சென்னை: தமிழ்நாட்டில் ரூ.4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டு தமிழகத்திற்கு 1,450 எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காணொலி காட்சி வாயிலாக தமிழகத்தில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.4,080 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக, மக்கள் நல்வாழ்வு விளங்கி வருகிறது. மக்கள் நல்வாழ்வு என்பது, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள், மனிதவளம் மட்டுமல்லாமல், மாநிலத்தில் வாழும் மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சார்ந்தது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் போன்ற மக்கள் நல்வாழ்விற்கான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரி அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.