ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எவர் போட்டியிட்டாலும் ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றினைந்து போட்டியிட்டாலும் இனியொரு போதும் மக்களாணையினை பெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் இம்முறை அரசியல் சூழ்ச்சியினால் ஒருபோதும் ஆட்சியினை கைப்பற்ற முடியாது.
கட்சியின் தலைமைத்துவத்திற்கு மதிப்பளித்தே கட்சியின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் அதே போன்று தலைமைத்துவமும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒருமித்த தன்மை காணப்பட்டால் மாத்திரமே முறையான அரசியல்செயலொழுங்கினை முன்னெடுத்து செல்ல முடியுமென அவர் இதன்போது தெரிவித்தார்.