“தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்”
என்ற பாடல் வரிகள் பெரும்பானாற்றுப்படையில் (252-256) வரிகளில் உள்ளது.
சங்க காலத்தில் உழுது உழைத்து வந்த உழவர்கள், தம் உழைப்பின் மூலம் பெற்ற நெல் அரிசிச் சோற்றுடன், அவர்கள் வீட்டில் வளர்க்கும் பெட்டைக்கோழி பொரியலுடன் விருந்தினருக்கு உண்ணத் தருவார்களாம். சங்க காலத்தில் நம் தமிழர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு முகம் சுளிக்காமல் உணவு வழங்கியுள்ளார்கள்.
அதுபோல மருத நில உழவர்களின் குழந்தைகள் களைப்புற விளையாடிய பின், செவிலிப் பெண்கள் அவர்களுக்குப் பசி தீர பாலூட்டி, அழகான வீட்டிலுள்ள படுக்கையில் படுப்பார்களாம். அசைதலில்லாத குடியிருப்புகள் வளம் நிறைந்த அந்த ஊரில் யாரும் பசியை அறிந்திட மாட்டார்களாம். அந்த ஊரில் தங்கினால், வெண்நெல் சோற்றுடன் பெட்டைக்கோழி பொரியலை உண்ணக் கொடுப்பார்களாம்.
இக்காலத்தில் நாம் மாமிசம் செய்ய நிறைய மசாலாவைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அக்காலத்தில் அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து உண்டார்கள். அந்த வகையில் பெட்டைக்கோழி பொரியலை எவ்வாறு செய்து ருசித்திருப்பார்கள் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கோழி – ½ கிலோ சீரகம் – 1டீஸ்பூன்
பொடித்த மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – 2 இன்ச் அளவு மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு நெய் – 50 மி.லி
கடுகு – சிறிதளவு இளந்தேங்காய்- 100 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு தண்ணீர் – தேவையானஅளவு
செய்முறை :
கடாயில் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சீரகம் சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறுதுண்டுகளாக நறுக்கிய கோழியைக் கழுவி சுத்தம் செய்த பின், வதக்கிய கலவையுடன் கூட உப்பு சேர்த்து நன்கு கலக்கி பிரட்டி வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்த இஞ்சி, மிளகு இளந்தேங்காயைச் சேர்த்து நன்கு பிரட்டவும். போதுமான தண்ணீரைச் சேர்த்து, கோழியை வேக விடவும். கோழி வெந்தவுடன் தண்ணீர் வற்றும் வரை வறுத்து இறக்கவும். சுவையான பெட்டைக் கோழி பொரியல் தயார்.
குறிப்பு :
Ø வேண்டுமெனில் குக்கரிலும் கோழியைச் சமைக்கலாம்.
Ø சங்க காலத்தில் பூண்டு, வெங்காயம் தக்காளியைச் சமையலில் பயன்படுத்தவில்லை.
Ø பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய அதிக உற்பத்திப் பொருளாக உப்பு இருந்தது. ஆனால் உப்பின் விலை நெல்லின் விலை அளவிற்கு இருந்துள்ளது. இப்பொழுது இருக்கும்; விலையை விட ஐந்து மடங்கு இருந்துள்ளது எனலாம்.
Ø 15 ஆம் நூற்றாண்டில் எண்ணெய் அறிமுகமானது. அதுவரை சமையலுக்கு நெய்யைப் பயன்படுத்தியுள்ளனர்.
Ø சோழ பாண்டிய பேரரசர்கள் காலத்தில் எண்ணெய் உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதைக் கல்வெட்டில் காணமுடிகிறது.
தொடரும்…
சமையல் குறிப்பு கலைஞர் பி பிரியா பாஸ்கர்
முன்னைய பகுதிகள்:
http://www.vanakkamlondon.com/sanga-kaala-samaiyal-priya-basker-part-1-07-22-19/