நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.சுகாதார முறையில் தங்களின் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அவர்களுக்கான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
நடமாடும் விற்பனையாளர்களூடாக கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த விசேட வழிகாட்டல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.வீடுகளுக்கு சென்று மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வோருக்கே விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுத்தமான ஆடைகளை அணிந்திருத்தல், பாதணிகளை அணிந்திருந்தல், விற்பனை நடவடிக்கையின் போது முகக்கவசங்களை அணிந்திருத்தல், கைகளுக்கு தொற்று நீக்கிகளை பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பேக்கரி உற்பத்திகளின் போதும், ஏனைய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போதும் உரிய உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் உணவுப்பொருட்களை கடதாசியில் சுற்றி விற்பனை செய்தல் ஆகிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கைகளுக்கு தொற்று நீக்கி பயன்படுத்தி சுத்தப்படுத்தியதன் பின்னர் ஏனைய பொருட்களை தொடுமாறும் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது, பொருட்கொள்வனவு செய்பவர்கள் ஒரு மீட்டர் தூரத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஊரடங்கு காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள விற்பனையாளர்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றாத விற்பனையாளர்களின் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.