நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியில் புனித செபஸ்தியார் சிலைக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கில் எறியப்பட்ட கல்லினால் அப் பகுதியில் உண்டான பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டானை – புனித செபஸ்தியர் வீதியில் , மாவுலபிட்டி சந்தியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் புனித செபஸ்தியாரின் திருவுருவச்சிலை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கட்டானை மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட வில்லை என்று குறிப்பட்ட கட்டான பொலிஸார் , எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் சி.சி.ரீ.வீ காணொளி காட்சிகள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்தும் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் தற்போது அப் பகுதியில் அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
புகைப்படங்கள் – வீரகேசரி