அவுஸ்திரேலிய ரோயல் கடற்படையுடன் இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சுமேதா கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளது. பலம் வாய்ந்த கடற்படைகளுக்கிடையிலான தொடர்புகளையும் இயங்கு நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இக்கப்பல் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினத்தின் நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இக்கப்பலில், இந்திய–அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்திய கொடியேற்ற வைபவமும் இடம்பெற்றது.
தென் கிழக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இக்கடற்படைக் கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ரோந்து கப்பல்களில் ஒன்றாகும். சுதந்திரமான முறையில் பல்வகைமை ஒத்துழைப்புக்களை கடல் சார் ரோந்து நடவடிக்கைகளுக்கு இக்கப்பல் நல்கி வருகிறது.
பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்து– பசுபிக் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு சுமேதா கப்பல் இக்கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.