இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு கோருகின்றோம் என
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பு தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை(30) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்கள்
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
இலங்கையின் 72ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இறுதி யுத்தத்தை நேரடியாக வழிநடாத்திய அப்போதய பாதுகாப்பச் செயலாளர் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.
யுத்த காலத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சென்ற போராளிகள் அல்லாத போராளிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் என்ன நடந்தது என்பது தெரியாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் தேடி அலைந்து கொண்டிருந்கின்றோம்.
இந்நிலையில் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றில் காணாமல் போனவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று சனாதிபதி கூறியுள்ள செய்தி எமக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
யுத்தத்தை நேரடியாக வழிநடத்திய ஒருவர் பொறுப்பற்ற விதமாக சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. யுத்தத்தின் இறுதியில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமைக்கும், சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர் என்ற அடிப்படையில் நேரடியாகப் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.
இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்கள் எப்படி உயிரற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டு அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்பது சட்டம்.
அப்படியிருக்கும்போது பொறுப்பற்ற விதமாக காணாமல் போனவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்ற அவரது கூற்றினை மிகவும்; வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
உறவுகளைத் தொலைத்துவிட்டு கடந்த 10 ஆண்டுகளாக வீதிகளில் இருந்து போராடிவரும் எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுத்தல் என்ற பெயரில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் தலைமைகளின் ஆதரவுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சம்மதமின்றி உருவாக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி என்று அழைக்கப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நாம் நிராகரிக்கின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க ஒரே வழி சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றேயாகும் என்பதனை நாம் பல வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளோம்.
இறுதியாக கடந்த 2019 மார்ச் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், சில அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதெனவும், இவ்விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பாராப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம் எனினும் அக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளின் சம்மதத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நலன்களை முற்றாக பாதிக்கும் விதமாகவும், யுத்த இறுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியை மறுக்கும் முகமாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டமையின் காரணமாகவே யுத்தக் குற்றங்களுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் பொறுப்புக் கூறவேண்டியவரான தற்போதய ஜனாதிபதி பொறுப்பற்ற விதமாக அறிக்கைவிடும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். அதற்காக உடனடியாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பதனை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துவதுடன்
எமது வாழ்வுரிமைகளும், மனித உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் முற்றாக மறுக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் நாம் இன்றும் அடிமைகளாகவே வாழ்கின்றோம். யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த போதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது குடும்பத்திற்குக் கூட நீதி கிடைக்கவில்லை. அந்த வகையில் இலங்கையின் சுதந்திரதினம் என்பது நாம் எமது உரிமைகள் அனைத்தையும் வெள்ளையர்களிடமிருந்து சிங்கள பேரினவாதிகளிடம் இழந்த நாளாகும் இந்நாள் எமக்கு துக்கதினமாகும். எனவே இந்நாளை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து மக்களையும் அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், யுத்தக்குற்றங்கள் மற்றும் இனவழிப்புக் குற்றங்களை விசாரிக்க முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், அவ்விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அன்றி விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகவோ மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியும்
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூக்தினர், பொது அமைப்புக்கள், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள், மனித நேய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், போக்குவரத்துத் துறையினர், தமிழ் மக்கள் பேரவையினர், தமிழர் மரபுரிமைப் பேரவையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரது ஆதரவையும் கோரிநிற்கின்றோம் என தமது அறிக்கையில் குறிப்பிட்டார்கள்