகாப்புல நாங்க இதுவரை போலீஸ் ஸ்டேஷனுக்குகூட போனதில்லை. ஆனா, முதல்முறையா ரமேஷுக்காக போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிச்சிருக்கோம். ரமேஷ் கொலைக்கு தகுந்த நியாயம் கிடைக்கணும். ரமேஷ் உடலை நாளைக்கு தெருவே சேர்ந்து அடக்கம் பண்ணப்போறோம்” என்றார் கண்களில் கண்ணீர் வழிந்தபடி.

சுட்டுக்கொல்லப்பட்ட ரமேஷ்

வெங்கமேடு காவல்நிலையத்தில் பேசினோம். “பாலுவை கைது பண்ணி விசாரித்துக்கொண்டிருக்கிறோம். ரமேஷ் என்ற அந்த நாயை பாலுவுக்கு பிடிக்காது என்கிறார்கள் சிலர். அவர் அந்த நாயை நாடோடி சமூகத்தினரைக் கொண்டு, நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்கள்.

எழுதியவர்: துரை.வேம்பையன்
புகைப்படங்கள்: நா.ராஜமுருகன்
நன்றி- விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More