டெல்லி: உருமாறுவதன் காரணமாக இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. எப்போது உருவாகும் என தெரியாததால் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துவருகிறது.
கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையானதாகவும் சமாளிக்க முடியாததாகவும் இருந்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர்வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், மத்திய அரசின் அறிவியல் தலைமை ஆலோசகர் மருத்துவர் விஜய ராகவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்களும், உலக அளவிலுள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா திரிபுகளை எதிர்பார்த்து வேலை செய்துகொண்டிருக்கிறோம். அந்த திரிபுகளுக்கு எதிராக வேகமாக வினையாற்றவும், முன்னதாக எச்சரிக்கைவிடுக்கவும் முயற்சி செய்துவருகிறோம். அதற்காக தீவிரமான ஆய்வுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் நடைபெற்றுவருகின்றன.
கொரோனா தடுப்பூசிகள் தற்போது கொரோனா திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. புதிய திரிபுகளும் உலகம் முழுவதும் மீண்டும் வரும். இந்தியாவிலும் வரும். புதிய திரிபுகள் முந்தைய கொரோனாவைப் போலவே பரவுகின்றன. புதிய வழிமுறைகள் பரவதற்கான வாய்ப்புகளை இந்த திரிபுகள் கொண்டிருக்கவில்லை.
முந்தைய கொரோனா வைரஸ் பரவிய அதே வழிமுறைகளிலேயே இந்த வைரஸ்கள் பரவுகின்றன. கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. எப்போது மூன்றாவது கட்டம் பரவல் நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நாம் புதிய அலைக்குத் தயாராக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.