2
கிளிநொச்சியில் வரட்சி காரணமாக கால்நடைகள் மண்ணை மேய்கின்ற காட்சி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மழை வீழ்ச்சி கிடைக்காமையால் பூ வறண்டு, புழுதியாகக் காணப்படுகின்றது. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எமது சிறப்பு செய்தியாளரின் எடுத்த புகைப்படத்தில் காய்ந்துபோன புல் வேர்களுடன் கால்நடைகள் மண்ணை மேயும் காட்சி பார்ப்பவர்களை உருக்குகின்றது.
இலங்கை தீவின் பல்வேறு பாகங்களிலும் வரட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களும் வரட்சிப் போருக்கு முகம் கொடுத்துள்ளனர். வடக்கில் வரட்சி காரணமாக சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அக்கராயன், கோணாவில், காஞ்சிபரும், தட்டுவான்கொட்டி, பூநகரி, கண்டாவளை, கிளிநொச்சி நகரம், அறிவியல் நகர் போன்ற இடங்களிலும் கடுமையான வரட்சி காணப்படுகின்றது. கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ள நிலையில் நிலையில் குடி நீருக்கு மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுகின்றனர். கரைச்சிப் பிரதேச சபை குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக வரட்சியினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வரட்சியின் கொடுமை அதிகரித்துள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது. வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகைப்படம் மற்றும் செய்தி வணக்கம் லண்டன் சிறப்பு செய்தியாளர்