மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா ஒரு கேள்வியை எழுப்பினார். தவறாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செயலிகளை தடை செய்யவும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதா? என அவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், சமூக வலைத்தளங்களுக்கு மேலும் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.
குடிமக்களின் நலன் காக்க கடுமையான விதிமுறைகள் வேண்டும் என கூறிய அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றி வந்திருப்பதாக தெரிவித்தார். சமூக வலைத்தள அவதூறுகள் தொடர்பாக மத்திய அரசுக்கு வரும் புகார்கள் தொடர்பாக, மாநில அரசுகளின் விசாரணை ஆய்வுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.