சென்னை :தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை, கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில்களை மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
17 பேர் கொண்ட இந்த குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினும் குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஓய்வுபெற்ற நீதிபதி டி.மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கருமுத்து கண்ணன், மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் இணைகின்றனர்.